காலையில் எழுந்தோம்.
இன்று ஒரே நாளில் குவைத்தில் முக்கிய இடங்களை யெல்லாம் சுற்றிப் பார்க்க வேண்டும். மாலையில் தமிழ்நாடு பொறியாளர்கள் சங்கத்தின் பெண்கள் கூடும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சிறப்புரையாற்ற வேண்டும். அதன் பின் இரவு தமிழ்நாட்டுக்கு செல்ல விமானம் ஏற வேண்டும். எனவே பரபரப்பாக இருந்தோம்.
சுப்பிரமணியனும், அவரது மகன் துரையும் வந்தார்கள். துரைக்கு அவருடைய தாத்தா பெயரை வைத்து இருந்தார் சுப்பிரமணியன். வாய் நிறைய துரை துரை என அழைத்துக் கொண்டிருந்தார். இதுவே எனக்கு ஆச்சரியமாகத்தான் இருந்தது. தமிழகத்தில் குழந்தைகளை பெயரை அரைகுறையாக வைத்துக் கொண்டு வித்தியாசம், புதுமை என தமிழ் மரபை அழித்துக் கொண்டிருக்கும் வேளையில் குவைத்தில் இதுபோன்று தமிழ்ப் பெயர்கள் வைக்கும் தமிழர்களை பார்த்து பெருமையாக இருந்தது. அதுவும் தங்களது முன்னோர்களின் பெயரை வைப்பது எனக்கு ஆச்சரியமாக இருந்தது.
நான் குவைத் பயணத்தினை முடித்து விட்டு ஊருக்கு வந்த பிறகு கூட பல மேடையில் இவர்களைப் பற்றி பேசி வருகிறேன். இன்றும் பாஹீல் சென்று சரவண பவனில் சாப்பிட உள்ளோம். எங்களை அழைத்துக்கொண்டு சுப்பிரமணியன் பாஹீல் வந்தார்.
ஹோட்டலில் எங்களை எதிர்பார்த்து சரவணன் அய்யாவும், காசி அய்யாவும் காத்திருந்தார்கள். இன்று எங்களை குவைத் நகரில் முக்கிய இடங்களை சுற்றிக்காட்டுபவர்கள் இவர்கள்தான்.
அனைவரும் சாப்பிட அமர்ந்தோம். அனைவருக்கும் தோசை, இட்லி என சைவ உணவுகள் சூடாகவும், சுவையாகவும் வந்துக் கொண்டிருந்தது. காலையில் அசைவ உணவையும் வெளிநாட்டு உணவையும் சாப்பிட யோசனைத்தான். இதை புரிந்து கொண்டு தான், உள்ளூர் உணவை சாப்பிட வைத்தார்கள் குவைத் நண்பர்கள். சாப்பிட்டு கொண்டிருக்கும் போதே எங்கே எல்லாம் செல்லலாம் என திட்டமிட்டார்கள்.
சரவணன் அய்யா மற்றும் காசி அய்யா ஆகியோர் எங்களைக் குவைத்தின் நாடாளுமன்றம், மன்னர் அரண்மனை, கடலுக்கு மத்தியில் கட்டப் பட்டுள்ள 30 கிலோமீட்டர் பாலம் மற்றும் இந்தக் குவைத் நாட்டின் கலாச்சாரம் மற்றும் வரலாற்றை எடுத்துச் சொல்லும் அருங்காட்சியகத்திற்கும் அழைத்துச் செல்லலாம் என்று முடிவு செய்தார்கள்.
எனவே குவைத்தில் உள்ள அருங்காட்சியகம் பற்றி அவர்கள் எங்களிடம் பேசினர்.
குவைத் தேசிய அருங்காட்சியகம் என்பது குவைத் போருக்குப் பின் மறுசீரமைப்பிற்குப் பிறகு பூம் அல் முஹலாப், தேசிய பாரம்பரிய கண்காட்சி அரங்கம், பண்டைய கண்காட்சி அரங்கம் மற்றும் கோளரங்கம் ஆகியவற்றை ஒருங்கே கொண்டதாகும்.
இங்குள்ள சிவப்பு அரண்மனை என்பது ஒரு வரலாற்று மற்றும் கலாச்சார அடையாளமாகும். இது மக்களின் வரலாற்றின் ஒரு முக்கிய அம்சத்தை உள்ளடக்கியது. இந்த அரண்மனை மறைந்த ஷேக் முபாரக் அல்-சபாவின் காலத்தில் கட்டப்பட்டது. இது ஜஹ்ராவில் அமைந்துள்ளது. மேலும் அதன் கட்டுமானம் கி.பி 1897 க்கு முந்தையது. இந்த அரண்மனை கட்டுமானத்திற்கு சிவப்பு களிமண் பயன்படுத்தப்பட்டது. எனவே இந்த அரண்மனை சிவப்பு அரண்மனை என பெயர் பெற்றது.
கடல்சார் அருங்காட்சியகம் ஜனவரி 2010 இல் நிறுவப்பட்டது. இது கடல்வாழ் உயிரினங்களின் வரலாறு மற்றும் டைவிங், வழிசெலுத்தல், கருவிகள், கப்பல்களின் வகைகள் மற்றும் அவற்றின் பாகங்கள் தொடர்பான அனைத்தையும் காட்சிப்படுத்துக்கிறது.
அல்-குரைன் தியாகிகள் அருங்காட்சியகம் என்பது நினைவு அருங்காட்சியகம் . 24/2/1991 இல் படையெடுக்கும் ஈராக்கிய இராணுவத்திற்கு எதிராக தைரியமான எதிர்ப்பு காட்டிய போராளிகள் நினைவாக நிறுவப்பட்டது. ஷேக் ஜாபர் அல்-அஹ்மத் அல்-சபா, குவைத் மக்களின் மன உறுதியையும், அவர்களின் தியாகத்தையும் மறக்க முடியாத ஒரு சாட்சியாக, இதை வரலாற்று அருங்காட்சியகமாக மாற்ற உத்தரவிட்டார்.
ஷேக் முபாரக்கின் கியோஸ்க் அருங்காட்சியகம் என்பது அல் சரா ரீஃப் சதுக்கம் சந்தைக்கு அருகில் அமைந்துள்ள இரண்டு மாடி கட்டிடமாகும். ஷேக் முபாரக்கின் விசாரணைகளின் தலைமையகம் இதுவாகும். அங்கு அவர் 1899 இல் ஆட்சிக்கு வந்ததிலிருந்து நாட்டின் விவகாரங்களை நிர்வகித்தார்.
டிக்சன் ஹவுஸ் அருங்காட்சியகம் என்பது பத்தொன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்தது. 1899 இல் குவைத்தின் ஆட்சியாளர் ஷேக் முபாரக் அல்-சபாவிற்கும் பிரிட்டனுக்கும் இடையே ஏற்பட்ட வரலாற்று ஒப்பந்தத்தைத் தொடர்ந்து. 1904 & -1909 இல், இது பிரிட்டிஷ் அரசியல் முகவர் கர்னல் எஸ்.ஜி நாக்ஸின் குடியிருப்பு மற்றும் அலுவலகமாக மாறியது. 1929&-1936 இல், பிரிட்டிஷ் கமிஷனர் கர்னல் ஹார்ல்ட் டிக்சனின் தலைமையகமாக மாறியது.
காவல்துறை அருங்காட்சியகம் பிப்ரவரி 2014 இல் திறக்கப்பட்டது. இது ஒரு சிறிய அருங்காட்சியகமாக இருந்தாலும், காவல்துறையின் அனைத்து அம்சங்களையும் விளக்கும் ஒரு விரிவான தொகுப்பை உள்ளடக்கியது. காவல்துறை அதிகாரிகளால் பயன்படுத்தப்பட்ட பல்வேறு காலகட்டங்களில் உள்ள பழைய கார்கள் மற்றும் மோட்டார் சைக்கிள்களின் தொகுப்பும் இதில் உள்ளது.
ஷேக் அப்துல்லா அல்-சேலம் அல்-சபா அரண்மனை அருங்காட்சியகம் ஃபைலாகா தீவில் உள்ள ஒரு முக்கியமான வரலாற்று அடையாளமாகும். இது ஒரு பாரம்பரிய கட்டிடமாகவும், திறந்த அருங்காட்சியகமாகவும் மாற்றப் பட்டுள்ளது. இங்குள்ள அரண்மனை ஒன்பது அறைகள் மற்றும் ஒரு திறந்த முற்றத்தை உள்ளடக்கியது.
குவைத் வரலாற்று கட்டிடங்கள் குவைத் மக்களின் வாழ்க்கையை விவரிக்கும் ஒரு முக்கியமான சமூக அம்சத்தைக் குறிக்கிறது, இது மூதாதையர் தியாகங்களின் கதையைச் சொல்கிறது மற்றும் கலாச்சார, சமூக மற்றும் பொருளாதார நோக்கங்களை வெளிப்படுத்துகிறது. குவைத்தின் கடந்த காலத்தின் தனித்துவமான கட்டிடக்கலை மாதிரியை உள்ளடக்கியது. இந்த வரலாற்று கட்டிடங்களை கையகப்படுத்தும் கடமையை அரசாங்கம் மேற்கொண்டுள் ளதுடன், அவற்றை பாதுகாக்கவும், எதிர்கால சந்ததியினருக்கு பயன்படுத்தவும் தொல்பொருட்கள் மற்றும் அருங்காட்சி யகங்கள் துறையிடம் ஒப்படைத்துள்ளது.
அவற்றில் சில:
பைத் அல்-சாது (அல்-சாது வீடு).
அல்-கிப்லியா பள்ளி.
பைத் அல்-படர் (அல்-படர் வீடு).
அமெரிக்க மருத்துவமனை
பைத் அல்-கைத்.
குவைத் வால் கேட்ஸ்.
ஷேக் அகமது அல்-ஜாபரின் ஓய்வு இல்லம் (ஃபைலாகா தீவில்) ஆகியவை ஆகும்.
பைட் அல்-படர் (அல்-படர் வீடு) என்ற கட்டிடம் 1837&-1847 இல் நிறுவப்பட்டது . குவைத்தின் முக்கிய வணிகர்களான அப்துல்அஜிஸ் மற்றும் அப்துல்ஹோசென் யூசெப் அல்-படர் ஆகியோரின் வாரிசுகளுக்கு சொந்தமானது. வீட்டைக் கட்டுவதற்குப் பயன்படுத்தப்பட்ட பொருட்கள் மண் மற்றும் கடல் பாறைகள் மற்றும் அதன் சுவர்களில் பூச்சு பூசப்பட்டது. சாந்தல் மரம், பாசில் (மூங்கில்), மற்றும் பவாரி (ஸ்ட்ரா-மெட்) போன்ற பொருட்களைப் பயன்படுத்தி கட்டப்பட்டது.
ஷேக் அகமது அல்-ஜாபரின் ஓய்வு இல்லம் ஃபைலாகா தீவில் அமைந்துள்ளது. மற்றும் 1927 இல் நிறுவப்பட்டது. இந்த வீடு ஒரு செவ்வக கட்டிடத்தைக் கொண்டுள்ளது. அதன் முகப்பின் இருபுறமும் ஒரு பிரதான கதவு உள்ளது. கட்டிடத்தின் கிடைமட்ட தோற்றம் அனைத்து வெளிப்புற கதவுகளையும் இணைக்கும் இரண்டு வெட்டும் தாழ்வாரங்களைக் காட்டுகிறது. கட்டுமானப் பொருட்கள் மண், கடல் பாறை மற்றும் மரங்களைக் கொண்டிருந்தன. அவை அக்காலத்தில் பொதுவாகப் பயன்படுத்தப்பட்டன. ஓய்வு இல்லம் பாரம்பரிய அருங்காட்சியகமாக பயன்படுத்தப்பட்டது.
அமெரிக்க மருத்துவமனை. இதன் கட்டுமானப் பணிகள் 1912 இல் தொடங்கி 1914 இல் நிறைவடைந்தன. நவீன கட்டுமான முறைகளைப் பயன்படுத்தி கட்டப்பட்ட முதல் கட்டிடங்களில் இதுவும் ஒன்று. சீர்திருத்த தேவாலயத்தின் அரேபிய மிஷன் (ஸிசிகி) இதை நிறுவியது. இந்த திட்டம் இரண்டு அமெரிக்க பொறியாளர்களால் வடிவமைக்கப்பட்டு மேற்பார்வையிடப்பட்டது
பைத் அல்-கைத் என்பது கைத் பின் அப்துல்லா பின் யூசுஃப் இல்லம். 1930களில் நிறுவப்பட்டது. இது நவீன கலை அருங்காட்சியகத்திற்கு அருகிலுள்ள ஷார்க் பகுதியில் அமைந்துள்ளது. கடந்த காலத்தில், இந்த வீடு பழைய குவைத் நகரத்தின் அசல் நகர்ப்புற கட்டமைப்பின் பின்னிப்பிணைந்த கட்டிடக்கலையை சேர்ந்ததாக இருந்தது.
குவைத் நகர வாயில்கள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. குவைத் அதன் வரலாற்றில் மூன்று நகரச் சுவர்களைக் கட்டியுள்ளது. 1920 இல் ஷேக் சேலம் அல் முபாரக் அல் சபா (1917&-1921) ஆட்சியின் போது சுவர் கட்டப்பட்டது. இது நகரத்தை கடலில் இருந்து அடைத்து அரை வட்ட வடிவில் கட்டப்பட்டது. பிப்ரவரி 4, 1957 இல் சுவர் இடிக்கப்பட்டது. இந்த தகவல்களையெல்லாம் குவைத் அரசு வெளியிட்ட சுற்றுலா கைடில் இருந்து தெரிந்து கொண்டோம்.
இதைப்பற்றி தான் அசைப்போட்டோம். இருப்பதோ 8மணி நேரம் தான்.இந்த நேரத்தில் நாம் எங்கேயெல்லாம் போகலாம்.
டாக்டர் சுதாகர் கூறினார். “நாம் தேசிய அருங்காட்சியகம் செல்லலாம். ஏன் என்றால் அங்கே தான் மிகவும் பழமைய வாய்ந்த மண் திண்ணை இருக்கிறது” என்றார்.
அதைக் கேட்டவுடன் எனக்கும் ஆர்வம் அதிகமாகி விட்டது.மாட மாளிகை கொண்ட குவைத்தில் மண் திண்ணை இருக்கிறதா? அதை முதலில் காணவேண்டும் என்று ஆசைப்பட்டேன். எனவே நாங்கள் அந்த அருங்காட்சியம் இருக்கும் இடத்தினை நோக்கி கிளம்பினோம். எங்களோடு சரவணன் அய்யா, காசி அய்யாவை அனுப்பி விட்டு சுப்பிரமணியனும், துரையும் கிளம்பி விட்டார்கள்.
நாங்கள் அங்கிருந்து 45 கிலோமீட்டர் தொலைவில் உள்ள குவைத் நகரத்தினை நோக்கி பயணம் செய்தோம்.
செல்லும் வழியில் பல விசயங்களை நாங்கள் அலசிக்கொண்டே சென்றோம்.
காசி அய்யாவின் முழு பெயர் காசி விசுவநாதன். இவர் சொந்த ஊர் தமிழ்நாட்டில் உள்ள பழனி. இங்குதான் இவர் பிறந்து வளர்ந்துள்ளார். தற்போது கூட இவரது குடும்பம் பழனியில்தான் உள்ளது. இவர் ஒரிசா சென்று, அங்கே பொறியியல் படிப்பை படித்துள்ளார். அதன்பின் சென்னையில் வேலை பார்த்துள்ளார். அதன் பின் ஜாம் நகரில் உள்ள ரிலைன்ஸ் கம்பேனியில் வேலைக்கு சேர்ந்தார். தொடர்ந்து 2005 இல் பகீரைனில் பணி புரிந்தார். கடந்த 2008 இருந்து. இது வரை குவைத் நேஷனல் பெட்ரோலியம் கம்பேனியில் பொறியாளராக பணியாற்றி வருகிறார். தமிழ்நாடு குவைத் பொறியாளர் சங்கத்தில் சிறந்த தன்னார்வலாக பணியாற்றி வருகிறார்.
தற்போது நம்மோடு பயணிக்கும் இவர் குவைத்தை பற்றி நிறைய தெரிந்து வைத்திருக்கிறார்கள். எப்போதுமே கேள்விகளை தொடுத்து, அதற்கு பதிலையும் அவரே சொல்லுவார். அவரின் பேச்சு மிக வித்தியாசமாக ரசிக்கும் படி இருந்தது.
சரவணன் அய்யா. இவர் விழுப்புரத்தில் பிறந்தவர். தற்போது இவரது குடும்பம் பாண்டிச்சேரியில் வசித்து வருகிறது. இவர் குவைத்துக்கு வந்து கிட்டத்தட்ட 21 வருடங்கள் ஆகிறது. முன்பு இவர் குவைத் நேஷனல் பெட்ரோலியம் கம்பேனியில் வேலைபார்த்து வந்தார். தற்போது குவைத் இன்டர் கிரேட் பெட்டேராகெமிக்கல் இன்டஸ்சரி கம்பேனியில் தொழில் நுட்ப வல்லுநராக வேலை பார்த்து வருகிறார்.
பழகுவதற்கு இனிமையானவர். நிறைய கேள்விக்கு இவரும் பதில் சொல்லிக் கொண்டே வந்தார். குவைத் என்பது சிறிய நாடுதான். ஆனால் இங்கே உள்ள அருங்காட்சியகங்கள் உள்பட முக்கிய இடங்களை பார்க்க வேண்டும் என்றால் குறைந்தது 10 நாள்கள் வேண்டும். ஆனாலும் சரவணன் அய்யா எங்களுக்கு நிறைய விசயங்களை சொல்லிக்கொண்டே வந்தார்.
அதே வேளையில் குவைத்தை பற்றிய அருங்காட்சிய கையேடு மற்றும் கூகுள் காட்டிய சிறப்புகள் சில வற்றை வைத்துக்கொண்டு எனக்கு பல தகவல்கள் தெரிந்தது.
குவைத் பற்றி அசைப்போட்டுக்கொண்டே குவைத் நகரத்துக்குள் நுழைந்தோம். எங்கு பார்த்தாலும் வானுயர்ந்த கட்டிடங்கள், மிகவும் பிரமாண்டமாக இருந்தது.
அதில் ஒரு கட்டிடம் படகை நட்டு வைத்தது போலவே இருந்தது. நம் மூரில் படகு வீட்டை பார்த்து இருக்கிறோம். காஷ்மீரிலும் , கேரளாவிலும் இதுபோல வீடுகள் உண்டு என சொல்ல கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் இங்கே ஒரு படகே மிகப்பெரிய கட்டிடமாக வானுயரமாக நிற்கிறது.
அதைப் பற்றி விவரம் அறிய ஆவலாக இருந்தோம்.
(குவைத் பயணம் தொடரும்)