நான் ஐ.ஏ.எஸ். ஆக வேண்டுமென்றும் முதலில் நினைக்கவில்லை. இருதய அறுவை சிகிச்சை நிபுணராக வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் கி.செந்தில்ராஜ் தெரிவித்தார்
தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் ஸ்ரீகுமரகுருபரர் சுவாமிகள் கலைக் கல்லூரி பட்டமளிப்பு விழாவில் மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், இன்று (13.04.2022) அறிவுறுத்தி பேசியதாவது: மாவட்ட ஆட்சியராக வேண்டுமென்றால் ஐ.ஏ.எஸ். தேர்ச்சி பெற்று பின்னர் சுமார் 5 முதல் 7 வருடங்கள் ஆகும். மாவட்ட ஆட்சியராக உடனடியாக மாற முடியாது. உதவி ஆட்சியர் பயிற்சி, சார் ஆட்சியர் என படிப்படியாக பணியாற்றிய பிறகு தான் ஆட்சியராக முடியும்.
நான் புதுக்கோட்டை அறந்தாங்கியில் படித்து வந்தேன். பின்னர் எனது அப்பா அரசு அதிகாரி என்பதால் பணி மாறுதலாக பின்னர் புதுக்கோட்டையில் படித்தேன். பின்னர் திருநெல்வேலி மருத்துவ கல்லூரியில் படித்தேன். நான் ஐ.ஏ.எஸ். ஆக வேண்டுமென்றும் முதலில் நினைக்கவில்லை. இருதய அறுவை சிகிச்சை நிபுணராக வேண்டும் என்று நினைத்தேன்.
ஆரம்ப சுகாதார அதிகாரியாக முதலில் பணியாற்றி வந்தபோது நகராட்சி ஆணையர் விடுமுறையில் சென்றதால் அப்போது மாவட்ட ஆட்சியராகவும், தற்போது செய்தித்துறை அரசு செயலராக பணிபுரிந்து வரும் மகேசன் காசிராஜன் எனக்கு அந்த வாய்ப்பினை தந்தார்கள். சுமார் 6 மாதகாலம் பொறுப்பு ஆணையராக வேலை பார்த்தேன். இந்த நேரத்தில்தான் நிர்வாகம் பற்றி தெரிந்தது. டி.என்.பி.எஸ்.சி குரூப் 1 மற்றும் ஐ.ஏ.எஸ். தேர்வு எழுதினேன். தமிழ் அதிகமாக படிக்க வேண்டும். இப்போது இருந்தே தயார் செய்ய வேண்டும். தொடர்ந்து படிக்க வேண்டும்.
உங்கள் கல்லூரி 57 வருடங்களாக செயல்பட்டு வருகிறது. இதேபோல் ஸ்ரீவைகுண்டம் மிகவும் பழமையானது. இங்கு தாலுகா அலுவலகம், சப் கோர்ட் போன்றவை பழமையானது. ஆதிச்சநல்லூர் சென்று பார்த்தால் 4000 ஆண்டுகள் பழமையை தெரிந்துகொள்ளலாம். அசோகர் கல்வெட்டுகளில் தமிழகத்தில் சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் ஆட்சி செய்ததாக தெரிவிக்கப்படுகிறது. தமிழ்நாட்டில் இருக்கிற எழுத்துகள் பிராமி எழுத்துகள் ஆகும்.
பிரிட்டிஷ் சர்வேயர் ஆய்வு செய்ததில் பல கல்வெட்டுகள் கிடைத்தன. அமராவதி, சாஞ்சி, நாளந்தா பகுதிகளில் பல கல்வெட்டுகள் இருக்கின்றன. இதே பகுதியில் அலெக்சாண்டர் என்பவர் ஆய்வு செய்தார். எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட சின்னங்கள் கிடைத்துள்ளன. எழுத்துகள் லத்தீன் மொழியில் இருந்தன. அனைத்து கல்வெட்டுகளிலும் மொழி கண்டுபிடிக்க முடியவில்லை. ஆனால் தமிழகத்தில் கிடைத்த கல்வெட்டுகள் முதலில் படிக்க முடியவில்லை. தமிழ்நாட்டில் இருந்த கல்வெட்டுகள் தமிழ் பிராமி என்று பின்னர் கண்டறியப்பட்டுள்ளது. இந்தியாவில் கிடைத்த 1 லட்சம் கல்வெட்டுகளில் 60 சதவீதம் அதாவது 60000 கல்வெட்டுகள் தமிழில் உள்ளன.
தமிழ் நாகரிகம் 3000 ஆண்டுகள் தொன்மையானது. பொருநை நாகரிகம் கொற்கை, சிவகளை, ஆதிச்சநல்லூர் பகுதிகளுக்கு சென்று பார்க்க வேண்டும். கல்லூரி நட்பு கடைசி வரைக்கும் தொடரக்கூடிய நட்பு அந்த நட்பை இழக்காமல் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என தெரிவித்தார். அதனைத்தொடர்ந்து இளநிலை மற்றும் முதுநிலை மாணவ, மாணவியர் 355 பேருக்கு பட்டங்களை மாவட்ட ஆட்சியர் மரு.கி.செந்தில்ராஜ், வழங்கினார். நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர், தாளாளர், பேராசிரியர்கள், மாணவ, மாணவியர் கலந்துகொண்டனர்.


