“பொருநை” நாவல்
ஆசிரியர்: சுந்தர பாண்டியன்
காவ்யா வெளியீடு 2023
திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் அருகே கால்கரை சுடலைமுத்துத் தேவர் ( நாவலாசிரியரின் தந்தை) நூற்றாண்டு நினைவாக வெளியான நாவல் இதுவாகும் ..
சுந்தர பாண்டியன் என்ற புனைபெயரில் களவு, அம்மா, வரம், சாபம் ,சுந்தரபாண்டியன் சிறுகதைகள் ஆகிய சிறுகதைகளும் மற்றும் கன்னடியர் மகள், திப்பு சுல்தான், சாணக்கியன், ஆராரோ, அந்தி ஆகிய நாவல்களும்; அக்னி என்ற பெயரில் ஒரு நாடகமும் மேலும் பகல் கனவுகள் என்ற கவிதை நூலும் எழுதியுள்ளார்.
தொடக்கமும் முடிவும்:
ஆறுமுகம் இந்தக் கதையில் வரும் தலைமைப் பாத்திரம் .”வச்ச கண்ணு எடுக்காம பார்த்துக்கிட்டே இருந்தான்…”
பொருநை ஆத்துல தண்ணி அடிச்சு புரண்டுகிட்டு போச்சு இவ்வளவு தண்ணிய அவன் ஒன்னா சேர்த்து பார்த்ததே இல்லை” என்று நாவலின் கதை தொடங்குகிறது
“” பாட்டுக்கு பாரதி கதைக்கு புதுமைப்பித்தன் நாடகத்துக்கு சங்கரதாசு, குறவஞ்சிக்கு திரிகூட ராசப்ப கவிராயர் ரசனைக்கு டி கே சி என்று தமிழையும் வளர்த்தது பொருளை திரை கடலோடியும் திரவியம் தேடணும் நதிகளைக் கடந்து நற்றமிழ் தேடணும் தேடுவோம்” என்று நாவலை முடித்துள்ளார்
நாட்டுப்புறவியல் சிந்தனை:
ஆறு அவனுக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு ஆனால் கடல்தான் அவனுக்குப் பிடிக்காமல் போச்சு. அதற்கு ஆசிரியர் கூறும் காரணம் நன்றாக இருக்கும் ஆறாம் கிளாஸ் படிக்கும் போது உடம்புல சிரங்கு( புண்) வந்துவிடும். அவனுக்கு அவனை கன்னியாகுமரி போயிருக்கும் போது கடல் தண்ணி பட்டால் புண்ணு குணமாகும் என்று சொல்லி தோளில் தூக்கிக் கொண்டு போய் சண்முக கோனார் ஒரு முக்கு முக்கி எடுத்தாரு அவ்வளவுதான் சிரங்குல உப்பு தண்ணி பட்டதும் காந்தத் தொடங்கிவிட்டது.
“”ஏ தேவிடியா மவனே செருக்கி மவனே நீ விளங்கவே மாட்ட பேதியில போயிருவ புழுத்துதான் சாவ” என்று ஆறுமுகம் கதறிய கதறல் கடற்கரையில் நின்று அவர்களுக்கு சிரிப்பாணிக்கூத்தாக போச்சு..
“என்னடா ஓலைப்பாயில் நாய் போன்ற மாதிரி சத்தம் கேட்குது எவன்டா அது? “
போன்ற வட்டார வழக்குச் சொலவடைகள் இவருடைய நாவலில் இடம் பெறுவது ஆச்சரியப்படுவதற்கு இல்லை. ஏனெனில் இவர் ஒரு நாட்டுப்புற ஆய்வாளர். அறிஞர் என்று சொல்லலாம்.
பாளையங்கோட்டை வரலாறு:
கதாசிரியர் ஆறுமுகம் என்ற பாத்திரமாக நாவல் முழுவதும் வாழ்ந்து காட்டுகிறார் .அவருடைய எண்ணங்கள் அவ்வப்போது ஆங்காங்கே வெளிப்படும். உதாரணமாக “மனுஷனுக்கு தான் பொறப்பு பொழப்பு போக்கு எல்லாம் ஆத்துக்கு எல்லாம் ஒன்றுதான் இது தீராநதி” என்று சொல்கிறார்
” சுலோச்சனா முதலியார் பாலம் இதுதான் பாளையங்கோட்டையையும் திருநெல்வேலியையும் இணைக்குது மக்க இங்கிருந்து அங்கேயும் அங்கிருந்து இங்கேயும் போய் வர கஷ்டப்பட்டாங்க வெள்ளம் குறைவா இருந்தா பரிசல் இல்லன்னா பல நாள் காத்திருக்க வேண்டும். முதலியார் தன் பொண்டாட்டி நகை நட்டுகளை அடகு வைத்து பாலம் கட்டினாரு 125 வருஷம் ஆகுது. இருந்தா மனுஷன் எப்படி இருக்கணும் ஆறு இருக்கிற வரைக்கும் அவர் மனைவி பெயர் இருக்கும்”” என்று இந்த நாவல் வழி நடந்த உண்மையை எடுத்துச் சொல்கிறார்
பாளையங்கோட்டை வட்டாரத்தில் அமைந்துள்ள இடங்கள் குறித்த வரலாற்றுச் செய்திகள் நாவலில் ஆங்காங்கே தந்துள்ளார். மனகாவலம் பிள்ளை பற்றி அவருடைய இலவச மருத்துவமனை, திருமண மண்டபம் பற்றி எடுத்துச் சொல்கிறார்.
மனம் தொட்ட வரிகள்:
நாவலில் மனம் தொட்ட வரிகள் சில உண்டு.
‘கல்லால் ஆன பில்டிங் அதனால் கல்லூரி என்கிறார்களோ?’பக்.22
“இதுதான் ஃபைன் பில்டிங்.ஃபைன் துட்டிலேயே கட்டியது “பக் 25
காக்கரையில் இருக்கிற அப்பாவுக்கும் வெளியூரில் இருக்கிற அப்பாவுக்கும் ரொம்ப வித்தியாசம் இருப்பதாக உணர்ந்தான் ஆறுமுகம்.
“மகன் நல்ல சாப்பிடணும்னு நினைச்சு அப்பா மீண்டும் அம்மாவானார்”
வெளியே புறப்பட்டுப் போகிறவர்களை எங்கே போகிறீர்கள்? என்று கேட்கக் கூடாது. “தூரமா? “என்று கேட்டான். என்று நெல்லை மாவட்டப் பழக்க வழக்கங்களில் பண்பாட்டில் ஒன்றை எடுத்துக் கூறுகிறார்.
ஆறுமுகம் என்ற பெயரில் கதாசிரியர் பாளையங்கோட்டை சேவியர் கல்லூரியில் படித்தது-ஆண்டு விழாக்களில் நாடகம் நடித்தது- அகில இந்திய வானொலி சென்று கவியரங்கம் படித்தது ஒன்று விடாமல் பதிவு செய்துள்ளார் .
அவருக்குச் சொல்லிக் கொடுத்த டக்ளஸ் ஐயா, அண்ணாமலை ஐயா ஆகியோரின் வழிகாட்டுதல்கள் பற்றிய தகவல்கள் நாவலை நடத்திச் செல்கின்றன. மொத்தத்தில் கதாசிரியரின் இளமைக்கால அனுபவங்களை ‘பின்னோக்கு உத்தி’யில் சொல்லி இருப்பது நம்மை வாசிக்க வைக்கிறது. .அதே கல்லூரியில் படித்த அதே பகுதியில் நடந்து பழகி வந்த ஒவ்வொருவரும் இதைப் படிக்கும் போது இந்த நாவலில் தானும் வாழ்ந்து வருவதாக உணர முடியும். நாவலை வாங்கிப் படித்து ‘கருத்து’ சொல்லுங்கள்.
கதாசிரியர்: காவ்யா சண்முகசுந்தரம்
044-23726882 அலைபேசி: 98404 80232
என்றும் அன்புடன்
முனைவர் வ ஹரிஹரன்
தமிழ்ப் பேராசிரியர்
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் கல்லூரி
மேலநீலிதநல்லூர்.


