ஸ்ரீவைகுண்டத்தில் வீட்டுவாசலில் நின்று கொண்டிருந்த மூதாட்டியிடம் 10 பவுன் நகை பறித்த வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் மேல கோட்டைவாசல் தெருவைச் சேர்ந்தவர் வெள்ளைப்பாண்டி மனைவி செல்லத்தாய் (60). நேற்று முன்தினம் இரவு செல்லத்தாய் காற்றோட்டத்திற்காக வீட்டு வாசலில் நின்று கொண்டிருந்தார். அவரது கணவர் மற்றும் உறவினர்கள் வீட்டிற்குள் இருந்தனர். அப்போது அந்த வழியாக நடந்து வந்த வாலிபர் திடீரென கண்ணிமைக்கும் நேரத்தில் செல்லத்தாய் கழுத்தில் அணிந்திருந்த 10 பவுன் தாலி சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பி ஓடினார்.
இதனால் அதிர்ச்சியடைந்த அவர் ‘திருடன்… திருடன்’ என கூச்சலிட்டுள்ளார். ஆனால் அந்த வாலிபர் வேகமாக இருளில் ஓடி தப்பி விட்டார். இதுகுறித்த புகாரின் பேரில் ஸ்ரீவைகுண்டம் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை வழிப்பறியில் ஈடுபட்ட வாலிபரை தேடிவருகின்றனர். இந்த வழிப்பறி சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


