“ஏடேய் ராசுக்குட்டி எங்கலே போன?”
“இங்கத்தான் இருக்கேன் ஆச்சி. ஏன் இப்படி சத்தம் போடுத. நான் இங்கத்தான் இருக்கேன்”.
“ஏலே காலையில நம்ம ஊரு காரவிய அணைக்கு பொங்கல் வைக்க போறாவ. அதுக்குள்ள மாட்டை வயற்காட்டுக்கு அவுத்து வுடனும்”.
“சரி விடேன். அதுக்கு நான் என்ன செய்ய?”
“ஏலேய் இன்னைக்கு பள்ளிகூடத்துக்கு லீவு தானே. கொஞ்சம் மாட்டு கயித்தை பிடிச்சுக்கிட்டு கூடப்போய் நில்லேன்”.
“நிக்கேன். உன் இழவு தாங்க முடியலை”.
சலித்துக்கொண்ட ராசுக்குட்டி மாட்டை தொழுவத்தில் இருந்து அவிழ்த்து கொண்டு நடந்தான். “இன்னைக்கு என்ன அவசரம் . சாயந்திரம் விட வேண்டியது தானே”.
“ஏலே சாயங்காலம் மழை வந்திருமுல்லே. சீக்கிரம் போ”.
“ஆமாம் இவ பெரிய சாமியாரு. Êசாயங்காலம் மழை வருமுன்னு குறி சொல்லுதா?”
“ஏலே என்ன சொல்லுத”.
“ஒண்ணுமில்லை. போறேன்”. அழுத்தப்படி கிளம்பினான் ராசுக்குட்டி.
வயலில் ஒரு இடத்தில் கம்பு அடித்து வைத்திருந்தார்கள். அதில் கொண்டு போய் மாட்டை கட்டினான். மாடு கயிறு இருக்கும் நீளத்துக்கு சுற்றி சுற்றி மேயும். மற்றபடி வெள்ளமை நடந்து கொண்டிருக்கும் வயலுக்குள் நுழையாது. மிகப்பெரிய பாதுகாப்பு. மாட்டுக்கும் நல்லது. வயலுக்கும் நல்லது. இரண்டும் விவசாயிக்கு இரண்டு கண் மாதிரியல்லவா?
மாட்டை கட்டி விட்டு வெளியே வந்தான்.
மகாலிங்க அண்ணன் கிடா ஒன்றை கயிற்றில் கட்டி இழுந்து வந்தார்.
“அண்ணாச்சி. இதை எங்க கொண்டு போறீய”
“ஏலே இன்னைக்கு மருதூர் அணையில பொங்கலிட போறோமுலா. இந்த கிடாயை தான் பலி கொடுக்க போறோம்” என்றார்.
“அண்ணாச்சி. எதுக்கு பொங்கல் வைக்க போறீயே”.
“என்னல இப்படி கேக்க. இது என்ன மாசம் ஆவணி மாசம். இந்த மாசத்தில இன்னும் குத்தால சீசன் வரலை. அருவியில தண்ணீ விழலை. நம்ம ஊருல வாழை பயிறு கருகி கிடக்கு. தண்ணீ இல்லை . அதான் அணைக்கு போய் நம்ம மருதவல்லி, குமுதவல்லிக்கு ஒரு பூஜை போட்டுட்டு வரலாமுன்னு நம்ம நாட்டாமை தலைமையில கிளம்பிட்டோம்”.
“சரி. அண்ணாச்சி நானும் வரட்டுமா?”
“ஏலே 10 கிலோ மீட்டர் நடக்கணும். வெயில் வேறே சுல்லுன்னு அடிக்கு. நீ வேண்டாமுல்லே. உன் ஆச்சி, உன்னை கூட்டிட்டு போனா வில்லைவில்லையா நறுக்கி புடுவா?”
அண்ணாச்சி சத்தம் போட்டுக்கொண்டே கிளம்பி விட்டார்.
“அது என்ன பூஜை. அந்த சாமி பேரு புதுசா இருக்கு. அவுக குமுதவல்லி, மருதவல்லின்னு அண்ணாச்சி சொல்லுதாவ”. அவன் மனது பல நினைவுகளோடு ஓடிக்கொண்டே இருந்தது.
மருதூர் அணை என்றவுடனே ராசுக்குட்டிக்கு கொஞ்ச நாளைக்கு முன்னாடி அந்த அணையை பார்த்த நினைவு வந்தது.
கொஞ்ச நாளைக்கு முன்னால சொந்த காரங்க வீட்டுக்கு இவனை ஆச்சி கூட்டிட்டு போயிருந்தா. அங்க காலங்கரைன்னு ஒரு ஊரு. அந்த ஊருல இருந்த அண்ணன் மாருக மீன் பிடிக்க இவனை அணைக்கு கூட்டிட்டு போயிருந்தார்கள்.
மனதுக்குள் நினத்து பார்க்கிறான் ராசுக்குட்டி, “அந்த அணை ரொம்ப நீளமா இருந்துச்சு. பாம்பு மாறி அங்க இங்க வளைஞ்சு போய் கிடந்துச்சு. இந்த அணையை பாம்பணைன்னு சொன்னாவ. என்ன அழகா இருக்கும் தெரியுமா?. யய்யா அந்த இடமே சொர்க்க லோகம் மாரி தெரியும். திருவிளையாடல் படத்தில கைலாய மலை எப்படி இருக்குமோ அது மாரி இருக்கும். ஒருபக்கம் வெள்ளை வெளீருன்னு தாமிரபரணி நதி ஓடி வரும். மறு பக்கம் தண்ணீ மடை வழியே விழும். அதுலத்தான் மீன்கள் துள்ளும். வகை வகையா துள்ளும். பையளுவ ஓடிபோய் வலை வைச்சி பிடிப்பாவ. அணை சருக்கில நடந்து போறதே தனிச்சுகம். எதிர் கரையில உள்ள அண்ணாச்சி மாறுக சைக்கிளில் அணைக்கட்டு வழியே வருவாவ. இந்த பக்கம் தண்ணீ, அந்த பக்கம் பாதாளம். அதுல அவுக பயப்படமா வருவாவ. என்னா அழகா இருக்கும். அந்த அணையில கோயில் இருக்கா. அங்க படையலா . சின்ன பையனா போயிட்டேமே . இல்லைன்னா ஒரு எட்டு போயிட்டு வரலாமே”.
யோசனையோடு வீட்டுக்கு வந்தான்.
“ஆச்சி. நானும் அணைக்கு போணும்”.
“ஏலே எழவெடுத்தவனே. உனக்கு ஏன் அறிவுக்கெட்ட வேலை உனக்கு”.
“ஏன் ஆச்சி. அங்க போயிட்டு வந்துருதேன்”.
“ஏலே பெரிய மனுசனுவத்தான் அங்க போவாவ. நீ பேசமா இங்க கெடக்க வேண்டியது தானே” என்றாள்.
“ஆச்சி. நானும் போணும்”.
“நீ. இங்க இருந்தன்னா நான் அணை கதையை சொல்லுவேன். இல்லாட்டி போ” என்று ஆச்சி சொல்லி விட்டு ஆட்டுக்குட்டியை பார்க்க சென்றாள்.
ராசுக்குட்டி யோசித்தான். “இந்த பெரிய மனுசங்க கூட போறதோட, ஆச்சிகிட்ட கதை கேட்கிறது தான் நல்லது”.
ஆச்சி பின்னாலேயே ஓடினான். “சரி ஆச்சி. எப்ப கதை சொல்லுவ”.
“வா. மதியம் சாப்பாடு முடிஞ்சவுடனே உனக்கு கதை சொல்லுதேன்” என்றாள் ஆச்சி.
ராசுக்குட்டிக்கு சந்தோசம் தாங்க முடியலை.
தெருவுக்கு ஒடிவந்தான். அந்த நேரத்தில் சவ்வு மிட்டாய் காரர் வந்தார்.
கையில் 5 பைசா வைத்திருந்தான். நீண்ட கம்பு மீது கலர் கலராய் அந்த மிட்டாய் வைத்திருந்தார். இவனிடம் 5 பைசா வாங்கி கொண்டு கையில் வாட்சு மாதிரி சவ்வு மிட்டாயை கட்டினார். அதன் பிறகு கொஞ்சம் சாப்பிட கையில் சவ்வு மிட்டாயை கொடுத்தார். அதை சந்தோசமா வாங்கி கொண்டான். எதிர் வீட்டில் ஜானகி ஆச்சி பேரன் இவனை பார்த்தான். பாவம் அவன் அப்பா அவனுக்கு மூனு பைசாத்தான் கொடுத்திருந்தார். இரண்டு பைசா குறைவாக இருந்த காரணத்தினால் அவனுக்கு சவ்வு மிட்டாய் வாங்க முடியலை.
இவன் அவன் கிட்டே சென்றான்.
“எனனல முட்டாய் வேணுமா?”
“ம். மூணு பைசாத்தான் இருக்கு”.
“சரி தா”. என பைசாவை வாங்கி கொண்டு, வாட்சு மிட்டாயை கழற்றி. அதை இரண்டாக பங்கு வைத்து அவனுக்கு ஒரு பாதியை வாட்சாக கட்டி விட்டான். மீதியை இவன் கட்டிக்கொண்டான்.
அவன் முகத்தில் ஓரே சந்தோசம்.
சிரித்துக்கொண்டே ஓடினான்.
இதற்குள் ஊர் காரர்கள் நாட்டாமை தலைமையில் கிளம்பினார்கள். நிறைய பேரு கையில் கம்பை வைத்துக்கொண்டு கிளம்பினர். சிலர் மண்வெட்டி வைத்து இருந்தார்கள். சிலர் கத்தி கம்பு வைத்திருந்தார்கள்.
மகாலிங்கம் , கிடாவை இன்னொருவர் கையில் கொடுத்து விட்டு, கடைசியில் சென்றார்.
“அண்ணாச்சி. படையல் தானே வைகக போறீய. அதுககு ஏன் கத்திகம்பு, அருவா, மம்பெட்டியெல்லாம்”. ராசுக்குட்டி கேட்டான்.
“ஏடே படையல் முடிஞ்சவுடனே மழை பெய்யும், வாயகாலுல தண்ணீ வந்துரும். அதான் போவும் போதே வாய்க்காலில மரம் கிரம் விழுந்து கிடந்தா அதை அப்புற படுத்திகிட்டே போவோம்” என்றார்.
புரிந்தும் புரியாமலும் தலை அசைத்தான் ராசுக்குட்டி.
உண்மைதான். இதுதான் குடிமராமத்து. தனக்குதானே விவசாயி வாயக்காலை தூர் வாரும் நிகழ்ச்சி. இதுபோன்ற காலம் இனி வருமா?
மதியம் சாப்பாடு முடிந்தது.
“ஆச்சி அணை கதை சொல்லு” என்றார் ராசுக்குட்டி.
சிரித்தபடியே திண்ணையில் அமர்ந்தாள்.
அருகில் உள்ள வேப்ப மரத்தில் இருந்த சிட்டு குருவிகள் ஆச்சி அருகில் வந்தது. எனவே. “ஏலேய் அரிசி கொஞ்சம் எடுத்துட்டு வா. குருவிக்கு போடுவோம்”.
ராசுக்குட்டி ஓடிப்போய் அரிசி எடுத்து வந்த குருவிக்கு போட்டான்.
ஆச்சி கதை சொல்ல ஆரம்பித்தாள். அந்த கதை மனதை உருக்குவதாக இருந்தது.
“அந்த காலத்தில தாமிரபரணி ஆத்துல வெள்ளம் கரை புரண்டு ஓடிக்கிட்டு இருக்கு. இப்போ இருக்க கலியாவூருக்கு அந்த காலத்தில கலியுக ராமவரதநல்லூன்னு பேரு. அந்த ஊரை ஒருராஜா ஆண்டு வந்தாரு. அந்த ராஜாவுக்கு இரண்டு பொன்னு. ஒருத்தி மருதவல்லி, இன்னொருத்தி குமுதவல்லி. இவளுவ இரண்டு பேரும் குமரியா இருந்து இருக்காவ. கல்யாண வயசு. இவளுவளுக்கு மாப்பிள்ளை பாக்கணுமுன்னு நினைச்சாரு ராஜா. இதுக்கிடையில ஆத்துல வெள்ளம் வருது. தண்ணீ வீணா கடலுக்கு போவுது. இதை கட்டு படுத்தி இதுல ஒரு அணையை கட்டினனுமுன்னு நினைச்சாரு. உடனே ஊரு புறாவும் தண்டாரோ போட்டாரு. யாரும் முன் வரலை. இதுக்கு இடையில ஒரு வயசான சாமியார் வந்தாரு. அரண்மனை முன்னால போய் நின்னாரு. ராஜா நான் ராவோடு ராவா அணைக்கட்டி தாரேன். எனக்கு நீர் என்ன தருவீருன்னு கேட்டாரு”.
ராஜா, “என்னவேணுமுனாலும் கேளும் தாரேன்”னு சொன்னாரு.
உடனே சாமியாரு, “உம் இரண்டு பொன்னையும் எனக்கு கட்டி தருவீரா” ன்னு கேட்டாரு.
ராஜாவும் வயசான சாமியாரு ஏதோ விளையாட்டுக்கு கேக்காருன்னு நினைச்சிக்கிட்டு சரின்னு ஒத்துகிட்டாரு.
ராத்திரி போல சாமியாரு, தன்னோட மந்திர சக்தியில பெரிய பூத படையை கொண்டு வந்தாரு. ராத்திரியோட ராத்திரியாட வல்லநாடு மலையில இருந்து நிறைய கல்களை பொறுக்கிட்டு வந்தாரு. அந்த கல்லையெல்லாம் பூதங்கள் தூக்கி வந்து அணையை கட்டிட்டு. தாமிரபரணி தண்ணீயை இரண்டு பக்கமும் பிரிச்சி, கால்வாய் வெட்ட ஏற்பாடு செஞ்சாரு. மக்களுக்கு ரொம்ப சந்தோசம். நாடே செழிப்பாயிட்டு. தாமிரபரணி வெள்ளத்தை கட்டுபடுத்தி விவசாயம் செய்ய ஆரம்பிச்சாங்க”.
“அப்படி போடு” கைத்தட்டினான் ராசுக்குட்டி.
“சாமியாரு ராஜாவை பாத்து பொன்னு கேட்க வ்ந்தாரு. அணையை கட்டிட்டு நம்மள பாக்க மாப்பிள்ளை வாராரு. அவரு எப்படி இருப்பாருன்னு இளவரசி ரெண்டு பேரும் உப்பரிகையில இருந்து பாத்துக்கிட்டு நிக்காவ. அப்ப ஒரு பஞ்ச பரதேசி வாராரு. அவரை ராஜா பல்லக்குல தூக்கிட்டு வருததை பாத்து மனம் உடைஞ்சி போனவா இளவரசி இரண்டு பேரும். ஓடிப்போய் ராஜாகிட்ட, இந்த கல்யாணம் வேண்டாமுன்னு சொல்லுதாவ. ஆனா ராஜா கேட்கலை. வாக்கு கொடுத்தது கொடுத்தது தான்னு சொல்லிப்புட்டாவ. உடனே இளவரசி இரண்டுபேரும் ஓடியே போய் ஆத்தில விழுந்து தற்கொலை பண்ணிககிட்டாவ. ராசுக்குட்டி என்ன ஆச்சி சொல்லுத பொறவு மனசு பொருந்தாத ஆள்கூட எப்படி வாழுவாவ. அதுக்கப்புறம் சாமியாரு காசிக்கு போயிட்டாரு. ராஜா இரண்டு மகளுக நினைவா அணைக்கரையில ஒரு கோயிலை கட்டி வச்சாரு. அந்த கோயிலுக்கு மருதவல்லி குமுதவல்லி கோயிலுன்னு பெயர் வைச்சாரு”.
“அந்த கோயிலுக்குத்தான் இன்னைக்கு நம்ம ஊரு மக்கள் பொங்கல் வைக்க போறாவ. மழை வரலைன்னா இந்த கோயிலுல போயி கிடா வெட்டி பொங்கல் வைச்சி படைச்சி மக்க சமாபந்தி சாப்பிட்டா, அவுக வீட்டுக்கு வருத்துக்குள்ள மழை வந்து கால்வாயில வெள்ளம் வந்துரும் ஆமா” என முச்சி விடாமல் சொல்லி முடித்தாள் ஆச்சி.
ராசுக்குட்டி ஆச்சரியமாக பார்த்தான். “இதுக்குள்ள படையல் வைச்சிருப்பாவுலா”.
“ஆமா”.
வானத்தை நோக்கி பார்த்தான். காலையில் வெயில் அடித்துக்கொண்டிருந்த வானம் தற்போது மேகம் திரண்டது. மெதுவாக தூறல் விழுந்தது.
ஆச்சியிடம் வந்தான்.
“இன்னைக்கு மழை பெய்யுமா?”
“நிச்சயம் பெய்யும்”.
ஆச்சி சொல்லி முடித்தவுடன் மழை பெய்ய ஆரம்பித்தது.
ஆச்சரியத்துடன் நின்று கொண்டிருந்தான் ராசுக்குட்டி.
(தொடர்ந்து ஆச்சி கதை சொல்லுவாள்)


