தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் போலீசார் விடிய விடியத் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டதில் 31 ரவுடிகள் உட்பட 89 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் உத்தரவின்படி மாவட்டத்தில் அனைத்து காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் காவல்துறையினர் இரவு முழுவதும் விடிய, விடியத் தீவிர ரோந்துப் பணி மேற்கொள்ளப்பட்டது. அதில் பல்வேறு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் 31 ரவுடிகள் உட்பட 90 பேர் பிடிக்கப்பட்டு, விசாரணை நடைபெற்று வருகிறது, பழைய வழக்குகளில் ஈடுபட்டுள்ள மற்றவர்கள் மீது குற்ற விசாரணை நடைமுறைச் சட்டம் 107 மற்றும் 110 ஆகிய பிரிவுகளின்படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மேலும் நேற்று தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள தங்கும் விடுதிகள் சோதனையிடப்பட்டுள்ளது, மேலும் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள வங்கிகள், நிதிநிறுவனங்கள், ஏடிஎம் மையங்கள், நகைக்கடைகள் உட்பட முக்கிய இடங்கள் கண்காணிக்கப்பட்டுள்ளது. மேலும் வாகனங்கள் சோதனையிடப்பட்டு மோட்டார் வாகனச் சட்டத்தை மீறியதாக பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் சட்ட விரோதமாக மதுபானம் விற்பனை செய்தவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் தீவிர ரோந்துப் பணி மேற்கொண்டு பல்வேறு நடவடிக்கை எடுத்த தூத்துக்குடி மாவட்ட அனைத்து காவல்துறை அதிகாரிகள் மற்றும் போலீசாரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் பாராட்டினார். இந்த தீவிரப்பணி தொடர்ந்து நடைபெறும் எனவும், சட்டவிரோத செயல்களில் ஈடுபடுபவர்கள் யாராக இருந்தாலும் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.