திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவிலைச் சேர்ந்தவர் சங்கன் மகன் முனிய சங்கர்(33). இவர் திருநெல்வேலி அருகே உள்ள கங்கைகொண்டான் சிப்காட்டில் கண்டெய்னர் லாரி ஓட்டுனராக பணியாற்றி வருகிறார். இவர் நேற்று கங்கைகொண்டான் சிப்காட்டில் இருந்து கண்டெய்னர் லாரியில் பிஸ்கட் ஏற்றிக் கொண்டு சாத்தான்குளம் நோக்கி வந்து கொண்டிருந்தார். நேற்று இரவு ஆழ்வார்திருநகரி தெப்பக்குளம் அருகே நிறுத்தி விட்டு ஓய்வெடுத்த அவர், இன்று காலை 8 மணி அளவில் மீண்டும் லாரியில் சாத்தான்குளம் நோக்கி சென்று கொண்டிருந்தார்.
லாரி தென்திருப்பேரை அருகே உள்ள செம்பூர் வளைவில் வந்து கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்து வயல்வெளியில் தலைகுப்புற கவிழ்ந்து விழுந்தது. மேலும் லாரியில் இருந்த டீசல் கவிழ்ந்தது.
இந்த விபத்தில் லாரி ஓட்டுநர் முனியசங்கர் சிறிய காயத்துடன் உயிர் தப்பினார். இதுகுறித்து தகவல் அறிந்தவுடன் ஆழ்வார்திருநகரி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து லாரி ஓட்டுநரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


