தூத்துக்குடி வ.உ.சி., துறைமுகத்தில் கண்காணிப்பு வார நிறைவு விழா அண்மையில் நடைபெற்றது.
தூத்துக்குடி வ.உ. சிதம்பரனாா் துறைமுகத்தில் கண்காணிப்பு வாரம் ஒரு வாரம் கடைபிடிக்கப்பட்ட நிலையில், நிறைவு நாள் விழா இன்று நடைபெற்றது. விழாவில் துறைமுக ஆணையத் தலைவர் சுசாந்த குமார் புரோகித், கலந்து கொண்டு பேசுகையில் “துறைமுகத்தில் சரக்கு கையாளும் வசதிகளை அதிகரிப்பதற்கு தேவையான வளர்ச்சிப்பணி திட்டங்களை பற்றி விளக்கி, முக்கியமாக வரவிருக்கும் பசுமை ஹைட்ரஜன் திட்டத்தினை பற்றி சுட்டிகாட்டினார்.
மேலும் அவர் துறைமுகத்தின் அனைத்து நடவடிக்கைகளிலும் வெளிப்படத்தன்மை மற்றும் துறைமுகத்தின் செயல்பாடுகளும் இணைந்து பயணிக்கும் தருணத்தில் வளர்ச்சி எளிதாக அடையும் என்று கூறினார்.
மத்திய புலனாய்வு பணியகம் இயக்குநர் பானி பிரதா ராய் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். தனது சிறப்புரையில் அனைத்து துறைகளிலும் நமது நாடு முன்னேற்றம் அடைவதற்கு நமது செயல்பாடுகளில் கண்காணிப்பு ஒரு அங்கமாக இருக்க வேண்டும் என்று கூறினார். மேலும் அனைத்து அதிகாரிகளும், ஊழியர்களும் தங்கள் பணிகளில் தவறுகளை குறைப்பதற்கும், கண்காணிப்பினை பேணுவதற்கும் நிலையான செயல்பாட்டு நடைமுறைகளை நன்கு அறிந்திருக்க வேண்டியதன் அவசியத்தையும், அதன் செயல்படுத்துவதின் முக்கியத்துவத்தையும் அவர் விளக்கிக் கூறினார்.
தலைமை கண்காணிப்பு அதிகாரி எஸ். முரளிகிருஷ்ணன் வரவேற்புரை ஆற்றினார். அவர் கூறுகையில், துறைமுகத்தினால் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கிடையே நடத்தப்பட்ட அனைத்துப் போட்டிகளும் தேசத்தின் வளர்ச்சி செயல்பாட்டில் ஊழலால் ஏற்படும் தடைகளை குறித்த விழிப்புணர்வை இளம் மாணவ, மாணவியர்கள் மனதில் விதைப்பதால் நாளைய ஊழலற்ற புதிய இந்தியாவை அவர்களால் உருவாக்க முடியும் என்று கூறினார்.
கண்காணிப்பு விழிப்புணர்வு வார விழாவில், (28 அக்டோபர் முதல் 3 நவம்பர் 2024) “வளமான தேசத்திற்கு நேர்மை எனும் கலாச்சாரம்” என்ற தலைப்பில் கண்காணிப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவியர், துறைமுக ஊழியர்களுக்கு இடையே தெரு கூத்து, நாடகம், கட்டுரைப் போட்டி, விவாதப் போட்டி, பட்டிமன்றம், நவீன விளக்கக்காட்சி போட்டி, பாட்டுப் போட்டி, நடனப் போட்டி, உறுதி மொழி ஏற்றல் மற்றும் விழிப்புணர்வு பேரணி போன்ற பல்வேறு நிகழ்வுகள் நடத்தப்பட்டன. மேலும் ஒப்பந்தகாரர்கள், துறைமுக ஊழியர்கள், அதிகாரிகள் மற்றும் பள்ளி மாணவர்களுக்கு ஊழலை பற்றிய விழிப்புணர்வு கருத்தரங்குகள் நடைபெற்றது.
இவ்விழாவில் இறுதியாக போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகள் மற்றும் ஊழியர்களுக்கு பரிசுகளை வழங்கிப் பாராட்டினார்கள். இவ்விழாவில் துறைமுக குழு உறுப்பினர்கள், துறை தலைவர்கள், அதிகாரிகள், ஆசிரிய பெருமக்கள் மற்றும் மாணவ மாணவிகள் கலந்து கொண்டார்கள்.