ஒரு கோடி பனை மர விதைகளை விதைப்பதற்காக மதர் சமூக சேவை நிறுவனம் சார்பில் இயக்குனர் டாக்டர் எஸ் ஜே கென்னடி தலைமையில் சேகரிக்கப்பட்ட பனை விதைகளில் தரமான “விதைகள் பிரித்தெடுக்கும் பணி” மிக தீவிரமாக சிறப்பாக நடைபெற்று வருகிறது.
மதர் சமூக சேவை நிறுவனம் சார்பில் தமிழகத்தில் புயல், சூறாவளி, பூகம்பம் போன்ற இயற்கை சீற்றங்களை தடுக்க, கடற்கரை, தீவுப் பகுதிகளிலும், நீர் பிடிப்பு பகுதிகளில் கரையை வலுப்படுத்த, மண்ணரிப்பை தடுக்க ஆற்றங்கரை, குளத்தங்கரை, வாய்க்காங்கரை பகுதிகளிலும், நிலத்தடி நீரை மேம்படுத்த அரசு புறம்போக்கு இடங்களிலும், சாலை ஓரங்களிலும் கடந்த ஆறு ஆண்டுகளாக ஒரு கோடி பனை மரங்களை வளர்க்க வேண்டும் என்பதற்காக தொடர்ந்து பனைமர விதைகளை விதைத்து வருகிறார்கள். தற்போது வரை சுமார் 77 லட்சம் பனை மர விதைகளை விதைத்துள்ளனர்.
இதன் தொடர்ச்சியாக இந்த ஆண்டும் பனைமர விதைகளை விதைத்து வருகிறார்கள். அதற்காக மிக தீவிரமாக உடன்குடி, சாத்தான்குளம், திருச்செந்தூர், ஆழ்வார் திருநகரி, மற்றும் ஸ்ரீவைகுண்டம் ஆகிய ஒன்றியங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் மதர் சமூக சேவை நிறுவன இயக்குனரும், மாவட்ட கிரீன் கமிட்டி உறுப்பினரும், தமிழ்நாடு பனை பாதுகாப்பு மற்றும் தொழிலாளர் மேம்பாட்டு இயக்க மாநில தலைவருமான டாக்டர் எஸ்.ஜே.கென்னடி அவர்கள் தலைமையில் அங்கமங்கலம் பஞ்சாயத்து தலைவர் பானுப்பிரியா பாலமுருகன், லீடு டிரஸ்ட் தொண்டு நிறுவன இயக்குனர் எஸ் பானுமதி. அங்கமங்கலம் சமூக ஆர்வலர் பாலமுருகன் முன்னிலையில், தமிழ்நாடு பனை பாதுகாப்பு மற்றும் தொழிலாளர் மேம்பாட்டு இயக்க மாநில துணைத்தலைவர் ஏ பொ. சுதாகர், தென் மண்டல தலைவர் எல்.ராம்குமார், தென் மண்டல செயலாளார் இம்மானுவேல், திருச்செந்தூர் ஒன்றிய தலைவர் காயல் பாலா, மற்றும் சமூக ஆர்வலர்கள் சேகரித்த பனை விதைகளில் தரமான “பனை விதைகள் பிரித்தெடுப்பு பணி” மிக தீவிரமாக நடைபெற்று வருகிறது.
தற்போது பிரித்தெடுக்கப்பட்ட தரமான பனைமர விதைகள் கடம்பாகுளம் கரையோரங்களிலும், கடம்பா வடிகால் ஓடை ஓரங்களிலும், மற்றும் கடற்கரை பகுதியில் தொடர்ந்து விதைக்கப்பட உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை மதர் சமூக சேவை நிறுவன பணியாளர்களும், அங்கமங்கலம் பஞ்சாயத்து நிர்வாகத்தினரும் சிறப்பாக செய்துள்ளனர்.


