தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள சேரகுளம் சுப்பிரமணியபுரத்தில் வீடு வீடாக சென்று ரேசன் அரிசி வாங்கி அதனை வெளி மாநிலங்களுக்கு கடத்துவதாக சேரகுளம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதனையடுத்து இன்று சேரகுளம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் அந்தோணி துரைசிங்கம் மற்றும் காவலர் முரளி ஆகியோர் சுப்பிரமணியபுரம் பகுதியில் ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த ஆம்னி வேனை போலீசார் தடுத்து நிறுத்தினர். அப்போது அந்த ஆம்னி வேனில் வந்த இரண்டு பேரும் வேனை நிறுத்தி விட்டு தப்பியோடி விட்டனர்.
போலீசார் அந்த ஆம்னி வேனை சோதனை செய்த போது ரேசன் அரிசி கடத்தி வெளி மாநிலத்திற்கு கொண்டு செல்ல முயன்றது தெரிய வந்தது. அந்த ஆம்னி வேனில் 15 மூட்டையில் 50 கிலோ ரேசன் அரிசியையும், ஆம்னி வேனையும் சேரகுளம் போலீசார் பறிமுதல் செய்தனர். தப்பியோடியவர்கள் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


