தூத்துக்குடி மாவட்டத்தில் கனமழை காரணமாக, 101 வீடுகள் முழுமையாகவும், 4 வீடுகள் பகுதியாகவும் என மொத்தம் 105 வீடுகள் சேதமடைந்துள்ளன.
தூத்துக்குடி மாவட்டத்தில் பலத்த மழை காரணமாக மாநகரின் தாழ்வான இடங்களில் மழை நீர் தேங்கியது. பழைய மாநகராட்சி பகுதி, ரயில்வே ஸ்டேஷன் ரோடு, எஸ்.எஸ்.தெரு, தபால் தந்தி காலனி, பாளையங்கோட்டை சாலை, ராஜீவ் நகர், கதிர்வேல் நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள குடியிருப்புகளை மழை நீர் சூழ்ந்துள்ளது. இதனால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தூத்துக்குடி அருகே உள்ள செங்குளம் நிரம்பி அங்கிருந்து வரும் உபரிநீர் அய்யனடைப்பு, சோரீஸ்புரம், மாதவன் நகர் இந்திரா நகர் வழியாக உப்பாத்து ஓடைக்கு செல்கிறது. நீர்வரத்து அதிகமாக இருப்பதால், இந்த நீர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் சுமார் 3 அடி உயரத்துக்கு தேங்கியுள்ளது. இதன் காரணமாக ஊழியர்கள் வெளியே செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.
இதைத் தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அவசர பணியில் ஈடுபடும் ஊழியர்கள் தவிர பெண் ஊழியர்கள் உள்ளிட்ட அனைவரும் அலுவலகத்தில் இருந்து பத்திரமாக வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மேலும், சோரீஸ்புரம் குடியிருப்பு பகுதிகள், மாவட்ட வேலைவாய்ப்பு வளாகம் முழுவதும் மழை நீர் சூழ்ந்தது.
சூசைபாண்டியாபுரம் பகுதியில் குடியிருப்பு முழுவதும் சூழ்ந்ததால், பொதுமக்கள் தங்கள் உடமைகளை எடுத்துக்கொண்டு பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயர்ந்தனர். தூத்துக்குடி – பாளையங்கோட்டை நான்குவழிச் சாலையிலும் சூழ்ந்ததால், வாகனங்கள் ஒருவழியில் இயக்கப்பட்டன. மாவட்டம் முழுவதும் பெய்த மழை காரணமாக, 101 வீடுகள் முழுமையாகவும், 4 வீடுகள் பகுதியாகவும் என மொத்தம் 105 வீடுகள் சேதமடைந்துள்ளன என மாவட்ட நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடியில் தொடர் மழை காரணமாக, பொதுமக்கள் தங்களது நான்கு சக்கர வாகனங்களை பாதுகாப்புக் கருதி 3ஆவது மைல் மேம்பாலத்தில் நிறுத்திவைத்தனர்.
தூத்துக்குடியில் கடந்த ஆண்டு டிசம்பரில் ஏற்பட்ட மழை வெள்ளத்தில், வீடுகளில் நிறுத்தியிருந்த கார்கள், டிரான்ஸ்போர்ட் நிறுவனத்தில் நிறுத்தியிருந்த லாரிகள் உள்ளிட்டவை மூழ்கி சேதமடைந்தன.
இந்நிலையில், கடந்த ஆண்டைப்போல நிகழாண்டும் சில நாள்களாக கனமழை பெய்து வருவதால், பொதுமக்கள் தங்களது நான்கு சக்கர வாகனங்களை 3ஆவது மைல் மேம்பாலத்தில் வரிசையாக நிறுத்திவைத்தனர். இதேபோல, ஆட்சியர் அலுவலகப் பகுதியில் உள்ள மதுரை புறவழிச் சாலை மேம்பாலத்தில் கனரக வாகன உரிமையாளர்கள் தங்களது லாரிகளை நிறுத்திவைத்தனர்.


