தூத்துக்குடி சிவன்தாகுளம் குடியிருப்புப் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையை உடனடியாக மூட வலியுறுத்தி, அப்பகுதிப் பெண்கள் திரண்டு சென்று கடைய முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
தமிழகத்தில் பேருந்து நிலையம், வழிபாட்டுத் தலங்கள், பள்ளிக்கூடங்கள் இருக்கும் பகுதியில் இருந்து 500 மீட்டர் தொலைவிற்கு உட்பட்டு இயங்கி வரும் 717 டாஸ்மாக் கடைகளை மூட அரசு உத்தரவிட்டது. அதன்படி, தூத்துக்குடி மாவட்டத்தில் இயங்கி வந்த 125 கடைகளில், 63 டாஸ்மாக் கடைகள் வழிபாட்டுத் தலங்கள், பள்ளிகள் மற்றும் பேருந்து நிலையங்களுக்கு அருகே இருப்பதாக அடையாளம் காணப்பட்டு, அவற்றை மூட மாவட்ட நிர்வாகம் மூலம் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.
இதன் தொடர்ச்சியாகத் தூத்துக்குடியின் முக்கிய இடங்களில் இயங்கி வந்த பெரும்பாலான கடைகள் மூடப்பட்ட போதிலும், விதிகளுக்குப் புறம்பாக அடையாளம் காணப்பட்ட இன்னும் சில டாஸ்மாக் கடைகள் தொடர்ந்து இயங்கி வருகின்றன. இந்த வரிசையில், தூத்துக்குடி சிவன்தாகுளம் 5-ஆவது தெரு குடியிருப்புப் பகுதியில் ஒரு டாஸ்மாக் கடை தொடர்ந்து இயங்கி வருகிறது. இந்த மதுக்கடையினால் அப்பகுதியில் உள்ள பெண்கள் மற்றும் பள்ளிக்குச் செல்லக்கூடிய குழந்தைகள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
மது குடித்துவிட்டு வரும் நபர்கள், வீடுகளில் தனியாக இருக்கும் பெண்களிடம் சோறு கேட்டுத் தகராறு செய்வதாகவும், குடிநீர் கேட்டு அவதூறான வார்த்தைகளால் பேசுவதாகவும் அப்பகுதி மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். அடிக்கடி ஏற்படும் இந்தத் தகராறுகளால் குடியிருப்புப் பகுதியில் பெண்கள் வெளியில் நடமாடவே அச்சப்படும் சூழல் நிலவி வருகிறது. இக்கடையை மூடக் கோரி பொதுமக்கள் ஏற்கனவே பலமுறை புகார் அளித்தும் அதிகாரிகள் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது.
அதிகாரிகளின் அலட்சியத்தால் ஆத்திரமடைந்த அப்பகுதிப் பெண்கள் நேற்று காலையில் திடீரெனத் திரண்டு சென்று, சிவன்தாகுளம் டாஸ்மாக் கடையை முற்றுகையிட்டு அதிரடிப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இப்போராட்டத்திற்கு ஆதரவாக இந்து மக்கள் கட்சியினரும் கலந்துகொண்டனர். குடியிருப்புப் பகுதியில் உள்ள இந்த டாஸ்மாக் கடையை உடனடியாக மூட மாவட்ட நிர்வாகமும், டாஸ்மாக் நிர்வாகமும் முன்வர வேண்டும் என வலியுறுத்தி அவர்கள் முழக்கங்களை எழுப்பினர்.
இது குறித்துத் தகவலறிந்து வந்த தூத்துக்குடி வடபாகம் போலீசாரும், டாஸ்மாக் அதிகாரிகளும் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களுடன் சமரசப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது, இந்த மதுக்கடையை இப்பகுதியிலிருந்து முழுமையாக அகற்றினால் மட்டுமே போராட்டத்தைக் கைவிடுவோம் எனப் பெண்கள் உறுதியாகத் தெரிவித்தனர். இதையடுத்து, இந்த டாஸ்மாக் கடையை விரைவில் மூடுவதற்கான உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று அதிகாரிகள் எழுத்துப்பூர்வமாக உறுதியளித்ததைத் தொடர்ந்து பெண்கள் போராட்டத்தைக் கைவிட்டுக் கலைந்து சென்றனர்.
இப்பகுதியில் டாஸ்மாக் கடையை மூடக்கோரிப் பெண்கள் ஒருபுறம் முற்றுகைப் போராட்டம் நடத்திய வேளையில், அங்கு வந்த மதுப்பிரியர்கள் சிலர் கும்பலாகத் திரண்டு, கடையை உடனே திறக்க வேண்டும் என வலியுறுத்திப் போட்டி முழக்கங்களை எழுப்பினர். இதனால் இருதரப்பிற்கும் இடையே லேசான தள்ளுமுள்ளு ஏற்பட்டு, அப்பகுதியில் சில மணி நேரம் பெரும் பரபரப்பான சூழல் நிலவியது.


