நெல்லை பாளையங்கோட்டை வ.உ.சி மைதானத்தில் 5 வது பொருநை நெல்லை புத்தகத் திருவிழா காலை 10 மணிக்கு துவங்க உள்ளது. திருநெல்வேலி மாவட்ட வருவாய் அலுவலர் ஆ. பெருமாள் வரவேற்கிறார். மாவட்ட ஆட்சி தலைவர் விஷ்ணு தலைமை தாங்குகிறார். புத்தகத் திருவிழாவை துவக்கி வைத்து தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைத் தலைவர் அப்பாவு, போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் ஆகியோர் பேரூரையாற்றுகிறார்கள். நாடளுமன்ற உறுப்பினர் ஞானதிரவியம், மாநகராட்சி மேயர் சரவணன், மாநகராட்சி ஆணையாளர் விஷ்ணு சந்திரன் ஆகியோர் முன்னிலை வகிக்கிறார்கள். சட்டமன்ற உறுப்பினர்கள் பாளையங்கோட்டை அப்துல் வகாப், நாங்குனேரி ரூபி மனோகரன், திருநெல்வேலி நயினார் நாகேந்திரன், அம்பாசமுத்திரம் இசக்கி சுப்பையா, மாவட்ட ஊராட்சி மன்றத் தலைவர் ஜெகதீஸ், பாபாசி தலைவர் வயிரவன், செயலாளர் முருகன் ஆகியோர் வாழ்த்தி பேசுகிறார்கள்.மக்கள் தொடர்பு அலுவலர் ஜெய அருள்பதி நன்றி கூறுகிறார்.
மாலை 5.30 மணிக்கு நடைபெறும் கருத்தரங்கத்திற்கு திட்ட இயக்குனர் பழனி தலைமை தாங்குகிறார். கோட்டாட்சியர் சந்திரசேகர் முன்னிலை வகிக்கிறார். தமிழ் வளர்ச்சி பண்பாட்டு மையம் துணைத்தலைவர் ரமேஷ்ராஜா வரவேற்கிறார். சூழலியாலாளர் நக்கீரன் சூழலியல் பார்வையில் பொருநை என்ற தலைப்பிலும், ஆவணப்பட இயக்குனர் ஆர். ஆர். சீனிவாசன் ஆதிச்சநல்லூரும் பொருநை நாகரீகமும் என்ற தலைப்பிலும், எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு பொருநை கடந்து வந்த பாதை என்ற தலைப்பிலும் பேசுகிறார்கள்.
பள்ளி கல்வித் துறை ஒருங்கிணைப்பாளர் ஆவுடையப்ப குருக்கள் நன்றி கூறுகிறார்.
சென்னை புத்தக கண்காட்சியில் அமைந்திருந்தது போலவே பாளையங்கோட்டையிலும் பொருநை அருங்காட்சியகம் அமைந்துள்ளது. இதில் ஆதிச்சநல்லூர், சிவகளை, கொற்கையில் கண்டெடுக்கப்பட்ட பொருள்கள் காட்சி படுத்தப்பட்டுள்ளது. புத்தக கண்ககாட்சிக்கு இது கூடுதல் பெருமை சேர்க்கிறது.


