தூத்துக்குடி மாவட்டத்தின் பாரம்பரிய கலை மற்றும் பண்பாட்டைப் பறைசாற்றும் வகையில், கனிமொழி எம்பி ஏற்பாட்டில் 5-வது நெய்தல் கலைத் திருவிழா 2026, தூத்துக்குடி வ.உ.சி. கல்லூரி மைதானத்தில் நேற்று வெள்ளிக்கிழமை வெகுவிமரிசையாகத் தொடங்கியது.
கணேஷ்கா சிலம்பம் நிகழ்ச்சியுடன் விழா தொடங்கியது. அதைத் தொடர்ந்து தேவராட்டம், பெரிய மேளம், தேன்மொழி ராஜேந்திரன் கரகம், சேவா ஆட்டம் உள்ளிட்ட பல்வேறு நாட்டுப்புற மற்றும் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
முதல் நாள் விழாவில் முன்னாள் அமைச்சர் பி. கீதாஜீவன், மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, சட்டமன்ற உறுப்பினர்கள் ஜி.வி. மார்க்கண்டேயன், கருணாநிதி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
இரண்டாம் நாள் நிகழ்ச்சிகள் (ஆகஸ்ட் 15, சனிக்கிழமை): தூத்துக்குடி சகா கலைக்குழு, திருக்கயிலாய வாத்தியக் குழு, கணியான் கூத்து, தப்பாட்டம், கயத்தாறு கும்மி-கோலாட்டம், காணிக்காரன் நடனம் (பறவைகள் நடனம்) உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகளும், கேபர் வாசுகியின் இன்னிசை நிகழ்ச்சியும் இடம்பெறுகின்றன.
நிறைவு நாள் நிகழ்ச்சிகள் (நாளை – ஆகஸ்ட் 16, ஞாயிற்றுக்கிழமை): தூத்துக்குடி தமிழண்டா கலைக்குழு, தமிழிசை இன்னிசை, உவரி களியல் குழு, ஜிக்காட்டம், குஜராத் சித்தி கோமா நடனக் குழு உள்ளிட்டோரின் கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. மேலும், சூப்பர் சிங்கர் புகழ் ராஜகணபதி, ஹரிப்பிரியா – நவீன் நண்பர்கள் இசைக்குழுவின் சிறப்பு இன்னிசை நிகழ்ச்சிகளும் நடைபெறவுள்ளன.
3 நாட்கள் நடைபெற்று வரும் இவ்விழாவின் மூலம் தமிழகத்தின் நாட்டுப்புற கலைகள், பாரம்பரிய இசை, நடனம், பாரம்பரிய உணவுகள் மற்றும் பண்பாட்டைப் பொதுமக்களிடம் கொண்டு சேர்க்கும் வகையில் பல்வேறு சிறப்பான நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக விழாக் குழுவினர் தெரிவித்தனர்.


