தூத்துக்குடியில் வைகுண்டபதி பெருமாள் கோவிலில் திருப்பணிகளை விரைந்து முடித்து கும்பாபிஷேக விழாவினை நடத்த வேண்டும் என்று அமைச்சர் ஸ்ரீநாத்திடம் இந்து முன்னணி சார்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.
இந்து முன்னணியின் சார்பில் தூத்துக்குடி மாவட்டச் செயலாளர் இராகவேந்திரா, மீன்வளத்துறை அமைச்சர் ஸ்ரீநாத்திடம் அளித்த கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது: தூத்துக்குடியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீதேவி பூதேவி சமேத வைகுண்டபதி பெருமாள் திருக்கோவிலில் கும்பாபிஷேகத்திற்காகப் பத்து ஆண்டுகளுக்கு முன்பாகவே திருப்பணிகள் தொடங்கப்பட்டன.
ஆனால், இந்நாள் வரை கும்பாபிஷேகத் திருப்பணிகள் முடிவடையாமல் நிலுவையில் உள்ளன. திருப்பணிகள் நிறைவடையாத காரணத்தால், இத்திருக்கோவிலின் முக்கியத் திருவிழாவான ‘ஐந்து கருட சேவை’ நடைபெறாமல் முடங்கியுள்ளது. இது பக்தர்களிடையே பெரும் மனவருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.
எனவே, அமைச்சர் இதில் நேரடி கவனம் செலுத்தி, நிலுவையில் உள்ள திருப்பணிகளை விரைந்து முடித்து கும்பாபிஷேக விழாவினை நடத்திட வழிவகை செய்ய வேண்டும் என இந்து முன்னணி மற்றும் பக்தர்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


