தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே உள்ள அழகிய கிராமம் குரங்கணி. இந்தக் கிராமத்தில் தான் முத்துமாலையம்மன் வீற்றிருக்கிறாள். கேட்டவருக்குக் கேட்ட வரம் தரும் அற்புத தெய்வமான இவள் இங்கு வந்து அருள்புரிய காரணமான கதை இதோ.
ராமபிரான் ராவனனைப் போர்புரிந்து வெல்ல காரணமான இடமாகக் குரங்கணி கூறப்படுகிறது. வானரச் சேனைகள் அணிவகுத்து நின்ற இடமாக அதாவது குரங்குகள் அணி வகுத்து நின்றதால் இந்த இடம் குரங்கணி என அழைக்கலாயிற்று. ராவணன் சீதா தேவியை புஷ்பக விமானத்தில் விண்ணில் கவர்ந்து சென்றான். அப்போது ராமபிரானுக்கு அடையாளம் காட்ட தனது கழுத்தில் கிடந்த முத்துமாலையை எடுத்து சீதாதேவி வீசினாள். அந்த முத்துமாலை விழுந்த இடம் குரங்கணி. காசியில் சக்தியின் காதணி விழுந்த இடத்தில் விசாலாட்சி தோன்றினாள். அதுபோலவே தாமிரபரணிக்கரையில் விழுந்த முத்துமாலை ஜோதிப்பிழம்பாய் காட்சியளித்தது. அந்த ஒளியைக் காண முடியாமல் கண்கள் கூசியது. அப்போது அங்கே வந்த பனை யடியான் என்பவர் அந்த முத்து மாலையை பார்த்தார். அங்கே கிடந்த ஒரு மண் தாழியை எடுத்து அதற்குள் அந்த மாலையை வைத்து அவர் மூடி விட்டார். அந்த மாலையில் அம்மன் இருந்து அருள் வழங்க ஆரம்பித்தாள். முத்துமாலையில் வந்த அம்மன் என்பதால் முத்துமாலை அம்மன் என்று அழைக்கப்பட்டார். ராமாயண காலத்தில் நடந்த இந்தச் சம்பவத்தை மெய்ப்பிப்து போல் தற்போதும் கூட குரங்கணி முத்துமாலை அம்மனின் பீடத்திற்கடியில் அந்த மாலை இருப்பதாகக் கருதப்படுகிறது.
காலங்கள் உருண்டன. ஒருமுறை தாமிரபரணி ஆற்றில் பெரும் வெள்ளம் ஏற்பட்டது. அப்போது தாழியோடு இந்த முத்துமாலையும் மூழ்கியது. இந்தப் பகுதியில் வாழ்ந்த நான்கு சகோதரர்கள் கனவில் அம்மன் தோன்றி, ‘‘எனக்கு இந்த இடத்தில் ஒரு கோயில் கட்டு, நான் மக்களுக்கு வேண்டும் வரம் தருகிறேன்’’ என்றாள். அதன்படி அவர்கள் அனைவரும் தாழி இருந்த இடத்துக்கு வந்து அம்மனை வணங்கி நின்றனர். அம்மனுக்குக் கல்லால் மண்டபம், கோபுரம் மற்றும் கோட்டை மதிலுடன் கோயில் கட்டினார்கள். அம்மன் தனது அருட்கொடையால் அனைவருக்கும் கேட்ட வரம் தந்தார். மக்கள் கூட்டம் கூட்டமாக வந்து அவரை வணங்க ஆரம்பித்தனர்.
இதற்கிடையே இந்தப் பகுதியில் நவாப் ஆட்சி நடந்த போது ஒரு அபூர்வ சம்பவம் நிகழ்ந்தது. இந்தக் கோயில் கோட்டைச்சுவர் தாமிரபரணிக்கரையைத் துண்டு படுத்தியது. இதனால் கோட்டைச் சுவரை இடித்து கரையை நேராக அமைக்க வேண்டும் என்று நவாப் ஆசைபட்டார். தனது படை வீரர்களுடன் குதிரை மீது அமர்ந்த படி அம்மன் கோயில் கோட்டை சுவரை இடித்து விட வேண்டும் என அவர் திட்டமிட்டார்.
இதையறிந்த நான்கு சகோதரர்களின் வம்சா வழியில் வந்த அறுபது பங்கு நாடார்களின் முன்னோர்கள் ஒன்று திரண்டனர். கோயிலை இடிக்க வேண்டாம் என நவாப்பிடம் கெஞ்சிக் கேட்டனர். ஆனால், அவர் ‘‘நான் கூப்பிட்டால் என்னை நோக்கி அந்த அம்மன் திருப்பி சத்தம் கொடுக்குமா’ என்று எக்காளத்துடன் கேட்டார். ‘‘ஆம்! சத்தம் தரும்’’ என்று அவர்கள் சொன்னார்கள். சோதித்து பார்க்க நினைத்த அவர் அம்மனை நோக்கி ‘‘முத்துமாலை… முத்து மாலை’’ என்று மூன்று முறை கூப்பிட்டார். அப்போது தான் அந்த அதிசயம் நிகழ்ந்தது. கோயில் கருவறையில் இருந்து இடி போன்ற சத்தம் ஒலித்தது. அந்தப் பகுதியே பூகம்பம் ஏற்பட்டது போல் அதிர்ந்தது.
இதனால் அதிர்ச்சியடைந்த நவாப்பும், அவருடன் வந்த அதிகாரிகளும் குதிரையுடன் மயங்கி கீழே விழுந்தனர். அப்போது அங்கே கூடி இருந்த அம்மனின் பக்தர்களும், படை வீரர்களும் பய பக்தியுடன், ‘‘தாயே.. மன்னித்து விடு’’ என்று வேண்டி நின்றனர். உடனே, சாமியாடி அம்மனின் தீர்த்தத்தை எடுத்து நவாப் முகத்தில் தெளித்தார். அதன்பிறகு நவாப்புக்கும், குதிரைக்கும் சுய நினைவு வந்தது. கோயிலை இடிக்காமல் அம்மனிடம் மன்னிப்பு கேட்டார் நவாப். இந்தச் சம்பவத்தின் நினைவாகக் கோயில் வளாகத்தில் இரண்டு குதிரைகளை நிர்மானிக்க அவர் உத்தரவிட்டார். பின்னர் குரங்கணி அம்மனின் பக்தராகவே அவர் மாறிவிட்டார்.
அந்தக் குதிரை சிலைகளைத் தற்போதும் இங்குள்ள பெரிய சுவாமி சன்னதி அருகில் காணலாம். பழங்காலத்தில் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் மட்டுமே நடை திறக்கப்பட்டு மதியம், இரவு பூஜைகள் நடந்து வந்தது. அம்மனுக்கு மண் திருமேனியே இருந்தததால் அபிஷேகம் நடக்கவில்லை. இலங்கையில் சிறைபிடிக்கப்பட்டிருந்த சீதாதேவி உண்ணாமல் உறங்காமல் தவம் இருந்ததைச் சித்தரிக்கும் வண்ணம் அம்மனுக்குத் தீபம் ஏற்றி வணங்கி வந்தனர்.
1957ல் அம்மனுக்கு மகா கும்பாபிஷேகம் நடந்தது. அப்போது அம்மனின் முத்துமாலையை மூடியிருந்த ஓட்டுச் சிலை மாற்றப்பட்டது. அதற்கு பதிலாகக் கல்லால் ஆன திருமேனி பிரதிஷ்டை செய்யப்பட்டது. அதன் பிறகு தினசரி அம்மனுக்கு அபிஷேகம் செய்து வைவேத்தியங்கள் படைத்து பகல், இரவு பூஜைகள் சிறப்பாக நடக்கிறது.
தாமிரபரணி கரையில் உள்ள இந்தக் கோயிலின் முகப்புதோற்றம் சிறிதாக உள்ளது. ஆற்றங்கரையை நோக்கியும் ஒரு வாசல் இருக்கிறது. முன்புறம் வழியாகக் கோயிலுக்குள் நுழைந்தால் கல் மண்டபம் உள்ளது. அதைத்தாண்டி உள்ளே சென்றால் கல்தூண்கள் உள்ளன. அந்த இடத்தில் நின்று பார்த்தால் கருணை வடிவான குரங்கணி தாயாரை நாம் வணங்கலாம். அம்மனுக்கு இடதுபுறம் நாராயணர், ஸ்ரீதேவி பூதேவி தயார்களுடன் கோபுரத்துடன் கூடிய சன்னதியில் அமைந்துள்ளார்.
முத்துமாலை அம்மனுக்குத் தென்புறம் வடக்கு நோக்கி பெரிய சுவாமி சன்னதி உள்ளது. இந்தச் சன்னதி தோன்ற கா£ரணமாக இந்தப் பகுதி மக்கள் கீழ்க்கண்ட கதையைக் கூறுகின்றனர்.
ஒரு காலத்தில் இந்தக் கோயில் பூசாரி மற்றும் இவ்வூரை சேர்ந்த நான்கு சகோதரர்கள் கனவில் முத்துமாலை அம்மன் தோன்றி ‘‘மலையாள தேசத்தில் இருக்கிறான் என் காவல் வீரன் பெரியசாமி. அவன் நாளை தாமிரபரணி வெள்ளத்தில் சிலை வடிவில் நமது கோயில் அருகே மிதந்து வருவான். அவனை மேளதாளத்தோடு வரவேற்று எனது கோட்டைக்குள் எனக்கு வலப்புறம் வடக்கு நோக்கி பிரதிஷ்டை செய்யுங்கள்’ என்று கூறினாள்.
உடனே பூசாரி உள்பட நான்கு சகோதரர்களும் மேளதாளத்துடன் புறப்பட்டு தாமிரபரணிகரைக்கு சென்றனர். அப்போது தாமிரபரணி வெள்ளத்தில் பெரியசாமி மிதந்து வந்தார். அவரை எடுத்து கோயிலில் வடக்கு நோக்கி பிரதிஷ்டை செய்தனர். அன்று முதல் பக்தர்கள் இவரை வணங்கி அனைத்து பேறுகளையும் பெறுகின்றனர். பெரிய சுவாமியின் கம்பீர தோற்றம் காண்போரைக் கவரும். இவருடைய ஒளி பொருந்திய கண்கள் பேய் பிசாசு, பில்லி, சூனியம், ஏவல் போன்ற தீவினைகளைப் பொடிப்பொடியாக்கும்.
மேலும் சக்தி மிக்க பெண் தெய்வங்களான முப்பிடாதி அம்மன், சப்த கன்னிகைகள், பார்வதி அம்மன். உஜ்ஜைனி மாகாளி அம்மன், பேச்சியம்மன், பிரம்மசக்தி, மாரியம்மன், சந்தன மாரியம்மன் மற்றும் ஆண் தெய்வங்களான பைரவர், வீரபத்திரர் முதலியோருக்குத் தனித்தனி சன்னதிகள் இங்கு உள்ளன.
விநாயகர், காசிவிஸ்வநாதர், விசாலாட்சி ஆகியோர் ஒரே சன்னதியில் வீற்றிருக்கின்றனர். நவக்கிரக சன்னதி, பலி பீடத்துடன் துர்க்கை அம்மன், கோயிலை நிறுவிய பனையடியான் பீடம் ஆகியவையும் இங்குள்ளது. மூலஸ்தானத்தில் உள்ள முத்து மாலையம்மன் கிழக்கு நோக்கி அமர்ந்து அருள் பாலிக்கிறார். அறிந்தும் , அறியாமல் செய்த பாவங்களும் அவள் அருளால் தொலைந்து போகும். தன்னை வேண்டி நிற்பவர்களுக்கு வரங்களையும், வளங்களையும் இவர் வாரி வழங்குகிறார்.
குரங்கணி முத்துமாலையம்மன் கோயிலுக்குத் தென்புறம் கோயில் வீடு என்ற இடம் உள்ளது. இந்த இடத்தில் ஒரு பெரிய ஆலமரம் இருந்ததாகவும் அதன் நிழலில் அமர்ந்து ராவணனால் சிறைபிடிக்கப்பட்ட சீதையை மீட்பது குறித்து ராமர், லட்சுமணர், அனுமன், சுக்ரீவன், ஆகியோர் கூடி ஆலோசனை செய்ததாகவும் கூறப்படுகிறது.
இந்தச் சம்பவத்தைக் கருத்தில் கொண்டு சிறப்பு பூஜை இங்கு நடக்கும். அப்போது அம்மன் கோயிலுக்குத் தாமிரபரணி ஆற்றிலிருந்து நிறை குடத்தில் தண்ணீர் கொண்டு வந்து நாராயணசுவாமி சன்னதியில் வைப்பார்கள். இந்த நிறைகுடத்து நீரை அங்கே உள்ள எந்த விக்கிரகத்துக்கும் அபிஷேகம் செய்ய மாட்டார்கள். மதியம் அர்ச்சகர் அந்த நிறை குடத்துடன் கோயில் வீட்டிற்குச் செல்வார். அங்கு சிறப்பு பூஜை நடக்கும். பருப்புக் குழம்புடன் பனை ஓலை பட்டையில் அன்னத்தைப் படைப்பார்கள். பூஜை முடிந்ததும், நிறை குடத்திலிருந்தது தீர்த்தத்தைப் பக்தர்களின் முகத்தில் தெளித்து அர்ச்சகர் விபூதி கொடுப்பார். இதனால் இங்கு வருபவர்களின் நோய்கள் குணமடையும்.
இக்கோயிலில் ஆண்டு தோறும் ஆனிப்பெருந்திருவிழா, தைத்திருமாலை பூஜை ஆகியவை மிகவும் சிறப்பாக நடக்கும். ஆனிமாதக் கடைசி செவ்வாய்கிழமை நடைபெறும் ஆனித்திருவிழாவின் போது முத்துமாலை அம்மனுக்குச் சொக்கத் தங்கத்தால் திருமேனி அணிவித்து அலங்காரம் செய்யப்படும்.
ஆனிப்பெருந்திரு விழாவையட்டி 15 நாட்களுக்கு முன்பு கால் நாட்டு வைபவம் நடக்கும். முத்துமாலை அம்மன் சன்னதியின் தென்புறம் முப்பிடாதி அம்மன் முன்னிலையில் அன்று மதியம் அம்மன் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு மகா அபிஷேகம், அலங்கார தீபாரதனை நடத்தப்படும். பின்னர் கால் நடப்படுகிறது. அப்போது காலுக்குக் குடமுழுக்காட்டி, சந்தனம், குங்குமம், செம்மலர், வெண்மலர், வேப்பிலை, மாவிலை அணிவித்து திருக்காலுக்கு அர்ச்சகர் தீபாராதனை செய்வார். அந்த சமயத்தில் வானில் கருடன் வட்டமிட்டபடி பறக்கும். இதை பக்தர்கள் பக்தி பரவசத்துடன் வணங்கி நிற்பார்கள்.
அன்று நள்ளிரவில் அம்மன் கோயில் அர்ச்சகர் மற்றும் ஊரைச் சேர்ந்த நால்வர் மட்டும் கோயிலில் இருப்பார்கள். கோயில் பணியாளர் ஒருவர் மட்டும் ஊருக்குள் செல்வார். அவர், அம்மன் சன்னதியில் இருந்து புறப்பட்டு, “இன்று முதல் 15ம் நாள் அம்மன் கோயிலுக்குக் கொடை போட்டுள்ளோம்… நோன்போ நோன்பு” எனக் கூவிச் செல்வார் . அதன் பிறகு 15 நாட்களும் இக்கோயிலுக்கு வரும் பக்தர்கள் பக்தியுடன் விரதம் கடை பிடிக்க துவங்குவர்.
இத்திருவிழாவிற்கு எட்டு நாட்கள் முன்பாகச் சிறுவர்களில் ஆண்களும், பெண்களும் கடுமையான விரதம் இருப்பார்கள். ஆண்கள் பெரியசுவாமியின் முன்பு கயிறு சுற்றி ஆடி நேர்த்திக்கடன் செலுத்துவார்கள். பெண்கள் அம்மனுக்கு மாவிளக்கு பெட்டி எடுத்து கோயிலைச் சுற்றி வருவார்கள். அம்மை நோய் கண்டவர்கள் அம்மனுக்கு வெண்ணீர் கொழுக்கட்டை செய்து படைபார்கள். இவை கண்கொள்ளா காட்சியாகும்.
விரதம் முடியும் 15ம் நாள் ஆனி மாதக் கடைசி செவ்வாய் கிழமையன்று உச்சகட்ட விழா நடக்கும். இதற்காகத் திங்கள் கிழமை மாலை அம்மனின் தங்கத்திருமேனி அலங்கார ஆபரணங்கள் மேளதாளத்தடன் எடுத்துச்செல்லப்படும். தொடர்ந்து அம்மன் திருநடை திறப்பு வைபவம் நடக்கும். அம்மனுக்கு மகா அபிசேகம் செய்து தங்கத்திருமேனி இடை விடாத தீப பூஜைகள் நடக்கும்.
திங்கள் கிழமை இரவு சின்ன கற்பக சப்பரத்தில் அம்மன் கோட்டைக்குள் ஸ்ரீநாராயணர், ஸ்ரீதேவி, பூதேவி தாயார்கள் அம்மனை வலம் வருவர். செவ்வாய்கிழமை இரவில் பெரிய கற்பக பொன் சப்பரத்தில ஸ்ரீநாராயணர், ஸ்ரீதேவி, பூதேவி தாயார்களுடன் முதலில் அம்மன் கோட்டையை வலம் வந்து பின்னர் குரங்கணி வீதியில் உலா வருவர்.
ஆனிப்பெருந்திருவிழா முடிந்த எட்டாம் நாள் தூய்மைப் படுத்தும் தீர்த்த வாரிதிருவிழா நடைபெறும். அன்று உற்சவர்கள் ஸ்ரீநாராயணர், ஸ்ரீதேவி, பூதேவி தாயார்கள் தாமிரபரணியில் தீர்த்தவாரிக்கு எழுந்தருளுவர்.
அம்மன் கோட்டை வளாகத்தில் பக்தர்கள் அக்கினிச் சட்டியில் சாம்பிராணி உள்ளிட்ட சந்தனப் பொடிகள் தூவி தூபமிட்டு அம்மனை வலம் வருவார்கள்.
இத்திருக்கோயிலில் தை மாதம் கடைசி செவ்வாய்கிழமையும் விமர்சையாக விழா நடக்கும். தைத்திருமாலை பூஜை விழாவின் போது ஆனிப் பெருந்திருவிழாவைப் போலவே அனைத்து வைபவங்களும் நடந்தேறும். தை மாதம் கடைசி செவ்வாய்க்கிழமைக்கு மறுநாள் நிகழும் தீர்த்தவாரியன்று மதியம் சிறப்பு பூஜை நடக்கும். பின்னர் கோயில் அர்ச்சகர்கள் நால்வர் மட்டும் பங்கேற்கும் கும்பிடு நமஸ்காரம் வைபவம் நடைபெறும். அப்போது பக்தர்கள் தெய்வத்தின் சன்னதிகளுக்கு அப்பால் நின்று மவுனம் காப்பார்கள். அந்தநேரத்தில் வானில் கருடன் வட்டமிடும். இதைப் பார்த்த பக்தர்கள் ஆனந்தம் அடைவார்கள். அன்று அம்மன் கோட்டைக்குள் பக்தர்கள், பொங்கலிட்டு, படைத்த வாழைக்குலைகளை வீட்டுக்கு எடுத்துச்செல்வர்கள். தமிழ்நாட்டிலுள்ள அம்மன் கோயில்களில் சிறப்பு பெற்றதும், தூத்துக்குடி மாவட்டத்தில் முதலிடம் வகிப்பதும் குரங்கணி முத்துமாலை அம்மன் கோயிலாகும்.
அமைவிடம்: நெல்லை – திருச்செந்தூர் நெடுஞ்சாலையில் நவதிருப்பதிகளில் ஒன்றான தென் திருப்பேரையில் இருந்து ஏரல் செல்லும் சாலையில் இரண்டு கிலோ மீட்டர் தூரத்திலும், ஏரலில் இருந்து மூன்று கிலோ மீட்டர் தூரத்திலும் இக்கோயில் அமைந்துள்ளது. தென்திருப்பேரையில் இருந்தும் ஏரலில் இருந்தும் கோயிலுக்கு ஆட்டோ வசதி உள்ளது.


