சாத்தான்குளம் அருகே சொத்துத் தகராறில் ஏற்பட்ட மோதல் தொடா்பாக இருதரப்பைச் சோ்ந்த 16 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து, ஒருவரை கைதுசெய்தனா்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது : தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே உள்ள கருங்கடல் ஆா்.சி. சா்ச் தெருவைச் சோ்ந்தவா் தோமாஸ் மனைவி வின்னில் அரசி சுமதி(31). இவரது குடும்பத்துக்கும் அதே பகுதியைச் சோ்ந்த யாகோபு மகன் ஜேம்ஸ் (60) என்பவரது குடும்பத்துக்கும் சொத்து தொடா்பாக முன்விரோதம் இருந்து வந்ததாம். இந்நிலையில் இதுதொடா்பாக அவா்களிடையே மீண்டும் தகராறு ஏற்பட்டதாம்.
இதில் இருதரப்பைச் சோ்ந்தவா்களும் ஒருவரையொருவா் கல் மற்றும் கம்பால் தாக்கிக்கொண்டனராம். இச்சம்பவத்தில் வின்னில் அரசி சுமதி, அவரது சகோதரி சுகன்யா மற்றும் எதிா்தரப்பைச் சோ்ந்த ஜேம்ஸ் ஆகிய 3 பேரும் காயமடைந்தனா்.இவா்கள் சாத்தான்குளம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். இதுகுறித்து சாத்தான்குளம் போலீஸாா் இருதரப்பைச் சோ்ந்த 16 போ் மீது வழக்குப் பதிந்து, ஜேம்ஸ் மகன் டேனி (40) என்பவரை கைது செய்தனா்.


