தூத்துக்குடி அருகே உள்ள தெற்குகல்மேடு அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்ட நூலகத்தில் தேசிய நூலக வார விழா நடந்தது.
நாடு முழுவதும் நவம்பர் 14ம் தேதி முதல் 20ம் தேதி வரை மாணவர்கள் மற்றும் பொதுமக்களிடம் நூலக வாசிப்பு பழக்கத்தை மேம்படுத்திட நூலக வார விழா கொண்டாடப்படுகிறது. தெற்குகல்மேடு நூலகத்தில் நடந்த தேசிய நூலக வார விழாவில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மாணவர்கள் மற்றும் மகளிர் சுய உதவி குழு பெண்கள் கலந்துகொண்டு வாசிப்பு பழக்கத்தை மேம்படுத்திடவும்,பள்ளி பாட புத்தகத்தோடு நூலகப் புத்தகத்தை வாசித்து பொது அறிவை வளர்த்துக் கொள்ளவும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
மாணவர்கள் அனைவருக்கும் திருக்குறள் புத்தகம் வழங்கப்பட்டது. மாணவர்கள் அனைவரும் அண்ணா மறுமலர்ச்சி திட்ட நூலகத்தில் உள்ள புத்தக கண்காட்சியினை பார்வையிட்டனர். இந்நிகழ்ச்சிக்கு சமூக தணிக்கை வட்டார வள பயிற்றுநர் முத்துமுருகன் தலைமை வகித்தார். ஊராட்சி செயலர் பொன்வேல்,ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஆசிரியை அருள்வினோ ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மக்கள் நல பணியாளர் சின்னத்தம்பி அனைவரையும் வரவேற்றார். ஓட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றிய மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் கலைச்செல்வன் கலந்து கொண்டு மாணவர்களுக்கு திருக்குறள் புத்தகங்களை வழங்கி பேசினார்.இதில் பணித்தள பொறுப்பாளர்கள் சந்தனமாரி, சத்தியமாலா,சமூக தணிக்கை கிராம வள பயிற்றுநர்கள் உள்பட மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள், மாணவர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் ஊராட்சி கணினி இயக்குநர் பாலகங்காதார திலகர் நன்றி கூறினார்.