தூத்துக்குடியில் விசைப்படகு மீனவர்கள் இன்று 2 நாட்களுக்கு பின்னர் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.
தூத்துக்குடி கடற் பகுதியில் பலத்த காற்று வீசி வருகிறது. மேலும், கடலின் காற்றின் வேகம் அதிகமாக இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதையடுத்து தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லவில்லை. மேலும் வானிலை சீரடைந்த பின்னரும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 2 நாட்களாக கடலுக்குச் செல்லாமல் இருந்தனர்.
கடந்த ஆண்டு விசைப்படகு உரிமையாளர்கள் மற்றும் மீனவர்கள் இடையே ஏற்பட்ட பிரச்சனை காரணமாக 9பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என மீனவர்கள் வலியுறுத்தினர். இந்நிலையில் மீன்வளத்துறை இயக்குநர் மோகன்ராஜ் மற்றும் அதிகாரிகள் மீனவர்களிடம் நேற்று பேச்சுவார்தை நடத்தினர். மீனவர்களின் கோரிக்கை நிறைவேற்றப்படும் என உறுதி அளித்த நிலையில் 2 நாட்களுக்கு பின்னர் இன்று காலை 183 படகுகளில் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.


