தூத்துக்குடி அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் வெடி விபத்தில் காயம் அடைந்த மாணவர்களை தூத்துக்குடி மாவட்ட பாரதிய ஜனதா கட்சி தலைவர் சித்ராங்கதன் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
தூத்துக்குடி அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் கடந்த 12ஆம் தேதி மாணவர் ஒருவர் பையில் கொண்டு வந்த வெடி பொருளை பட்டாசை எடுத்து விளையாடியதில் ஒரு மாணவருக்கு பட்டாசு வெடித்ததில் வலது கை முற்றிலும் சிதைந்து சேதமானது மற்றொரு மாணவருக்கு கண்ணில் காயம் ஏற்பட்டது. இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் காயமடைந்த இரண்டு மாணவர்களும் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில் இன்று தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு வந்த மாவட்ட தலைவர் சித்ராங்கதன் தலைமையிலான பாரதிய ஜனதா கட்சியினர் காயம் அடைந்த மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோரை சந்தித்து ஆறுதல் கூறியதுடன் நடந்த சம்பவம் குறித்து அவர்களிடம் கேட்டறிந்தார்.
பின்னர் சித்ராங்கதன் செய்தியாளர்களிடம் பேசும்போது “பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு அடுத்த கட்ட சிகிச்சை எதுவும் நடைபெறவில்லை. உடனடியாக உரிய சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் பாதிக்கப்பட்ட மாணவர்களை இதுவரை அமைச்சர்களோ எம்பிக்களோ சந்திக்கவில்லை. தூத்துக்குடி மாவட்டத்தில் கஞ்சா, அரிவாள் ஆகியவற்றை தாண்டி வெடிகுண்டு அளவிற்கு கொண்டு போய் உள்ளது.
சிறு வயதிலேயே கலாச்சார சீரழிவை கொண்டு வந்துள்ளது திராவிட மாடல். மாவட்ட ஆட்சியர் பாதிக்கப்பட்ட மாணவனின் தாயிடம் தவறாக பேசிய சம்பவம் கண்டிக்கத்தக்கது. உடனடியாக பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.


