( இன்றைய *நெல்லை டைம்ஸ்* நாளிதழில்..)
*தைப் பிறந்தால் வாழ்வில் நல்வழி பிறக்கும்* என்பது தமிழரின் அசைக்க முடியாத நம்பிக்கை. ஆம்… தை மாதமே இளவேனில் காலத்து தொடக்கம். மஞ்சள், கரும்பு,இனிப்பு, குலவையொலியென மங்கலகரமாக பொங்கலிட்டு வசந்தத்தை வரவேற்கும் முகமாகவே இப்பொங்கல் திருநாள் தை முதல் தினத்தில் தொடங்குகிறது.
தமிழின் காதலன் பாவேந்தர் பாரதி தாசனும் ,*தரணி ஆண்ட தமிழனுக்கு தை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு* என்று முழக்கமிடுகிறார்.
உலகின் பல நாடுகளிலும் வசந்தகாலத்தை எதிர்நோக்கும் இளவேனிற்கால தொடக்கத்தையே புத்தாண்டாக்கி அனுசரிக்கின்றனர்.
தமிழகத்தில் சாதி சமய வேறுபாடுகளைக் கடந்து, நட்பு, உற்றார் உறவினர் என இணைந்து கொண்டாடப்படும் இப்பொங்கல் பண்டிகை ,ஏழை, பணக்கரன்,ஆள்பவன், அடங்குபவன், ஆண்,பெண் என்ற எவ்விதபாகுபாடும் இன்றி சமத்துவத்தின் குறியீடாக கொண்டாடப்படுகிறது.ஆரம்ப காலங்களில் அறுவடை திருநாளாகவே கொண்டாடப்பட்டு வந்திருக்கிறது.
பொங்கல் விழா என்றாலே அனைவருக்கும் கொண்டாட்டம் தான். பொங்கலுக்கு சில வாரங்களுக்கு முன்பே ஊர்புறங்கள் ஆரவாரத்தால் களைக்கட்டும். பொங்கல் திருநாளுக்காக ஆயத்தமாகும் முந்தைய வாரங்களும் கூட திருவிழாக் கால மகிழ்ச்சிதான் மக்களுக்கு.
பழைய ஆண்டின் வேண்டாத பொருட்களை அப்புறப்படுத்தல், வீட்டிற்கு வெள்ளையடித்தல் என்று மக்கள் பரபரப்பாக இயங்கி கொண்டிருப்பர்.
குறிப்பாக ,திருமணம் செய்து கொடுக்கப்பட்ட பெண்பிள்ளைகளுக்கு அவர்களது சகோதரர்கள் பொங்கலுக்குத் தேவையான பொருட்களான கரும்பு, பச்சரிசி,பொங்க வைக்க புதிய பானை, கரண்டிகள், கருப்பட்டி, பனங்கிழங்குகள்,வாழைத் தார், மஞ்சள் குலைகள், காய்கறிகள், ,செலவுக்கு பணம், என்று சுமந்து கொண்டு தங்கள் வசதிகளுக்கு ஏற்ற வாகனங்களில் ஏற்றி அவர்களின் வீடுகளில் பெருமிதத்தோடு இறக்குவதில் பெருமகிழ்ச்சியடைகின்றனர். இதை நம் தமிழர்கள் *பொங்கப்படி* ,*பொங்கச்சீர்*
கொடுத்தல் என்ற மரபாக ஆண்டுதோறும் செய்து பிறந்த வீட்டிற்கும் புகுந்த வீட்டிற்குமான உறவை வலுப்படுத்தி மகிழ்கின்றனர்.
ஆரம்ப காலங்களில் மாட்டுவண்டிகளில் பொங்கப்படி கொண்டு செல்வர். இன்றைய நாட்களில் பெரும்பாலும் ஆட்டோக்களில் கொண்டு செல்லப்படுகிறது.இப்போதும் பொங்கலுக்கு முந்தைய நாள் கிராமங்களில் தெருக்கள் தோறும் கட்டுக் கட்டாக கரும்புகள் கட்டப்பட்ட ஆட்டோக்கள் அலைமோதுவதை காணமுடியும்.
*இந்தப் பொங்கப்பொடி யாரு வீட்டிற்கு போகுது ?*_ என்று வீட்டு முற்றத்தில் அமர்ந்தபடியே அடுத்தவீட்டு ஆட்களிடம் விசாரிப்பதும் அதைக் குறித்து கதையளப்பதுமாக முதியோர்களது நேரங்காலம் சுவாரஸ்யமாக நகரும்.
துவக்க நாளான போகிப்பண்டிகை முதல், தொடர்ந்து மூன்று நாட்களுமே பண்டிகைக்கான ஆனந்தத்திற்கு அளவே இராது.
பொங்கல் விழாவின் உயிரோட்டமான நிலைக்கு பொங்கல் நாட்களில் நடைபெறும் விளையாட்டு நிகழ்ச்சிகள் முக்கிய காரணமாகிறது. ஊரில் உள்ள ஏதாவது ஒரு காலியிடத்தை விளையாட்டு மைதானமாக்கி, அதில் காலை முதல் மாலைவரை பலவகையான பாரம்பரிய விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்படுகிறது.
நடக்கப்படித்த சிறுவர்கள் முதல் நடக்க இயலாத வயோதிகர்கள்வரை இதில் கலந்து கொள்ள மிகவும் ஆர்வம் காட்டுவர்.
மின் ஒலிபெருக்கி அமைத்து அதில் விளையாட்டுப் போட்டிக்கான அழைப்பும் விமர்சனமும் வெகு விமரிசையாக நடைபெறும்.
மைக்கைப் பிடித்து மைதானத்திற்கு வராத நபர்களின் பெயர்களைக் கூறி அழைப்பதும் நகைச்சுவையாக பேசுவதுமாக ஊரெங்கும் கட்டப்பட்டிருக்கும் ஒலிபெருக்கி மூலமாக திசையெங்கும் சப்தம் கேட்டுக் கொண்டே இருக்கும்.இடையிடையே இனிய திரைப்படப் பாடல்கள் காற்றில் மிதக்கும்.
ஒரே ஊரார் என்பதால். தங்களது உறவுமுறையாரை ஒலிபெருக்கியில்
அழைப்பதும் கேலி செய்வதும் வீட்டில் இருந்து கொண்டே அவற்றைக் கேட்டு விழுந்து விழுந்து சிரித்து மகிழ்வதுமாக விழாக் கோலமாய்க் காட்சியளிக்கும் ஊரெங்கும்.
ஓட்டப் போட்டி, கல் எடுத்தல், கயிறு இழுத்தல், உரி அடித்தல், நீளம் தாண்டுதல், கொக்கோ , கபடி, கயிறு தாண்டுதல், கோலப் போட்டி,பாட்டிலில் நீர் நிறப்புதல், நொண்டி அடித்தல், கண் கட்டி பொட்டு வைத்தல், ஸ்லோ சைக்கிள் ரேஸ், உணவு உண்ணும் போட்டி, ஊசியில் நூல் கோர்த்தல், …..போன்ற விளையாட்டுகள் சிறுவர்கள், வாலிபர்கள், திருமணமானவர்கள், திருமணமாகாதவர்கள் ,ஆண்கள், பெண்கள்…என்று பிரித்து பிரித்து நடைபெறும்.
இதனோடு ஜல்லிக்கட்டு, மாட்டுவண்டடிப் பந்தயங்களும் குறிக்கப்பட்ட இடங்களில் புறவெளிச் சாலைப் பகுதிகளில் பாதுகாப்பானமுறையில் நடைபெறுகின்றன.
போட்டிகளில் வெற்றிப் பெறுவோரை வாழ்த்தி மகிழ்வதும் தோற்பவரையும் தங்கள் நகைச்சுவையான பேச்சுத்திறனால் பேசிக் கலாய்த்து மகிழ்விப்பதுமாக ஒரே கலகலப்பாக இருக்கும்.
தங்களது சொந்த ஊரில் உறவினர்களுக்கு முன்னிலையில் விளையாடுவது , மேடையில் பேசுவது போன்ற நற்பழக்கங்களைத் தயக்கமின்றி கற்றுக் கொள்ள இப்போட்டிகள் உதவுகின்றன. வயதில் முதிர்ந்தவர்களும் தங்களது இளமைக்கால அனுபவங்களை மீண்டும் உய்த்துணரவும் சிறு சிறு போட்டிகளில் வெற்றிப் பெற்று தங்களது திறமையை நிரூபித்து மகிழவும் இவ்விழா வழிவகுக்கிறது.
ஒலிபெருக்கியில் தங்களது குழந்தைகளின் பெயரையும் அவர்கள் பேசுவதையும் கேட்டு ரசிப்பதும் பெரியவர்களுக்கு பொங்கல் நாளில் பேரானந்தத்தையே ஏற்படுத்திவிடுகிறது.
பண்டிகையின் இறுதி நாள் இரவு பரிசளிப்பு நிகழ்ச்சி நடைபெறும்.வீட்டிற்கு ஒரு பரிசாவது கிடைக்கும் விதத்தில் அத்தனைபேரும் விளையாட்டுகளில் ஈடுபடுவதும் மகிழ்வதும் அடுத்தாண்டு பொங்கல் விழா வரும் வரை நினைவில் நின்றாடும் …!
உலகின் மனிதக் குலத்தைத் தம் உழைப்பால் வாழ வைத்துக் கொண்டிருக்கும் உழவர் பெருமக்களுக்கு நன்றியையும் அவர்தம் வாழ்கை நிலையை உயர்த்தும் நோக்கத்தை அனைவரும் ஒன்றிணைந்து சிறம்மேற் கொள்வதுமே வாழ்வின் அறம் என்ற உணர்வோடு செயல்பட்டால் ஏற்றத்தாழ்வற்ற பொருளாதார நிலை இனிக்கும் பொங்கல் போல் தமிழர்தம் வாழ்வில் எங்கும் என்றும் நிலைத்திருக்கும்….!!
_ முனைவர் த.ஜான்சிபால்ராஜ்
எழுத்தாளர், நெல்லை.



மகிழ்ச்சி அண்ணா,நன்றி