
தி.மு.க பிரமுகர் கார்செட்டுக்கு தீவைத்த குற்றவாளிகளை கைதுசெய்ய வலியுறுத்தி ஸ்ரீவைகுண்டம் நீதிமன்றம் எதிரே வழக்கறிஞர்கள் சங்கத்தினர் இன்றைய தினம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஸ்ரீவைகுண்டம் முஸ்லிம் தெருவை சேர்ந்தவர் ஷாஜகான் வயது(52) இவர் தூத்துக்குடி தெற்கு மாவட்ட தி.மு.க வழக்கறிஞர் இணை அமைப்பாளராகவும், ஸ்ரீவைகுண்டம் பள்ளிவாசல் செயல் தலைவராகவும் பொறுப்பு வகித்து வருகிறார். இவருக்கு சொந்தமான வீடு அருகே கூரையால் மேயப்பட்ட கார் செட்டில் அவருடைய கார் மற்றும் பைக் நிறுத்துவது வழக்கம். மேலும் ஷாஜகான் அதே பகுதியில் தற்போது புதிய வீடு கட்டி வருகிறார். புது வீட்டிற்கு தேவையான மரக்கதவுகள் ஜன்னல்கள் மற்றும் பிளம்பிங் பொருள்கள் ஆகிய கட்டுமான பொருட்கள் வாங்குவதற்காக காரில் திருநெல்வேலி சென்றார். அவர் நேற்று முன்தினம் பாவூர்சத்திரம் சென்றுவிட்டு நள்ளிரவு வீடு திரும்பினார். பின்னர் கார் செட்டில் பொருட்களை வைத்துவிட்டு வீட்டில் தூங்க சென்றுவிட்டார். இந்நிலையில் அதிகாலை 2 மணி அளவில் கார் செட்டிலிருந்து தீ கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருந்தது.
இதுகுறித்து பக்கத்து வீட்டில் உள்ளவர்கள் அவருக்கு தகவல் தெரிவித்தனர். அவர் வந்து பார்க்கும் போது கார், பைக், வீடு கட்ட தேவையான சாமான்கள் அனைத்தும் தீயில் எரிந்துகொண்டிருந்தது. உடனடியாக ஸ்ரீவைகுண்டம் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். ஆனால் கார்செட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 2 கார் 3 பைக் மற்றும் வீடு கட்ட தேவையான ஜன்னல், பிளம்பிங் பொருட்கள், மரக்கதவுகள் உள்ளிட்ட பொருட்கள் எரிந்து சாம்பலாகின. இதுகுறித்து ஸ்ரீவைகுண்டம் போலீசார் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தி வந்தனர்.
இதுகுறித்து வழக்கு பதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடி வந்தனர். இந்நிலையில் இன்றைய தினம் ஸ்ரீவைகுண்டம் வழக்கறிஞர்கள் சங்கத்தினர் குற்றவாளிகளை விரைந்து கைது செய்யவேண்டும் என வலியுறுத்தி ஸ்ரீவைகுண்டம் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் எதிரே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஸ்ரீவைகுண்டம் வழக்கறிஞர் சங்கத்தலைவர் பாலசுப்பிரமணியன் தலைமை வகித்தார். மூத்த வழக்கறிஞர்கள் ரகுநாத், ஆறுமுகப்பெருமாள், கருப்பசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். நீதிமன்றம் முன் தொடங்கிய ஆர்ப்பாட்டமானது பழைய பாலம் வழியாக நடந்து சென்றனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் வழக்கறிஞர்கள் ஜெயசிங் மதுரம், வெங்கடாச்சலம், பெருமாள்பிரபு, குணசேகரன், ராம்குமார், ஜெயராஜ், சீனிவாசன், சங்கரன், சங்கர், ஷாஜகான், ரமேஷ், மீரான், கணேஷ் பாலமுருகன், தெய்வக்கண்ணன் மற்றும் ஜோதி உள்ளிட்ட வழக்கறிஞர்கள் உட்பட 40 வழக்கறிஞர்கள் கோஷமிட்டவாறு புதுக்குடிக்கு நடந்து சென்றனர். திருநெல்வேலி திருச்செந்தூர் சாலையில் நின்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு ஸ்ரீவைகுண்டம் டி.எஸ்.பி வெங்கடேசன் விரைந்து சென்று வழக்கறிஞர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். குற்றவாளிகளை விரைந்து கைதுசெய்து நடவடிக்கை எடுக்கப்படும் என டி.எஸ்.பி. வெங்கடேசன் உறுதியளித்தார். இதனை தொடர்ந்து வழக்கறிஞர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றன். மேலும் குற்றவாளிகளை கைது செய்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி காலவரையற்ற நீதிமன்ற புறக்கணிப்பு செய்வதாக வழக்கறிஞர்கள் கூட்டத்தில் முடிவுசெய்யப்பட்டது.