ஆதிச்சநல்லூரில் மத்திய தொல்லியல் துறை சார்பில் இந்தியாவிலேயே முதல் முதலில் அமைக்கப்பட்டுள்ள சைட் மியூசியத்தினை காண ஏராளமான மாணவ மாணவிகள் குவிந்து வருகின்றனர். இவர்களை உற்சாகப்படுத்தும் விதமாக வெளிநாடுகளில் உள்ள ஆதிச்சநல்லூர் தொல்பொருட்களை மீட்டு ஆதிச்சநல்லூருக்கு கொண்டு வந்து காட்சிப்படுத்த வேண்டும் என தொல்லியல் ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஆதிச்சநல்லூரில் உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைக்கப்படும் என்று கடந்த 2020 ஆண்டு மத்திய பட்ஜெட்டில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்திருந்தார். இதனால் தொல்லியல் ஆர்வலர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். இதையட்டி இந்திய தொல்லியல் துறை திருச்சி மண்டலம் உருவாக்கப்பட்டு, அதன் இயக்குனர் முனைவர் அருண்ராஜ் தலைமையில் ஆதிச்சநல்லூரில் அகழாய்வு நடந்தது. ஆதிச்சநல்லூர் பரம்பு பகுதியில் பி சைட்டில் உலகத்தரத்தில் இந்தியாவிலேயே முதன் முறையாக சைட் மியூசியம் அமைப்பதற்கான நடவடிக்கைகளை ஆய்வாளர்கள் மேற்கொண்டனர்.
இதற்காக ஆய்வுக்குழியில் எடுத்த பொருட்களை அப்படியே காட்சிப்படுத்தி அதன்மேல் உடைக்க முடியாத தரத்தில் கண்ணாடி பேழைகள் அமைக்கப்பட்டு அதன் மேல் நின்று பார்க்கும் வண்ணம் அமைக்கப்பட்டுள்ளது.
இந்தியாவிலேயே முதல் முறையாக இந்த அமைப்பு ஆதிச்சநல்லூரில் உருவாக்கப்பட்டது. இந்த சைட் மியூசியத்தினை கடந்த ஆகஸ்ட் 5 ந்தேதி மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் திறந்து வைத்தார். மேலும் உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைக்கும் பணியும் நடந்து வருகிறது. இதற்கான மாதிரி அருங்காட்சியகம் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.
இந்த சைட் மியூசியத்தினை காண தினம் தோறும் வருகின்ற பொதுமக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. மேலும் தற்போது தினம்தோறும் தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களைச் சேர்ந்த பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவிகள் ஏராளமானோர் வருகை தந்த வண்ணம் உள்ளனர். இந்த நிலையில் திருநெல்வேலி டவுண் ரோஸ்மேரி ஐ.டி.எல் பப்ளிக் பள்ளியைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் ஆதிச்சநல்லூரை பார்வையிட வருகை தந்தனர்.
ஆதிச்சநல்லூரில் முதன் முதலில் கண்டுபிடிக்கப்பட்ட முழுமையான எலும்புக்கூடு, ஆதிச்சநல்லூரில் உலகத்தரத்தில் அமைய உள்ள அருங்காட்சியகத்தின் மாதிரி வடிவமைப்பை உள்பட அங்கு காட்சிக்கு வைக்கப்பட்ட பொருள்களை பார்வையிட்டனர். அதைத் தொடர்ந்து ஆதிச்சநல்லூரில் உள்ள சைட் மியூசியத்தினை பார்வையிட்டனர். அவர்களுக்கு எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு விளக்கமளித்தார். இந்த நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரியைகள் ஜெயலெட்சுமி, சுருதி, சுயம்பு, எபனேசர், பிரந்தா மற்றும் விளையாட்டு துறை ஆசிரியர் காஜா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இதுகுறித்து எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு கூறும்போது, ஆதிச்சநல்லூரில் தான் இந்தியாவிலேயே முதன் முதலில் அகழாய்வு பணிகள் நடந்தது. தற்போது இந்தியாவிலேயே முதன் முதலில் இங்கு தான் உலகத்தரத்தில் சைட் மியூசியம் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் இங்கு ஆங்கிலேயர்கள் காலத்தில் அகழாய்வுகள் நடந்தபோது எடுத்த தொல்பொருட்கள் வெளிநாடுகளில் இன்னும் உள்ளது. குறிப்பாக ஜாகோர் காலத்தில் எடுக்கப்பட்ட பொருள்கள் ஜெர்மனில் உள்ள பெர்லின் நகரிலும், அலெக்ஸாண்டர் ரியா காலத்தில் எடுத்த பொருள்கள் லண்டனிலும் உள்ளது. அதை மீட்க மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதில் மீட்கப்படும் பொருட்கள் அனைத்தையும் ஆதிச்சநல்லூரில் அமைய உள்ள உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.
இதே கோரிக்கை தொல்லியல் ஆர்வலர்களிடம் ஏற்பட்டுள்ளது. எனவே விரைவில் இந்த கோரிக்கையை ஏற்க மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்கும் என இவர்கள் நம்புகிறார்கள்.


