தூத்துக்குடி புதிய துறைமுகம் மதுரை பைபாஸ் சாலையில், விதிமுறைகளை மீறி அனுமதிக்கப்பட்ட அளவை விடக் கூடுதலாகப் பாரம் ஏற்றி வந்த 2 டாரஸ் லாரிகளைப் போக்குவரத்துப் பிரிவு காவல்துறையினர் பறிமுதல் செய்து அபராதம் விதித்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டக் காவல் துறை கண்காணிப்பாளர் அபிஷேக் குப்தா உத்தரவின் பேரிலும், தூத்துக்குடி நகரத் துணை காவல் கண்காணிப்பாளர் சுனில் ஆலோசனையின் படியும், மாநகரப் போக்குவரத்துச் சரகக் காவல் துறை ஆய்வாளர் சுணை முருகன் தலைமையிலான காவல்துறையினர் தூத்துக்குடி புதிய துறைமுகம் மதுரை பைபாஸ் சாலையில் உள்ள எப்சிஐ குடோன் அருகே வாகனச் சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது வஉசி துறைமுகத்திலிருந்து சரக்குகளை ஏற்றி வந்த டாரஸ் லாரிகளை நிறுத்திக் காவல்துறையினர் சோதனையிட்டனர். இச்சோதனையில், 2 டாரஸ் லாரிகளில் அனுமதிக்கப்பட்ட அளவை விடப் பல மடங்கு கூடுதலாக அதிபாரம் ஏற்றி வந்தது கண்டறியப்பட்டது. இதையடுத்து அந்த 2 லாரிகளையும் காவல்துறையினர் பறிமுதல் செய்து காவல் நிலையத்திற்குக் கொண்டு சென்றனர்.
விதிமுறைகளை மீறிப் பாரம் ஏற்றியதற்காக 50 டன்னுக்கும் அதிகமாகப் பாரம் ஏற்றி வந்த லாரிக்கு ரூபாய் 50,000 அபராதம் விதிக்கப்பட்டது. மேலும், 45 டன் பாரம் ஏற்றி வந்த மற்றொரு லாரிக்கு ரூபாய் 40,000 அபராதம் விதிக்கப்பட்டது. இதன் மூலம் விதிமீறலில் ஈடுபட்ட 2 லாரிகளுக்கும் சேர்த்து மொத்தம் 90,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாநகரப் பகுதியில் இன்று நடத்தப்பட்ட பல்வேறு போக்குவரத்து வாகனச் சோதனைகளில் ஒட்டுமொத்தமாக ஒரு லட்ச ரூபாய்க்கும் மேல் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.


