திருநெல்வேலிக்காரர்கள் போஜனப்பிரியர்கள் என்றே சொல்ல வேண்டும்.
” தின்னு தீர்த்தே சொத்தை இழந்தவன் திருநெவேலிக்காரன்” என்று சொல்வார்கள்.( இது எல்லோருக்கும் பொதுவானது என்று சொல்லமுடியாது. ஒரு வேடிக்கையாக இப்படி சொல்வார்கள் )
திருநெல்வேலி டவுண் காந்தி சிலை அருகே ஒரு காலத்தில் இருந்த போத்தி ஹோட்டல் பற்றி கதை கதையாக சொல்வார்கள் பெரியவர்கள்.
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள வீடுகளில் சமைக்கும் ” கூட்டாஞ்சோறு ” ரொம்ப பிரபல்யமானது. எல்லாக்காய்களையும் சேர்த்துப்போட்டு சமைக்கும் இந்த உணவு நல்ல ருசியானதும்கூட.
(வெஜிடபிள் பிரியாணிக்கும் கூட்டாஞ்சோறுக்கும் வித்தியாசம் உண்டு.)
கூட்டாஞ்சோறுக்கு ” தொட்டுக்கிட” கூழ்வற்றல், வெங்காய வடகம், சீனியவரக்கா வத்தல், கல்லிடைக்குறிச்சி அப்பளம்..என்று ஏகப்பட்ட டிஸ்கள் உண்டு.
இதைப்போல, தேங்காய்ப்பாலில் செய்யும் ” சொதிக்குழம்பு” பிரபலம்.
அதிக காரம் இல்லாத இந்த குழம்பு வகை, தென்னை அதிகம் விளையும் இலங்கையில் இருந்து வந்தது என்பார்கள். ஒரு குறிப்பிட்ட சமூகத்தில்,
கல்யாணத்திற்கு மறுநாள் சொதிச்சாப்பாடு போடுவது மரபு.
” மாப்ளெ..அந்தானைக்கு கிளம்பீராதீரும்..இருந்து நாளைக்கு மறுவீட்டு சொதிச்சாப்பாட்டை சாப்பிட்டு போங்க..” என்று உரிமையோடு சொதியின் ருசிக்கு அழுத்தம் கொடுப்பார்கள் என்றால் பார்த்துக்கோங்களேன்.
சொதிக்கு உருளைக்கிழங்கு பொரியலும், இஞ்சி பச்சடியும் உற்ற துணை. சொதிக்குழம்பு செய்வதற்கு நல்ல அனுபவம் வேண்டும். தண்ணீர் கொஞ்சம் அதிகமானாலும் சொதப்பி விடும். தேங்காய்ப்பால் கெட்டியாக இருக்க வேண்டும். அதில், முருங்கைக்காய், அவரைக்காய், காரட் போன்ற காய்களைப்போடுவார்கள். சொதிக்குழம்போடு சேர்த்து சாப்பிட முன்பு குறிப்பிட்ட அப்பளம், கூழ்வத்தல் வகையறாக்களும் கட்டாயத்தேவை.
மாவட்டத்தின் கறி வகைகளுள் முக்கியமானது அவியல். வாழைக்காய்,கத்தரிக்காய்,அவரைக்காய் போட்டு செய்வது. இவர்களின் உணவில் அன்றாடம் சேர்க்கும் மற்றொன்று அரைக்கீரை.
அரைக்கீரை செய்யும் நாளில் பெரும்பாலும் புளிக்குழம்பு உண்டு. இரண்டையும் கலந்து சாப்பிடும் வழக்கமும் இருக்கிறது. இரவு மீதமுள்ள அவியல்,குழம்பு,கீரை போன்றவற்றை மண் சட்டியில் போட்டு கிண்டி ” பழங்கறி ” செய்வார்கள் . நன்றாக சுண்ட வைப்பதால், ” சுண்டைக்கறி ” என்றும் சொல்லப்படுவதுண்டு.
” சுண்டைக் கறியின் சுவையறியார்
அறியார் பண்டைத்தமிழ்ப் பெருமை”
என்று திருநெல்வேலிக்காரன் பாட்டை வேறு எழுதி வச்சிருக்காம்னா
பார்த்துக்குங்க…


