பொம்பள சிரிச்சா போச்சா?
அது பெண்களோ ஆண்களோ சிரித்தால்தான் அழகு.
மருத்துவர்களும் சிரிப்பே சிறந்த இயற்கை மருந்து என்கிறார்கள். வாய்விட்டு சிரித்தால் நோய்விட்டுப் போகும் என்பது இதற்காக தான்.
எப்போதும் சந்தோஷமாயிருங்கள் என்று விவிலியம் அறிவுறுத்துகிறது.
குழந்தைகள் முதல் முதியவர்கள்வரை சிரிப்பைத் தாங்கிய அகமும் முகமுமே இயற்கையான அழகைப் பிரதிபலிக்கும்.மட்டுமல்ல மரணத்தைத் தள்ளிப் போடும் அருமருந்து.
புன்னகையே உலக பொதுமொழி என்றால் அது மிகையாகாது.
ஆனால் நம் முன்னோர்கள் வகுத்த சில மரபுகளுள் நிறைய பெண்களுக்கு , அவர்களது சுதந்திரத்திற்கு எதிரானவையாகவே இன்றும் செயல்பாட்டில் உள்ளது வருந்ததக்கது.
பெண் பிள்ளைகள் சிரிக்க கூடாது. சிரித்தால் அவள் நற்குணமுடையவளல்ல. பொம்பள சிரிச்சா போச்சு புகையிலைய விரிச்சா போச்சு என்று மக்கள் புகையிலையே கதியென்று கிடந்த காலங்களில் ஒரு ரைமிங்கிக்காக கூறபட்ட சொலவடைதான் இது. உண்மையானது அல்லவே அல்ல.
18 ஆம் நூற்றாண்டில் ஒரு அயல்நாட்டு எழுத்தாளர் கூறுகிறார்…இந்தியப் பெண்கள் சிரிப்பதே இல்லை என்று. ஆம்….பெண் குழந்தைகள் வளர்க்கப்படும் போது சத்தமிட்டு சிரித்தல் தவறு. அவர்கள் சத்தம் வெளியில் கேட்காமல் பேச வேண்டும்.குனிந்த தலை நிமிராமல் நடக்க வேண்டும் ….இதெல்லாம் தான் சிறந்த பெண்ணிற்கான அடையாளமாக சமூகம் வரையறுத்து வைத்திருந்தது. பெண்ணின் அறியாமையை பேரழகாக இரசித்து மகிழும் காலகட்டமும் இருந்தது, இன்னமும் இருக்கிறது.
இன்று இந்நிலைப்பாடு படிப்படியாக குறைந்து வருகிறது. இருந்தாலும் பெண் குழந்தைகள் சிரித்து மகிழ்ந்து தங்கள் கருத்துக்களைச் சுதந்திரமாக எடுத்துரைக்கும் மனப்பான்மைகளை வளர்க்க வேண்டியது ஒவ்வொரு பெற்றோர் மற்றும் சமூகத்தின் கடமையுமாகும்.
பெண் சிரிக்கும் போது பேரழகுடையவளாகிறாள். இதனால் ஒருவேளை எதிர்பாலினத்தவரால் கவரப்படலாம் என்ற எண்ணம் தான் இந்த சொலவடைக்கான காரணம். ஆனால் இப்போது நம் இளையத் தலைமுறைகள் சிரிப்பை இரசிப்போடு விட்டுவிடுகிறார்கள் அது மனித இயல்பு… இல்லையில்லை உயிரினங்கள் அனைத்துக்குமான இயல்பு. எனவே பெற்றோரே உற்றாரே பெண் குழந்தை பிறந்தது முதல் சிரித்து மகிழ கற்றுக் கொடுங்கள்.ஏமாற்றத்தையும் ஏமாற்றுக்காரர்களையும் இனம் காணும் கூரிய அறிவை பெண்களுக்குள் வளருங்கள்.
புன்னகையை எப்போதும் முகத்தில் தவழவிட்டு வாழும் அழகுணர்ச்சியை இரசித்து பாராட்டி வளர்ப்போம். அப்போதுதான் ஆரோக்கியமான மனநிலையோடு தெளிந்த சிந்தையோடு பெண்கள் இயல்பாகவே வளர ஏதுவாக அமையும்.
கவலைகளையும் பிரச்சனைகளையும் எளிதாக எடுத்து அவற்றை மேற்கொள்ளும் மனப்பான்மைகளை அனைவருக்குள்ளும் ஏற்படுத்துவோம்.
மனத்திற்குள் அடக்கி வெளியில் சொல்லமுடியாத பெருங்கவலைகளே ஆயுளைக் குறைக்கவல்ல சக்திவாய்ந்தவை. அவற்றை அகற்றி எப்போதும் வெற்றி மனப்பான்மையோடு சிரிப்பென்னும் தன்னம்பிக்கை ஆயுத்ததை தரித்துக் கொள்ள வழிவகைச் செய்ய அனைவரும் முனைவோம்.
ஆணுக்குரிய அனைத்து உரிமையும் சுதந்திரமும் பெண்ணினத்திற்கும் உண்டென்ற உணர்வை இருபாலினத்தவரும் உணரும் விழிப்புணர்வை ஏற்படுத்துவோம்.உலகை அழகாக்குவோம் கபடற்ற புன்னகையால்..!
Dr.Jansipaulraj
Tirunelvely.


