
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள செய்துங்கநல்லூரில் புதன்கிழமை தோறும் நடைபெறும் வாரச்சந்தை மிகவும் சிறப்பு பெற்றது.
இந்த சந்தைக்கு சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த சுமார் 50க்கும் மேற்பட்ட கிராமத்தைச் சேர்ந்த 2000க்கும் மேற்பட்ட பொதுமக்கள் தங்களின் தேவைகளை பூர்த்தி செய்ய இந்த சந்தைக்கு வந்து பொருட்கள் வாங்கிச் செல்வார்கள். இந்த சந்தைக்கு தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள சாத்தான்குளம், பேய்க்குளம், ஸ்ரீவைகுண்டம், திருச்செந்தூர் போன்ற பகுதிகளில் இருந்தும், திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை பகுதியில் இருந்தும் 100க்கும் மேற்பட்ட வியாபாரிகள் தங்கள் பொருட்களை விற்பனை செய்ய வருகை தருவார்கள்.
இந்த நிலையில் தற்போது திருச்செந்தூரில் இருந்து அம்பாசமுத்திரம் வரை தொழில் வழிச்சாலை அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. இதனால் செய்துங்கநல்லூரில் சந்தை கூடும் இடத்தில் புதிதாக பாலம் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதனால் இன்றைய தினம் சந்தைக்கு வரும் பொதுமக்களாலும், வாகனங்களாலும் திடீர் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இதனை அறிந்த ஸ்ரீவைகுண்டம் டிஎஸ்பி வெங்கடேசன் தலைமையிலான போலிசார் சந்தை நடைபெறும் பகுதிக்கு வந்து போக்குவரத்தை ஒழுங்கு செய்தனர். மேலும் அனைத்து வாகனங்களையும் சீரான முறையில் செல்லும் படி போக்குவரத்தை சீர் செய்தனர். இதனை பார்த்த அப்பகுதி மக்கள் போலிசாரை வெகுவாக பாராட்டினர்.