கோவில்களில் நடைபெறும் விசேஷங்களின் போது வருங்காலங்களில் அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க கூடுதல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் கடைபிடிக்கப்படும் என வல்லநாட்டில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு பேட்டி.
தூத்துக்குடி மாவட்டத்தின் பல்வேறு கோவில்களில் நடைபெற்றுவரும் திருப்பணிகள் மற்றும் புதிய திட்டங்களை துவக்கிவைத்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கால்நடைத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் ஆய்வு மேற்கொண்டனர்.
இந்த நிலையில் 900 ஆண்டுகள் பழைமையான முறப்பநாடு சொக்கநாதர் மீனாட்சி திருக்கோவில், நவகைலாயங்களில் ஐந்தாவது ஸ்தலமாக விளங்கும் முறப்பநாடு கைலாசநாதர் கோவில்களில் ஆய்வு மேற்கொண்டார்.
தொடர்ந்து வல்லநாடு திருமூலர் திருக்கோவிலில் திருப்பணிகளுக்கான முன்னேற்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் கோவில்களில் செய்யப்படவேண்டிய பணிகள் மற்றும் அதற்கான திட்ட மதிப்பீடு உள்ளிட்டவைகள் குறித்து அதிகாரிகள் மற்றும் கோவில் நிர்வாகத்தினரிடம் கேட்டறிந்தார்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சேகர்பாபு கோவில்களில் புதியதாக தேவைப்படும் பணிகள், திருக்கோவில் ஆக்கிரமிப்பு, திருக்கோவில் வாடகை வருவாய் மற்றும் அர்ச்சகர்கள் நியமனம் குறித்து ஆய்வு செய்யப்பட்டுள்ளது. நவகைலாயங்களில் அடிப்படை வசதி செய்வதற்கான கள ஆய்வு மேற்கொள்ளபட்டுள்ளது.
முதலமைச்சரின் இலக்கு ஆயிரம் ஆண்டுகள் மேலான திருக்கோவில்களை புணரமைப்பு செய்வது மட்டும் தான் என தெரிவித்தார். 3 ஆண்டுகளில் 12 ஆண்டுக்கு ஒருமுறை கும்பாபிஷேகம் நடைபெறவேண்டிய அனைத்து கோவில்களிலும் திருப்பணி செய்து முடிக்கப்படும். திமுக ஆட்சி பொறுப்பேற்ற பின் 2027 திருக்கோவில்களுக்கு திருப்பணிக்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்து சமய அறநிலையத்துறை உருவாக்கப்பட்ட பின்னர் இது போன்று வேகமாக திருக்கோவில்கள் திருப்பணிக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது கிடையாது. வாரத்திற்கு 100 முதல் 150 கோவில்களுக்கு திருப்பணி செய்ய உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது. தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி பகுதியில் நடந்த விபத்து நடந்த கோவில் திருவிழாவிற்காக பொதுப்பணிதுறை வருவாய் துறை அறநிலையத்துறை இணைந்து அமைதிக்கூட்டம் நடத்தபட்டது. அந்த கோவில் அறநிலைதுறையின் முழுமையான கோவில் கிடையாது. அங்கு 18 கிராமங்கள் ஒன்றிணைந்து நடத்தப்பட்ட திருவிழா அதற்கு முழு ஒத்துழைப்பை அறிநிலையதுறை வழங்கியது. வருங்காலங்களில் கோவில் திருவிழாக்களின் போது விபத்து நடைபெறக் கூடாது என முதலமைச்சர் கண்டிப்பான உத்தரவு பிறப்பித்துள்ளார். 3 நாட்களுக்குள் அறநிலையதுறை உள்ளிட்ட வருவாய் துறை, பொதுப்பணித்துறை உள்ளிட்ட பல்வேறு துறை இணைந்து ஆலோசனை நடத்த உள்ளது. கோவில்களில் நடைபெறும் திருப்பணி திருவிழா உள்ளிட்ட விசேசத்தின் போது அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க வரும் காலங்களில் கூடுதலாக முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்படும். நவகைலாயம் நவதிருப்பதி உள்ளிட்ட 64 தொடர் திருக்கோவில்களுக்கு அடிப்படை வசதிகள் மேற்கொள்வதுடன் திருப்பணி செய்து கும்பாபிஷேகம் நடத்த திட்டமிட்பட்டுள்ளது. திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி திருக்கோவிலில் இரண்டு மாதங்களில் கும்பாபிஷேகத்துக்கான திருப்பணிகள் தொடங்கும். திருச்செந்தூரில் பக்தர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் நிறைவேற்றி பக்தர்கள் மகிழ்ச்சியாக சுவாமி தரிசனம் செய்ய முதல்வர் அறிவுறுத்தல் வழங்கியதன் படி அனைத்து ஆக்கபூர்வமான பணிகளும் நடைபெற்று வருகிறது. திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி திருக்கோவில் அனைத்து வசதிகளுடன் கூடிய திருக்கோவில் ஆக மாற்றுவதற்கு அறநிலையத் துறையும் அரசு முயற்சி மேற்கொண்டு வருகிறது என தெரிவித்தார்.
அவருடன் மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், மீன்வளம் மற்றும் மீனவர் நலம் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா, கருங்குளம் ஒன்றிய சேர்மன் கோமதி ராஜேந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


