கருங்குளம் ஒன்றியத்தில் 31 பஞ்சாயத்து உள்ளது. இந்த பஞ்சாயத்து தாமிரபரணி ஆற்றின் இருகரையிலும் உள்ளது. சேரகுளம் இராமனுஜம்புதூர் பகுதி மணிமுத்தாறு பாசன பகுதியிலும் , செக்காரக்குடி பகுதிகள் உப்பலோடை வடிகால் பகுதியிலும் உள்ளது. எனவே மாவட்ட ஆட்சித் தலைவர் இளம் பகவத் அவர்களின் ஆலோசனை பெயரில் கருங்குளம் ஒன்றியம் முழுவதும் வெள்ளத்தடுப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கிட்டதட்ட கலியாவூரில் இருந்து புன்னகாயல் வரை 70 சதவீதம் குளங்கள் நிறைந்துள்ளது. மேலும் கால்நடைகளை காப்பாற்றவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தாழ்வான இடத்தில் வசிக்கும் மக்களை மேடான பகுதிக்கு கூட்டிச்செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கருங்குளம் ஒன்றியத்தில் சேர்மன் கோமதி ராஜேந்திரன் தலைமையில் ஆணையாளர் ஜவகர், கூடுதல் ஆணையாளர் வசந்தா, பொறியாளர்கள் தளவாய், மாரியப்பன் மற்றும் குழுவினர் அவசரகால நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறார்கள். மக்கள் வெள்ளத்தில் சிக்கிக்கொண்டால் அவர்களை மீட்கவும், அவர்களுக்கு உணவு வழக்குவதற்கும் ஏற்பாடு நடந்து வருகிறது.
இது குறித்து கருங்குளம் ஒன்றிய சேர்மன் கோமதி ராஜேந்திரன் கூறும் போது “வங்ககடலில் உருவான தாழ்வான காற்றழுத்து மண்டலம் மூலமாக தூத்துக்குடி மாவட்டத்தில் கடுமையான மழை பெய்து வருகிறது. இந்த மழை வருகிற 14 ந்தேதி வரை நீடிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மக்களை மழை வெள்ளத்தில் இருந்து பாதுகாக்க மாவட்ட ஆட்சி த்தலைவர் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். மீட்பு பணிக்கென படகு , பேரிடர் மீட்பு பணியினர் தயார் நிலையில் உள்ளனர். ஆனாலும் பொதுமக்கள் கவனமாக இருக்க வேண்டும். தங்கள் பொருள்களை தாழ்வான இடத்தில் இருந்து மேடான பகுதிக்கு எடுத்துச்சென்று பத்திரப்படுத்திக்கொள்ளவேண்டும். மழை நீர் தேங்கும் இடத்தில் மின்கம்பிகள் எதுவும் அறுந்து விழுந்தாலே வேறு எதுவும் இடர் ஏற்பட்டாலே அருகில் உள்ள பஞ்சாயத்து தலைவர் மற்றும் பஞ்சாயத்து கிளார்க் வசம் தகவல் கூறவும். என்று கூறியுள்ளார்.
கடந்த ஆண்டு டிசம்பர் 17 ந்தேதி வந்த தாமிரபரணி ஆற்றுவெள்ளத்தில் பல பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் கவனமாக இருக்க வேண்டும் என்று அவர் மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.


