திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு, நேற்று அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு, 5.30 மணிக்கு விஸ்வரூபம், 6 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம், தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடைபெற்றது.
பக்தர்கள் நிலா ஒளியில் கடற்கரையில் தங்கி நேற்று அதிகாலை நாழிக்கிணறு மற்றும் கடலில் புனித நீராடி சுவாமியை தரிசித்தனர். அதிகாலை முதலே பக்தர்கள் இலவச பொது தரிசனம், ரூ. 100 சிறப்பு கட்டண தரிசனம் மற்றும் மூத்த குடிமக்கள் வழி என அனைத்திலும் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமியை தரிசனம் செய்தனர். இதனால் கோயில் வளாகம் மட்டுமன்றி கடற்கரையே பக்தர்கள் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது.


