தூத்துக்குடி முள்ளக்காடு பகுதியில் ஸ்பிக் நகர் மேல்நிலைப் பள்ளி மாணவர்களின் நாட்டு நலப்பணித் திட்டம் சிறப்பு முகாம் நடைபெற்றது.
தூத்துக்குடி ஸ்பிக் நகர் மேல்நிலைப் பள்ளியில் 11 ஆம் வகுப்பு பயிலும் 25 மாணவர்களைக் கொண்ட நாட்டு நலப்பணித்திட்டம் சிறப்பு முகாம் செப்.26 முதல் அக்.02 வரை முள்ளக்காடு பகுதியில் நடைபெற்றது. பள்ளியின் தலைமையாசிரியர் பாபு ராதாகிருஷ்ணன், ஸ்பிக் நகர் ரோட்டரி சங்கத் தலைவர் பொன்னுசாமி, ஸ்பிக் முதுநிலை மேலாளர் ஜெயபிரகாஷ் முள்ளக்காடு ஊராட்சி ஒன்றிய தலைவர் மற்றும் ஊர் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டு முகாமினைத் துவங்கி வைத்தனர்.
பள்ளியின் செயலாளர் டிஎஸ் பிரேம்சுந்தர் மாணவர்களுக்குத் தன் ஆளுமைத்திறனையும் குழுமனப்பான்மையையும் வளர்க்கும் தன்மையை செயல்விளக்கம் மூலம் விளக்கிக் கூறினார். இம்முகாமில் மாணவர்கள் முள்ளக்காடு கடற்கரைப் பகுதியில் உள்ள நெகிழிப் பொருட்களை அப்புறப்படுத்தினர். 16 வயதிற்கு மேற்பட்டோரில் எழுதப்படிக்கத் தெரியாத நபர்களின் விவரங்கள் சேகரித்தனர்.
முதியோர் இல்லம் சென்று அவர்களுடன் கலந்துரையாடி அவர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்தனர். போதைப்பொருள் தவிர்த்தல் பற்றிய விழிப்புணர்வைக் காவல் உதவி ஆய்வாளர் ராஜபிரபு விளக்கிக் கூறினார். முன்னதாக மரக்கன்றுகள் நடப்பட்டது. இம்முகாமின் மூலம் மாணவர்கள் சேவை மனப்பான்மையை வளர்த்துக்கொண்டனர்.


