புன்னக்காயல் கிராமத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுமுகனேரி டி.சி.டபிள்யூ., நிறுவனத்தின் சார்பில் உணவு மற்றும் நிவாரனப்பொருட்கள் வழங்கப்பட்டது.
தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக தொடர்ந்து பலத்த மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக தாமிரபரணி ஆற்றில் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அனைத்து அணைகளில் இருந்தும் தண்ணீர் வெளியேற்றப்பட்டுள்ள நிலையில், மழை நீரின் அளவும் அதிக அளவு தாமிரபரணி ஆற்றில் கலந்து வருகிறது.
திருச்செந்தூர் அருகில் உள்ள புன்னக்காயல். இந்த புன்னக்காயல் பகுதியில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. தாமிரபரணி தண்ணீர் அதிகமாக வருவதால் புன்னக்காயல் ஊருக்குள் நேற்றைய தினம் மழை வெள்ள நீர் புகுந்துள்ளது. இதனால் வீடுகளுக்குள் இருந்த பொதுமக்கள் தங்களது உடைமைகளை எடுத்துக் கொண்டு குழந்தைகளுடன் வீட்டை விட்டு வெளியேறினர். ஆத்தூரில் உள்ள வீரபாகு கல்யாண மண்டபத்தில் தஞ்சமடைந்தனர்.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுமுகனேரி டி.சி.டபிள்யூ., நிறுவனத்தின் சார்பில் உணவு மற்றும் நிவாரணப்பொருட்கள் மற்றும் மருத்துவ உதவிகள் வழங்கப்பட்டது. தண்ணீர்பந்தல் கிராமத்தில் ஆழ்துளை பாலத்தில் ஏற்பட்ட அமலைச்செடி அடைப்பை பொக்லைன் மூலம் அகற்றும் பணிகள் நடந்தது. புன்னக்காயல் கிராமத்தில் வெள்ள நீரை வெளியேற்றுவதற்காக முகத்துவாரத்தில் மண் அகற்றும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
கடந்த 3 நாட்களாக திருச்செந்தூர் தாசில்தார் உத்தரவின் பேரில் டி.சி.டபிள்யூ., மூத்த நிர்வாக துணைத் தலைவர் சீனிவாசன் தலைமையில் ஆலை அதிகாரிகள் வெள்ள மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.


