திருச்செந்தூர் அருகே தேரிக்குடியிருப்பு கற்குவேல் அய்யனார் கோயில் கள்ளர்வெட்டுத் திருவிழா கோலாகமாக நடந்தது.
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே தேரிக்காடு பகுதியில் உள்ள மிகவும் பிரசித்தி பெற்ற கோவில்களில் ஒன்று தான் தேரிக்குடியிருப்பு கற்குவேல் அய்யனார் கோயில். இந்த கோவிலில் நடைபெறும் கள்ளர் வெட்டு திருவிழா மிகவும் புகழ்பெற்றது.
இந்த கள்ளர் வெட்டுத் திருவிழாவிற்கு, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து, புனித மணலை எடுத்துச் செல்வது வழக்கம். இந்த ஆண்டிற்கான கள்ளர் வெட்டுத் திருவிழா கடந்த நவம்பர் 16ஆம் தேதி யாகசாலை பூஜையுடன் தொடங்கியது.

தொடர்ந்து விழா நாட்களில் தினமும் அய்யனார் மற்றும் சுவாமிகளுக்கு சிறப்பு அலங்கார பூஜைகள் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து, கள்ளர் வெட்டுத் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான கள்ளர் வெட்டு நிகழ்வு, கோயில் பின்புறமுள்ள தேரிப்பகுதியில் நடந்தது.
இதில் பொதுமக்களின் கடைகளில் திருடி தொல்லை கொடுத்து வரும் கள்ளர்களை தண்டிக்கும் விதமாக, அய்யனார் அருள் வந்து இளநீரை கள்ளராக பாவித்து இளநீர் வெட்டப்பட்டது.
அந்த இளநீர் பட்ட மணலை பக்தர்கள் புனித மணலாக கருதி, தங்கள் வீடுகளுக்கு எடுத்துச் செல்வது வழக்கம். அந்த மணலை விவசாய நிலத்தில் போட்டால் விவசாயம் செழிக்கும், வீட்டில் வைத்தால் செல்வம் கொழிக்கும் என கருதி, இளநீர் பட்ட மணலை பக்தர்கள் எடுத்துச் சென்றனர்.
இந்த நிகழ்ச்சியில் தமிழகம் முழுவதிலும் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். இத்திருவிழாவை முன்னிட்டு, கோயில் மற்றும் தேரிப்பகுதியில் தூத்துக்குடி மாவட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.


