திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருவது வழக்கம். வரக்கூடிய பக்தர்கள் திருச்செந்தூர் கோவில் முன்பு இருக்கக்கூடிய கடற்கரையில் புனித நீராடிய பின் முருகனை வழிபட்டு வருவார்கள்.
நேற்று தமிழ் புத்தாண்டை முன்னிட்டு, திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு அதிகாலை முதலே தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மட்டும் இல்லாமல் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகை தந்து நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனர்.
நேற்று மதிய நேரத்தில் கோவில் முன்புள்ள கடற்கரையில் கடல் திடீரென சீற்றத்துடன் காணப்பட்டது. மதியம் தொடங்கி சுமார் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக கடல் சீற்றத்துடன் காணப்பட்டது. அதன்பிறகு சாதாரண நிலைக்கு திரும்பியது.
அதேபோல் இன்று மதியம் 3 மணி அளவில் இரண்டாவது நாளாக கோவில் முன்புள்ள கடற்கரை முழுவதும் கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது.
இதனால் கடல் நீர் கரைகளுக்கு வந்துள்ளது. கடல் சீற்றத்தின் காரணமாக கரைக்கு வந்த நீரில் குழந்தைகளில் விளையாடி மகிழ்ந்து வருகின்றனர். கடல் சீற்றம் உள்ள பகுதியில் பக்தர்கள் மற்றும் குழந்தைகள் எந்தவித அச்சமும் இல்லாமல் நீராடி வருகின்றனர்.
கடற்கரையில் பக்தர்களை பாதுகாப்பாக நீராட போலீசார் மற்றும் கடற்கரை பாதுகாப்பு பணியாளர்கள் அறிவுறுத்தி வருகின்றனர்.
ஏற்கனவே நேற்று மாலை மற்றும் இன்று காலையில் திருச்செந்தூரில் கடல் உள்வாங்கி காணப்பட்ட நிலையில் இன்று இரண்டாவது நாளாக கடல் சீற்றத்துடன் காணப்படுவதால் பக்தர்கள் அச்சமடைந்துள்ளனர்.


