தெற்காசிய மூத்தோர் தடகளப் போட்டியில் நாசரேத் வீரர் பொன்ராஜ் 1 வெள்ளி மற்றும் 2 வெண்கலப் பதக்கங்கள் வென்று சாதனை படைத்துள்ளார்.
முதலாவது தெற்காசிய மூத்தோர் தடகள ஓபன் சாம்பியன்ஷிப் போட்டியானது தென் இந்திய தடகள சங்கத்தின் சார்பில் ஜனவரி 10ந் தேதி வெள்ளிக்கிழமை தொடங்கி 12 ந் தேதி இன்று ஞாயிற்றுக்கிழமை வரை கர்நாடக மாநிலம் மங்களூர் மங்களா விளையாட்டு அரங்கில் வைத்து நடைபெற்றது. இதில், ஓட்டப்பந்தயம், குண்டு எறிதல், வட்டு எறிதல், ஈட்டி எறிதல், சங்கிலி குண்டு எறிதல், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல் உள்ளிட்ட போட்டிகள் நடைபெற்றன. இதில் இந்தியாவின் பல்வேறு மாநிலங்கள் மட்டுமின்றி, இலங்கை உள்ளிட்ட நாடுகளின் வீரர், வீராங்கனைகளும் பங்கேற்றனர்.
இப்போட்டியில் தமிழகத்தின் சார்பில் தூத்துக்குடி மாவட்டம் நாசரேத்தை சேர்ந்த தடகள வீரர் பொன்ராஜ் பங்குபெற்று மூன்று போட்டிகளில் வெற்றி பெற்று பதக்கங்களை வென்றார். இவர் 100 மீட்டர் ஓட்டம் மற்றும் 4×100 மீட்டர் தொடர் ஓட்டப் பந்தயங்களில் வெற்றி பெற்று 2 வெண்கலப் பதக்கங்களை வென்றார். மேலும் 4×400 மீட்டர் தொடர் ஓட்டப் பந்தயத்தில் வெற்றி பெற்று வெள்ளிப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.


