முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவிலுக்கு நாள்தோறும் பல்வேறு மாவட்டங்கள் மட்டுமல்லாமல் மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய வருகை தருவார்கள்.
இந்த நிலையில் இன்று சென்னை பெருங்குளத்தூரை சேர்ந்த தேவன் ஆதிலட்சுமி தம்பதியினர் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு வருகை தந்து சாமி தரிசனம் செய்துள்ளனர். திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் அருகே உள்ள தூண்டிகை விநாயகர் கோவிலில் தரிசனம் செய்து விட்டு முருகன் கோவிலுக்கு சென்றுள்ளனர்.
அப்போது அங்கு மூன்று மாடுகள் மோதிக்கொண்டிருந்தன. திடீரென எதிர்பாராத நேரத்தில் அதில் ஒரு மாடு ஆதிலட்சுமி மீது வேகமாக மோதியது. இதில் கீழே விழுந்த ஆதிலட்சுமிக்கு தலையில் காயம் ஏற்பட்டது.
உடனடியாக உடன் வந்த கணவர் தேவன் மனைவியை மீட்டு திருச்செந்தூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார்.
இந்த சம்பவம் நடந்த காட்சிகள் அருகே இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ளது. தற்போது இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவில் மற்றும் அதனை சுற்றியுள்ள வளாகங்களில் மாடுகளின் நடமாட்டம் அதிகமாக இருப்பதால் பக்தர்கள் அச்சத்துடனே சென்று வருகின்றனர்.
எனவே கோவில் நிர்வாகம் மற்றும் திருச்செந்தூர் நகராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து மாடுகளை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


