கவுன்சிலரான அடுத்த வாரமே ஸ்கார்பியோ கார் வாங்கும் இந்த காலத்தில்.
தேசிய கட்சி ஒன்றில் உடன்குடியை சேர்ந்த ஒருவர் பல ஆண்டுகள் தீவிர கட்சி பணியாற்றுகிறார். அந்த கட்சியின் அடிமட்ட தொண்டனாக இருந்து கட்சி கொடி கட்ட ,சுவரோட்டி ஒட்ட தொடங்கி அந்த கட்சியின் மாவட்ட செயலாளராகி மாவட்டம் முழுவதும் பட்டி தொட்டி எங்கும் அந்த கட்சியை வளர்க்கிறார்.
இவருக்கு கீழே இருந்த கட்சி நண்பர்கள் பலரும் எம்.பி, எம் எல் ஏ என அதிகாரம் உள்ள பதவியை பிடிக்கிறார்கள் , அதனை பயன்படுத்தி தங்கள் குடும்ப வாழ்வை வளமையாக்குகிறார்கள் .
ஆனாலும் அந்த மனிதர் ஒருக்காலும் அதிகாரம் மிக்க அரியணையில் ஏறி தான் அமர ஆசைப்பட்டதில்லை .அதே போல தன் கட்சி பதவியை பயன்படுத்தி பணமோ , பொருளோ சம்பாதித்தது கிடையாது.
இந்திய , தமிழக அரசியல் தலைவர்கள் எல்லாம் இவருக்கு நல்ல அறிமுகம் உண்டு , அவர்களுக்கும் இவரை பற்றி நல்ல அறிப்பிரயாயம் உண்டு .
ஆனாலும் தனது வாரிசுகளுக்கு ஒரு போதும் அதை பயன்படுத்தி சலுகை பெற்றதும் இல்லை. தான் சுக வாழ்வு வாழ்ந்ததும் இல்லை .
காலம் அந்த மனிதனுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்குகிறது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் உடன்குடியில் அவர் பஞ்சாயத்து தலைவர் ஆகிறார் ….. தான் பஞ்சாயத்து தலைவராக பதவி வகித்த காலம் முதல் கடைசி வரை சைக்கிளிலும் , டிவிஸ் எக்ஸல் வண்டியிலும் பறந்து பறந்து சென்று மக்கள் பணி செய்கிறார் .
பதவி காலத்தில் ஏழை ,எளிய மக்கள் யார் இவரை தேடி சென்றாலும் அவர்களுக்கான மக்கள் பணிகளை திறம்பட செய்து கொடுக்கிறார் … அத்தனைக்கும் பொதுமக்கள் யாரிடமும் இவர் சாதி , மதம் பார்த்ததோ ,கையூட்டு பெற்றதோ இல்லை .
டவுன் பஞ்சாயத்து தலைவர் பதவி முடிவடையும் நேரம் , பஞ்சாயத்து பொது நிதியில் ரூ 1 கோடிக்கும் மேலே பணம் இருக்கிறது , இன்னும் ஒரிரு மாதத்தில் பஞ்சாயத்து தேர்தல் வரலாம் என்னும் சூழல் …..
அவரிடம் போய் அவரின் நல விரும்பிகள் சொல்கிறார்கள் அண்ணே இந்த பொது நிதியில் உள்ள பணத்தை நீங்கள் எதாவது புதிய நலத்திட்டம் போட்டு செலவழித்து விடுங்கள் வரும் தேர்தலில் நீங்கள் எளிதாக வெற்றி பெறலாம் என கூறுகிறார்கள் ….
அதற்கு அவர் பஞ்சாயத்து பொது நிதியில் நான் சிறுக சிறுக சேர்த்து வைத்து இருக்கும் இந்த பணம் இன்னும் 10 ஆண்டுகள் கழித்து நம் உடன்குடி பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளுக்கு மிக பெரிய குடிநீர் தேவை வரும் , அந்த நேரம் மக்கள் கஷ்டபட போகிறார்கள் அதனால் புதிதாக வரப்போகும் குடிநீர் திட்டத்தில் நம் பஞ்சாயத்து சார்பில் 1 கோடி கொடுத்தால் நபார்டு வங்கி மூலம் அரசிடம் 5 கோடி கடன் பெறலாம் .
அந்த தொகை மூலம் வல்லநாடு அருகில் இருந்து கூட்டு குடிநீர் திட்டம் மூலம் தினமும் 10 லட்சம் லிட்டர் தண்ணீர் நம்ம ஊருக்கு கொண்டு வரலாம் , இதனால் இன்னும் 10 ஆண்டு கழித்தும் கூட நம் உடன்குடியில் தண்ணீர் பஞ்சம் வராது ஆகவே அந்த பணத்தை நாம் எடுத்து தேர்தலில் நாம் ஜெயிக்க வேண்டும் என்ற கணக்கில் செலவு செய்திடக் கூடாது என்கிறார்.
ஆனால் உடன்குடி மக்களின் கெட்ட நேரம் .
அடுத்து வந்த அந்த தேர்தலில் அந்த மனிதர் தோற்கடிக்க படுகிறார் , அவரின் கனவு திட்டமான வல்லநாட்டில் இருந்து உடன்குடி மக்களின் குடிநீர் தேவையை தீர்க்கும் அந்த குடிநீர் திட்டம் இன்றைய தேதி வரை செயல்படுத்த படவில்லை. ….. (அடுத்த வந்த தலைவர் முன்றே மாதத்தில் பொது நிதியில் இருந்த அந்த ரூ 1 கோடியை காலி …செய்து விட்டது வேறு கதை )
அடுத்து வந்த 5 ஆண்டுகள் இந்த மனிதனை தேர்தலில் தோற்கடித்த பலனை உடன்குடி மக்கள் நன்கு ………அனுபவித்தனர் …. அதன் பின்பும் தேர்தல் அறிவிக்கப்படுகிறது …..
உடன்குடியின் ஊழல் வாதிகளுக்கு எதிராக இந்த மனிதன் மீண்டும் களம் இறங்குகிறார் …. ஊழல்வாதிகள் தேர்தலில் நிற்க கூடாது என்று வேட்பு மனு சரி பார்ப்பதில் நின்று சட்ட போராட்டம் நடத்துகிறார் …. இவரின் சட்ட போராட்டம் வெற்றி பெறும் நிலையில் தீடிரென தேர்தல் ரத்து ஆகிறது.
தலைவராக இல்லாத நிலையிலும் மக்களுக்கான போராட்ட களங்களில் அவரின் குரல் ஓங்கி ஒலித்து கொண்டே இருக்கிறது.
உடன்குடி மக்களை சுகாதார சீர்கேட்டில் ஆழ்த்திய ஒரு தனியார் மீன் அரவை ஆலையை எதிர்த்து நடத்தி வெற்றி கண்ட போராட்டத்தில் இந்த மனிதன் எனக்கு வழங்கிய ஆலோசனை அளவிற்கறியது .
உடன்குடி பேருராட்சியில் நடைபெற்ற ஊழல்களை தட்டி கேட்பதில் தொடங்கி உடன்குடி மக்களுக்கு உள்ள நீராதார பிரச்சனைகளுக்கான களங்கள் தொட்டு , மக்களுக்காக அதிகாரிகளிடம் சண்டையிட்டு சிறை சென்றது வரை என இந்த மனிதன் உடன்குடி மக்களுக்காக உழைத்த கதைகள் பல உண்டு….
இவர் மறைவிற்கு பிறகு இரங்கற்பா இசைக்கும் இந்த நாளில் எனது நண்பர் ஒருவர் சொல்கிறார் இவர் தான் எனக்கு உயர் கல்வி பயில சீட் வாங்க எனக்கு உதவினார் என , இன்னோரு நண்பர் சொல்கிறார் இவரால் தான் எங்கள் பள்ளி வளர்ச்சியடைந்தது என , உண்மையில் இன்னும் யார் யாருக்கெல்லாம் இவர் என்னன்ன உதவி செய்தார் என்பது யாருக்குமே தெரியாது …..
முதியோர் உதவி தொகை ,விதவைகள் உதவி தொகை , அரசின் பல்வேறு நலத் திட்டங்கள் என தொடங்கி குடும்ப அட்டை ,கேஸ் அட்டை ,தேர்தல் அட்டை என எத்தனை பேருக்கு அரசின் நலதிட்டங்கள் வாங்கி கொடுத்தார் , அதற்காக எத்தனை மணி நேரம் எந்தந்த அலுவலகங்களில் இந்த மனிதர் அலைந்து திரிந்தார் என அவருக்கே தெரியாது என்பது தான் உண்மை.
ஒரு முறை பஞ்சாயத்து தலைவர் ஆனவர்கள் எல்லாம் பல தலைமுறைக்கு சொத்து சேர்த்து கார்களில் பவனி வரும் இந்த காலத்தில் இத்தனை பெரிய கட்சி பதவி , டவுன் பஞ்சாயத்து தலைவர் ஆன பிறகும் அந்த மனிதனின் ஒரு முக்கிய சொத்து இன்றைய தேதி வரை ஒரு கூட்டுறவு சங்கத்தில் அடமானத்தில் மீட்க முடியாமல் இருக்கிறது என்னும் கதை அவரையறிந்த ஒரு சிலருக்கு மட்டுமே தெரிந்த கதை .
ஆண்டுகள் நகர்கிறது .
இந்த மனிதன் நோய்வாய்ப்படுகிறார் , வாரம் தோறும் டயாலிசிஸ் சிகிச்சை மேற்கொள்கிறார் அப்போதும் கூட யாரைப் பார்த்தாலும் உடன்குடி மக்கள் நலனை பற்றியே சிந்திக்கிறார் , பேசுகிறார் ,அறிவுரை வழங்குகிறார், டயாலிசிஸ் செய்து கொண்டே தன்னால் இயன்ற வரை உடல் வலிகளை தாங்கி உதவி செய்வதற்காக அங்கும் , இங்கும் மக்களுக்காக ஓடினார் ,
இத்தனை ஆண்டுகளுக்கு பிறகும் அந்த மனிதன் தன் பெயரையோ , பதவியையோ பயன்படுத்தி 1 ரூபாய் கூட யாரிடமும் எதிர்பார்த்ததும் இல்லை வாங்கியதும் இல்லை .
அப்பேர்பட்ட அந்த மாமனிதர் தான் எங்கள் பெரு மதிப்பிற்குரிய
A C சாகுல் ஹமிது , உடன்குடி தேர்வு நிலை பேருராட்சி முன்னால் தலைவர் .
இயற்கை தன் கடமையை செய்தது அந்த மனிதரின் வாழ்வு இன்றுடன் முழுமை அடைந்தது … ஆனாலும் அந்த மனிதர் உடன்குடி மக்கள் நலனுக்காக உழைத்த தியாகம் காலத்திற்கும் உடன்குடியில் அவரது புகழை பாடிக் கொண்டே இருக்கும் .


