தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் வெள்ளையன் இறுதி அஞ்சலியை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று சுமார் 40 ஆயிரம் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன.
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உள்ள பிச்சிவிளை கிராமத்தை சேர்ந்தவர் வெள்ளையன். இவர் தமிழகத்தில் முதன் முதலில் வியாபாரிகளை ஒன்றிணைத்து தமிழ்நாடு வியாபாரிகள் சங்கங்களின் பேரவை என்ற அமைப்பை தொடங்கி தமிழகத்தில் உள்ள அனைத்து வியாபாரிகளையும் ஒன்றிணைத்து வியாபாரிகளின் நலனுக்காக பாடுபட்டவர்.
இவர் உடல் நல குறைவு காரணமாக நேற்று முன்தினம் காலமானார். இவரது உடல் சொந்த கிராமமான திருச்செந்தூர் அருகே உள்ள பிச்சிவிளையில் இன்று நல்லடக்கம் செய்யப்பட உள்ளது. இதையொட்டி இவருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் வணிகர்கள் தூத்துக்குடி, ஸ்ரீவைகுண்டம், திருச்செந்தூர்,ஏரல், உடன்குடி, சாத்தான்குளம் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகள் முழுவதும் சுமார் 40 ஆயிரம் கடைகளை அடைத்து மரியாதை செலுத்தி வருகின்றனர்


