செய்துங்கநல்லூர் காவல்நிலையத்தில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.
தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள செய்துங்கநல்லூர் காவல்நிலையத்தில் காவலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்ட சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.
இதற்காக காவல்நிலையம் முன்பு தோரணம் கட்டி, பொங்கல்பானை வைத்து வழிபாடு செய்தனர். இதில் ஆண் காவலர்கள் தமிழரின் பாரம்பரிய உடையான வேஷ்டியும், சட்டையும், பெண் காவலர்கள் சேலையும் அணிந்து உறவினர்களுடன் கலந்து கொண்டனர்.
இதில் ஸ்ரீவைகுண்டம் டிஎஸ்பி மாயவன் தலைமையில் காவலர்கள் மற்றும் பொதுமக்கள் பொங்கலிட்டு மகிழ்ந்தனர். கலந்து கொண்ட அனைவருக்கும் இலவசமாக மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் ஸ்ரீவைகுண்டம் நீதிபதி மயில்சாமி, செய்துங்கநல்லூர் காவல் ஆய்வாளர் பத்மநாபபிள்ளை, உதவி ஆய்வாளர்கள், ராதாகிருஷ்ணன், கருத்தையா, அஜய்குமார், ராமகிருஷ்ணன், காவலர்கள், பெண் காவலர்கள், பொதுமக்கள் சார்பில் கால்வாய் பஞ்சாயத்து தலைவர் சேதுராமலிங்கம், வழக்கறிஞர் தில்லை, கோதர், ஆட்டோ ஓட்டுநர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


