திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் வருகை தருவார்கள். கோவிலுக்கு வருகை தரும் பக்தர்கள் கோவில் முன்புள்ள கடலில் புனித நீராடி முருகனை தரிசனம் செய்வார்கள்.
இந்த நிலையில் நேற்று மதியம் 3 மணி அளவில் திருச்செந்தூர் கோவில் முன்புள்ள கடல் திடீரென சீற்றத்துடன் காணப்பட்டது. இதனால் கடற்கரையில் சுமார் 100 அடிக்கு கடல் நீர் தேங்கியது.
அதைத் தொடர்ந்து மாலையில் 5 மணி அளவில் கடல் உள்வாங்கி காணப்பட்டது.இந்த நிலையில் இன்று இரண்டாவது நாளாக திருச்செந்தூர் கடல் உள்வாங்கி காணப்படுகிறது.
திருச்செந்தூர் கடற்கரையில் உள்ள நாழிக்கிணறு பகுதியில் இருந்து அய்யா கோவில் வரை 500 மீட்டர் நீளத்திற்கு சுமார் 70 அடி கடல் உள்வாங்கி காணப்படுகிறது.
கடல் உள்வாங்கி காணப்படுவதால் கடலுக்குள் இருக்கும் பச்சை பாசி படிந்த பாறைகள் அதிக அளவில் வெளியே தெரிகின்றன.
அதன் மீது ஏறி கடலுக்குள் பக்தர்கள் குளித்து விளையாடுகின்றனர். கோவிலுக்கு வந்த சில பக்தர்கள் பாறைகள் மீது நின்று புகைப்படம் மற்றும் செல்பி எடுத்து வருகின்றனர்.
கடல் உள்வாங்கிய பகுதிகளில் கடற்கரை பாதுகாப்பு பணியினர் பக்தர்களை பாதுகாப்பாக குளிக்க அறிவுறுத்தி வருகின்றனர்.


