செய்துங்கநல்லூரில் மிகவும் பழமையான சிவன் கோயில் உள்ளது. இந்த கோயிலில் சிவகாமி சமேத வியாக்கிரபாதீஸ்வரர் அருள் புரிகிறார். சுமார் 15 வருடங்களுக்கு முன்பு பழுதடைந்த இந்த கோயிலை ஆன்மிக பேரவையை சேர்ந்த அன்பர்கள் பராமரித்தனர். இதன் பயனாக கோயில் திருப்பணி செய்யப்பட்டு, அதன் பின் கும்பாபிசேகம் நடந்தது. தொடர்ந்து இந்த கோயிலில் பள்ளியறை பூஜை, 63 நாயன்மார்கள் பிரதிட்சை, கொடி மரம் பிரதிட்சை போன்ற திருப்பணிகள் நடந்தது. அதோடு மட்டுமல்லாமல் தென் தில்லை என போற்றப்படும் இந்த கோயிலில் 10 நாள் திருவிழாவும் நடந்தது. தொடர்ந்து சப்பர பவனியும் நடைபெற்றது. பழமையான காலத்தில் இங்குள்ள ஐம்பொன் சிலைகள் பாதுகாப்புக்காக நெல்லையப்பர் கோயிலில் கொண்டு வைக்கப்பட்டது. இந்த சிலைகளை மீண்டும் செய்துங்கநல்லூர் சிவன் கோயிலுக்கு கொண்டு வர பக்தர்கள் நடவடிக்கை எடுத்து வந்தனர். இதற்காக மிகவும் பிரமாண்டமான பாதுகாப்பு பெட்டக வசதியை கோயிலில் கட்டி ஏற்பாடு செய்யப்பட்டது. தற்போது இந்த பணி முடிவடைந்து விட்டது. இதனால் விரைவில் இந்த கோயிலில் உள்ள ஐம்பொன் சிலைகள் மீண்டும் செய்துங்கநல்லூர் சிவன் கோயிலுக்கு வந்து விடும் என்பதால் பக்தர்கள் சந்தோசமடைந்துள்ளனர். இதற்காக ஏற்பாடு செய்த கோயில் நிர்வாக அதிகாரி கோபால மணிகண்டன், இன்ஸ்பெக்டர் நம்பி, அறங்காவலர் குரு மாரியப்பன் உள்பட அதிகாரிகளுக்கு நன்றியை தெரிவித்தனர்.


