தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள கொங்கராயகுறிச்சியில் காரும் ஆட்டோவும் மோதிய விபத்தில் மூன்று பேர் படுகாயம் அடைந்து பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நெல்லை டவுன் பகுதியை சேர்ந்த காஜா மொகைதீன் (30) திருநெல்வேலி தொழில் வழி சாலை வழியாக கொங்கராயகுறிச்சி பகுதியில் காரில் மற்றொரு நபருடன் சென்றுள்ளார். அப்போது எதிரே ஆட்டோவில் திருநெல்வேலியில் இருந்து திருச்செந்தூர் நோக்கி வந்த நாசரேத்தை சேர்ந்த ஆல்வின் (45) வந்தபோது காரும் ஆட்டோவும் எதிர்பாராதவிதமாக மோதியுள்ளது. இதில் காஜா முஹைதீன் உட்பட காரில் வந்த இருவரும் ஆட்டோ ஓட்டி வந்த ஆல்வினும் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர். அருகில் இருந்தவர்கள் அவர்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். ஆபத்தான நிலையில் காஜா முகைதீன் உட்பட மூவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்து குறித்து ஸ்ரீவைகுண்டம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


