தூத்துக்குடி தருவை மைதானத்தில் நடைபெற்ற 75 வது ஆண்டு சுதந்திர தினவிழாவை முன்னிட்டு மாவட்ட ஆட்சி தலைவர் மரு.கி. செந்தில்ராஜ் தேசிய கொடியை ஏற்றி வைத்து பல்வேறு துறையில் சாதனை புரிந்தவர்களுககு விருதும் நற்சான்றிதழும், நலத்திட்ட உதவிகளும் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம் சார்பில் எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு எழுதிய “தூத்துக்குடி மாவட்ட அறியப்படாத தியாகிகள்” என்ற நூலை வெளியிடப்பட்டது. இந்த நூலை மாவட்ட ஆட்சி தலைவர் மரு. கி. செந்தில்ராஜ் வெளியிட்டார். மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் லோக பாலாஜி சரவணன் பெற்றுக்கொண்டார். அருகில் மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணபிரான், உதவி ஆட்சியர் சரவணன், தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் சாருஸ்ரீ , எழுத்தாள ர்முத்தாலங்குறிச்சி காமராசு உள்பட பலர் இருந்தனர். இந்த நூலில் தூத்துக்குடி மாவட்டத்தில் சுதந்திரத்தின் போது நடந்த முக்கிய நிகழ்வுகள் பதிவிடப்பட்டுள்ளது. மணியாச்சி ரயில் நிலையத்தில் ஆஷ் துரையை வாஞ்சி நாதன் சுட்டு கொன்ற சம்பவம். கோவில்பட்டி அருகே உள்ள கடலையூரில் உள்ள சுந்திரபோராட்ட வீரர்கள் நினைவுத் தூண். திருச்செந்தூரில் சுதந்திர போராட்ட தியாகிகளுக்கான நினைவு தூண். தூத்துக்குடி, ஆறுமுகநேரி பகுதியை சேர்ந்த போரட்ட வீரர்கள், குலசேகரபட்டினம் லோன் துரை கொலை வழக்கு உள்பட பல்வேறு வரலாற்று நிகழ்வுகள் தொகுக்கப்பட்டுள்ளது. சுதந்திர போராட்ட வீரர்கள் குரும்பூர் ரயில் நிலையத்தில் தாக்குதல் நடத்தியது, சாத்தான்குளம் போலீஸ் ஸ்டேஷன் தாக்கி துப்பாக்கியை தூக்கி செல்லுதல், மெஞ்ஞானபுரம் தபால் நிலையம் எரிப்பு, குரங்கணி மரம் வெட்டும் போராட்டம், கள்ளுக்கடையை எதிர்த்து கள்ளு குடித்தவர்களை மொட்டை அடித்து கழுதை மேல் ஏற்றும் சம்பவம் என பல்வேறு அறியப்படாத சம்பவங்களை எழுத்தாளர் இந்த நூலில் தொகுத்து உள்ளார். மாவட்ட நிர்வாகம் சார்பில் உருவாக்கப்பட்ட சுதந்திர போராட்ட வீரர்கள் பற்றிய வெப்சைட் மற்றும் வரலாறுகள் குறித்தும் இந்த நூலில் குறிக்கப்பட்டுள்ளது. 200 க்குமேற்பட்ட சுதந்திர போராட்ட வீரர்கள் புகைப்படம். சம்பவங்கள் நடந்த இடங்கள் குறித்தும் இந்த நூலில் படங்கள் வெளியிடப்பட்டுள்ளது.


