
தாமிரபரணி நதி வற்றாத ஜீவ நதி. நெல்லை தூத்துக்குடி மாவட்டத்தில் ஓடக்கூடிய நதி. பல கோடி லிட்டர் தண்ணீரை தினமும் நெல்லை, தூத்துக்குடி, விருதுநகர், தென்காசி மாவட்டத்துக்கு தரக்கூடியது. தாகத்தினை போக்கும் நதிக்கு தாமிரபரணி மகாத்மியம் படி வைகாசி விசாகம் அன்று தான் பிறந்த நாள் விழா என கூறுகிறார்கள் ஆன்மிக பெரியோர்கள். அகத்திய பெருமான் இன்று தான் தாமிரபரணியை உருவாக்கினார் என்று கூறப்படுகிறது. வைகாசி விசாகம் தாமிரபரணி ஆற்றில் பல்வேறு ஆன்மிக சம்பவங்கள் நடைபெற்றுள்ளதாக மக்கள் கொண்டாடி வருகிறார்கள். இன்று தான் நம்மாழ்வார் பிறந்தநாள், முருகப்பெருமான் பிறந்த நாளும் இதுதான். குபேரன் தனது இழந்த பொருளை தாமிரபரணி ஆற்றங்கரையில் திருக்களூர் என்னும் இடத்தில் தவமிருந்து மீட்ட இடமும் தாமிரபரணி கரை தான். எனவே இந்நாளில் தாமிரபரணி கரையில் உள்ள ஆலயங்களில் சிறப்பு ஆராதனைகள் நடைபெற்றது. இந்நாளில் தாமிரபரணியில் குளித்தால் 12 வருடங்களுககு ஒரு முறை வரும் மகாமகத்தில் குளித்த புண்ணியம் கிட்டும். எனவே மக்கள் ஆர்வத்துடன் தாமிரபரணியில் குளித்து மகிழந்தனர். மேலும் ஞாயிற்றுக்கிழமையாக இருந்த காரணத்தினால் ஒவ்வொரு துறையிலும் கூடுதலாக மக்கள் ஞானம் செய்தனர்.
இதனை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள கருங்குளம் தாமிரபரணி ஆற்றில் பிறந்த நாள் விழா தாமிரபரணி நல இயக்கம் சார்பில் கொண்டாடப்பட்டது. தொடர்ந்து 23 வருடங்கள் இந்த நிகழ்ச்சியை தாமிரபரணி நல இயககத்தினர் கொண்டாடி வருகிறார்கள். இந்த வருடம் கருங்குளம் தாமிரபரணி ஆற்றின் கரையில் 10 மரக்கன்றுகள் நடப்பட்டது. அதனை தொடர்ந்து தாமிரபரணி நதியில் அனைவரும் வரிசையாக நின்று நதியை காக்க உறுதிமொழி எடுத்தனர். தொடர்ந்து நதிக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். இந்த நிகழ்ச்சியில் ஸ்ரீவைகுண்டம் வட்டாட்சியர் ராதாகிருஷ்ணன் தலைமை வகித்தார். செய்துங்கநல்லூர் சப்இன்ஸ்பெக்டர் ராதாகிருஷ்ணன் முன்னிலை வகித்தார். எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு வரவேற்றார். கிராம உதயம் மேல ஆழ்வார் தோப்பு தொண்டு நிறுவனம் சார்பில் 10 மரக்கன்று களை நட்டு, அதற்கு கம்பி வலையும் அமைககப்பட்டது. இந்த மரத்தினை பாதுகாத்து வளர்க்கும் பொறுப்பை தாமிரபரணி நல இயகத்தினை சேர்ந்த முருகன், ராமகிருஷ்ணன் மற்றும் கேசவனிடம் ஒப்படைக்கப்பட்டது.
செய்துங்கநல்லூர் வருவாய் ஆய்வாளர் மைதிலி, கிராம நிர்வாக அதிகாரி முனைவர் கந்தசுப்பு, கிராம உதயம் மேலாளர் வேல்முருகன், மும்பையை சேர்ந்த மாயாண்டி, தாமிரபரணி நல இயக்கத்தினை சேர்ந்த ஆறாம்பண்ணை பஞ்சாயத்து தலைவர் சேக்அப்துல்காதர், கருங்குளம் முருகன், கேசவன், ராமகிருஷ்ணன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
தாமிரபரணி நல இயக்க நிறுவனர் எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு கூறும் போது , தாமிரபரணி பிறந்த நாளை நாங்கள் கடந்த 23 வருடத்திற்கு முன்பிருந்தே கருங்குளம் தாமிரபரணி ஆற்றில் கொண்டாடி வருகிறோம். ஒவ்வொரு வருடமும் தாமிரபரணியை காப்போம் என உறுதி மொழி எடுத்து வந்தோம். தற்போது தாமிரபரணியை பற்றிய விழிப்புணர்வு நெல்லை தூத்துக்குடி மாவட்ட மக்கள் மத்தியில் வந்துள்ளது. எனவே ஆங்காங்கே தாமிரபரணியை சுத்தப்படுத்துதல் மரக்கன்று நட்டு, நதியை தூய்மை படுத்துதல் போன்ற பணிகள் நடந்து வருகிறது. எனவே எங்களுக்கு மகிழ்ச்சியை தருகிறது. தற்போது ஒவ்வொரு கிராமத்திலும் இளைஞர்கள் நதியை காப்பாற்ற வேண்டும் என ஆசைப்பட்டு மரககன்று நட்டு வருகிறார்கள். தூத்துககுடி மாவட்டத்தில் ஆழிகுடி, ஆறாம்பண்ணை, முத்தாலங்குறிச்சி ஆகியபஞ்சாயத்துகளில் மாவட்ட ஆட்சி தலைவர் செந்தில் ராஜ் அவர்கள் இந்த திட்டத்தினை துவக்கி வைத்துள்ளார். வருங்காலத்தில் நதியை சுத்தப்படுத்த திட்டமிட்டு வருகிறார். எனவே நாங்கள் இந்த வருடம் தாமிரபரணி பிறந்த நாளை மரம் நட்டு பாதுகாக்கும் விதமாக கொண்டாடினோம். இதற்கு மேலஆழ்வார் தோப்பு கிராம உதய தொண்டு நிறுவனத்தினர் மரக்கன்று மற்றும் கூண்டுகள் தந்து உதவினர். எனவே ஸ்ரீவைகுண்டம் தாசில்தார் ராதாகிருஷ்ணன் தலைமையில் செய்துங்கநல்லூர் சப்இன்ஸ்பெக்டர் ராதாகிருஷ்ணன் முன்னிலையில் கிராம உதயம் தொண்டு நிறுவனம் சார்பில் மரக்கன்று நட்டு , உறுதி மொழி எடுத்தோம். தற்போது நெல்லை தூத்துக்குடி மாவட்ட ஆட்சி தலைவர்கள் இரண்டு பேரும் தாமிரபரணியை காப்பாற்ற நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்பட்டிருக்கிறது. எனவே கூடிய விரைவில் தாமிரபரணி பாதுகாக்கப்படும் என்று நம்புகிறேன் என்று கூறினார்.
மேலும் தாமிரபரணி கருங்குளம் ஆற்றில் குளிக்கும் மக்களுக்கு பிரச்சனையாக உள்ள கான்கிரிட் கழிவுகளை அகற்ற வேண்டும், இரவு பாலத்துக்கு அடியில் குளிக்கும் மக்களுக்கு வெளிச்சம் தரும் வகையில் சோலார் விளககு அமைக்க வேண்டும் என முருகன் கோரிக்கை வைத்தார். ஆவண செய்வதாக தாசில்தார் வாக்களித்தார்.
&&


