சேர்வலாறு – பாபநாசம் அணைகளில் இருந்து சுமார் 15 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் தாமிரபரணி ஆற்றில் குளிப்பதற்கும் நீந்துவதற்கும், மீன் பிடிப்பதற்கும் அல்லது வேறு எந்த வேலைக்கும் செல்ல வேண்டாம் என மாவட்ட ஆட்சியர் கி.செந்தில்ராஜ், வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், திருநெல்வேலி மாவட்டம் தாமிரபரணி நதி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் சேர்வலாறு – பாபநாசம் அணைகளில் இருந்து சுமார் 15 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால் மணிமுத்தாறு மற்றும் கடனா நதி நீருடன் நாளை காலை தூத்துக்குடி மாவட்டம் மருதூரில் வந்து சேரும் என எதிர்பார்க்கப்படுகிறது. நமது மாவட்டத்தில் தாமிரபரணி ஆறு மருதூர், அகரம், ஸ்ரீவைகுண்டம், ஆத்தூர், முக்காணி வழியாக புன்னக்காயலில் கடலில் கலக்கிறது. தாமிரபரணி ஆற்றில் தற்போதுள்ள 2500 கன அடியில் 15,000 கன அடி நீர் திறக்கப்படும்.
எனவே தாமிரபரணி ஆற்றில் குளிப்பதற்கும் நீந்துவதற்கும், மீன் பிடிப்பதற்கும் அல்லது வேறு எந்த வேலைக்கும் செல்ல வேண்டாம். நாளை ஞாயிற்றுக்கிழமை என்பதால் தாமிபரணியில் மக்கள் அதிக அளவில் கூட வாய்ப்புள்ளது. எனவே அதற்குக் கண்டிப்பாகத் தடை விதிக்கப்பட்டுள்ளது. மக்கள் நாளை ஆற்றின் அருகே கூடிப் பார்க்கக் கூட வேண்டாம். வருவாய், காவல் துறை மற்றும் உள்ளாட்சி அமைப்பு ஊழியர்கள் உள்ளூர் அளவில் தகுந்த எச்சரிக்கை விடுக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் ஆற்றில் இறங்குவதைத் தடுக்க வேண்டும்.
மக்கள் ஆற்றில் நுழைவதைத் தடுக்க அனைத்து வழிமுறைகளையும் செயல்படுத்த வேண்டும். தாமிரபரணி ஆற்றின் தாழ்வான பகுதிக்கு அருகில் அடையாளம் காணப்பட்ட குடியிருப்புகளில் நீர் அதிகரிப்பு குறித்துக் கண்காணிக்கப்படும். நாளை காலை முன்முயற்சி நடவடிக்கையாக அடையாளம் காணப்பட்ட நிவாரண முகாம்களுக்கு மாற்றப்படுவார்கள். பொதுமக்கள் இதுதொடர்பாக ஏதேனும் தகவல் வேண்டும் என்றால் கட்டணமில்லா தொலைப்பேசி எண் 1077, 0461 – 2340101, வாட்ஸ் அப் எண்கள் 94864 54714, 94883 13199 ஆகிய எண்களைத் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், தெரிவித்துள்ளார்.


