பலரும் கதராடை அணிவதைத் தம் குறிக்கோளாக் கினர். தற்போதும் இக்குடும்பங்களைச் சேர்ந்த பெரியவர்களும், விடுதலைப் போரில் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ தொடர் புடையவர்களும் கதராடையில் மிளிர்வதைக் காணமுடிகிறது. காந்தி பேசிச் சென்ற இடத்திலிருக்கும் விநாயகர். காந்தி விநாயகர் எனப் பக்கிள்புரம் சந்திப்பில் பெயர் சூட்டப்பட்டுள்ளார். காந்தியை மாதிரி மொட்டையடித்து உடை உடுத்தி அலங்கரித்து அதைப் புகைப்படமாக்கி மகிழ்ந்த (காந்திய சுடலை) இளைஞர் இப்பகுதியில் சிற்றுண்டிக்கடை நடத்தி வருகிறார். 1941ம் ஆண்டில் நடைபெற்ற (9.11.1941 – ஈனமுத்து – மாடத்தி அம்மாள்: சமுஸீ – பிரமு அம்மாள்) ஒரு திருமண வைபவப் பத்திரிக்கையில் இச்சமூகத்தைச் சேர்ந்த இரு குடும்பங்களின் மணமக்கள் காந்தியின் படம் போட்ட அதற்கு கீழே வந்தே மாதரம் என்ற சுலோகத்துடன் திருமணப் பத்திரிக்கையைத் தயாரித்து விநியோகித் துள்ளது தெரிய வருகிறது. தமிழகத்தில் நடைபெற்ற விடுதலைப் போராட்டக் கிளர்ச் சிகளில் பல்வேறு சமூகங்களின். இனக்குழுக்களின் தலைவர்கள் கலந்து கொண்டதை யாவரும் அறிவர். ஆனால் மக்களின், ஒரு குறிப்பிட்ட சமூகப்பிரிவின் பெரும் பான்மையோர் இப்படி இப்புண் ணியத் திருப்போரில் பங்கேற்றது ஒரு திருப்புமுனையாகக் கருதப் படவேண்டும். குலசேகரப்பட்டினம் உப்பள அதிகாரி லோன் துரையைக் குறிவைத்துக் கொன்ற விடுதலை இயக்கத் தொண்டர்களின் வீரமும் தீரமும் இந்தப் பகுதியில் விடுதலை முழக்கம் வேகமாய் பரவ ஒரு காரணமாகவும் அமைந்திருக்கிறது. செந்தில் பண்ணையார் (இவர்தான் திருச்செந்தூர் கோயில் கோபுரத்தில் மூவர்ணக் கொடி கட்டியவர்) பொன்னையா பண்ணையார். மாரிமுத்துப் பண்ணையார். அண்ணாவிப் பண்ணையார், சுப்பையா பண்ணையார். நடராஜ் பண்ணையார், சுப்பம்மாள், செல்வ நாயகம் மற்றும் ஏராளமான தேசத் தொண்டாற்றிய தியாகிககள் அறப்போரில் இறங்கியதற்காக பெல்லாரி (கர்நாடகா). அலிப்புரம் (மேற்குவங்கம்), சென்னை போன்ற பல இடங்களில் சிறைவாசமும், சித்ரவதைகளும் அனுபவித்துள்ளனர் என்பது இப்பகுதி மக்களைச் சந்தித்த நேரடிக் களப்பணியின் போது நமக்குத் தெரியவருகிறது.
கதரும், உப்பும் தூய்மையின் சின்னம், எளிமையின் அடையாளம், சக்தியும், மூச்சும், புத்துணர்வும் அளிக்கும் சாதனங்கள். மனித நெறிகளைப் போற்றி வளர்க்கும் மகத்துவமான அன்பின் வெளிப் பாடுகள். ஆன்மசுத்தி பெறச்செய்யும் அற்புத வழிகாட்டலாகும். அதனால் தான் தேச பக்தியும் தெய்வபக்தியும் இணையப் பெற்ற வகையில் இப்பகுதியின் மக்கள் தம்மை முழுமையாக அர்ப்பணித்துள்ளனர்.
விடுதலைப்போரில் தாமிரபரணி கரையில் உள்ள திருவைகுண்டம் பஞ்சாயத்து மிக முக்கியத்துவம் அளித்துள்ளது.
பத்தொன்பதாம் நூற்றாண்டில் உள்ளூராட்சி முறை நிர்வாகம் ஆங்கிலேயர்களால் அறிமுகப்படுத்தப்பட்ட போது. முதன்முதலாய் உருவாக்கப்பட்ட பஞ்சாயத்துகளில் திருவைகுண்டம் பஞ்சாயத்தும் ஒன்று. இந்திய தேசிய காங்கிரஸ் தோன்றிய 1885ஆம் ஆண்டுதான் திருவைகுண்டம் பஞ்சாயத்தும் தோன்றியது.
1927ல் மகாத்மாகாந்தி திருவைகுண் டத்திற்கு வந்திருக் கிறார். அப்போது அவரை வரவேற்று வாழ்த்துமடல் வாசித்து பணமுடிப்பும் கொடுத்து மகிழ்ந்துள் ளது திருவைகுண்டம் பஞ்சாயத்து. 1931ல் பண்டித ஜவகர்லால் நேரு இங்கு வந்த போதும், 1934ல் மீண்டும் மகாத்மா காந்தி இம்மண்ணில் காலடி எடுத்து வைத்த போதும் 1935ல் தீரர் சத்யமூர்த்தி இங்கு வந்தபோதும் இதமான வரவேற் பளித்து, தமது தேசப்பற்றை வெளிப் படுத்தியது நமக்குத் தெரிய வருகிறது. ஆஷ்துரை மறைவிற்கு இரங்கல் தீர்மானம் (21.06.1911) போட்ட திருவைகுண்டம் பஞ்சாயத்து கமலா நேருவின் மறைவின் (29.02.1936) போதும் இரங்கல் தீர்மானம் நிறைவேற்றியிருப்பது மூலம் அதன் சுதந்திர வேட்கையைப் புரிந்து கொள்ள முடிகிறது.
பிரிட்டீஷ் அரசின் யூனியன் ஜாக் கொடிகள்தான் அரசு. அலுவலகங் களிலும், பஞ்சாயத்து மற்றும் நகரசபை அலுவலகங்களிலும் பறக்க விடப்படவேண்டும் என்பது அப்போதைய நியதி. ஆனால் சென்னை மாகாண அமைச்சரவை பதவியேற்ற பின்பு திருவைகுண்டம் பஞ்சாயத்தில் 30.09.1937க்குப் பின்பு தேசிய மூவர்ணக் கொடியே ஏற்றப்படும் எனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு. அதனைச் செயல் படுத்தியும் வந்துள்ளனர். அதே போல 1937க்குப் பின்பு பஞ்சாயத்தின் கூட்ட நடவடிக்கைகள் பற்றிய பதிவேடு (மினிட்புத்தகம்) தமிழில் எழுதப்படும் முறையும் பின்பற்றப் பட்டது. 1937க்கு முன்பு ஆங்கில மொழியில்தான் பதிவேடுகள் பராமரிக் கப்படவேண்டும் என்பது விதியாகும்.இதன்மூலம் பஞ்சாயத்தின் தேசப்பற்றும். விடுதலை வேட்கையில் அதற்கு இருந்த துணிச்சலும் பற்றி நன்கு புரிந்து கொள்ள முடிகிறது.
1939ல் பூரண மதுவிலக்கையும் ஆலயப் பிரவேசத்தையும் உடனே அமுல்படுத்தவேண்டும் எனவும். பஞ்சாயத்து அலுவலர்கள் அனைவரும் கதர் அணிய வேண்டும் என்றும் தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டுள்ளன.
இந்த வேளையில் பெல்லாரி மத்திய சிறை பற்றி பேச வேண்டும். சிறையில் நுழைந்தவுடன் கைதிகளின் உடைமைகள் பறிக்கப்பட்டு, பண்டாரங்கள் போன்று இரு கோவணங்கள். இரண்டு சிறையில் நெய்யப்பட்ட முரட்டு முண்டாத்துணி பனியன்கள், உள்ளாடை போன்ற இரு முரட்டு அரைக்கால் டிராயரும், இரு முரட்டுக் குல்லாய்களும் ஒரு காடாத்துண்டும். சாப்பிடுவதற்கு ஒரு வளைந்து நெளிந்த அலுமினியத் தட்டும். குவளையும், படுப்பதற்கு சாக்குப் பாயும், மூடிக்கொள்ள குடுகுடுப்பைக்காரன் வைத்திருப்பது போன்ற முரட்டுக் கம்பளியும் கொடுக்கப்பட்டன.
நான்கு நபர்கள் கொண்ட குழுவாக உட்கார வைக்கப்பட்டு, சிறைக்காப்பாளர்களால் ஆடு மாடுகள் போன்று எண்ணப்பட்டு தட்டுமுட்டுச் சாமான்களோடு அழைத்துச் செல்லப்பட்டு குவாரண்டைனுக்குள் தள்ளப்படுவர்.
பெல்லாரி மத்திய சிறையின் முகப்பில் அமைந்துள்ளது குவாரண்டைன். மூன்று புறம் இருபதடி அகலத்திற்கும் முன்பக்கத்தில் சுமார் பதினைந்து அடி உயரத்துக்கு இரயில்வே நிலையங்களில் போடப்பட்டிருப்பது போன்ற பலமான இரும்பு கம்பிகள் போடப்பட்டிருக்கும். இதில் இரும்புக் கிராதி வாசல் உண்டு. இங்கு சுமார் நூற்றிஐம்பது தனித்தனி அறைகள் இருந்தன. இவை ஆறு பெரும் பிளாக்குகளாக இருந்தன. ஒவ்வொரு பிளாக்கிலும் இருபத்தைந்து அறைகள் இருந்தன. ஒவ்வொரு கைதிக்கும் ஒரு அறை கொடுக்கப்பட்டது.
மாலை ஐந்து அல்லது ஐந்தரை மணிக்குள் எல்லோரையும் அவரவர் அறையில் பூட்டிவிட்டு, பின்னர்
ஒவ்வொருவரும் இருக்கிறாரா என எண்ணிப்பார்த்துவிட்டு பதிவு நோட்டில் கையெழுத்திட்டு இரவில் பாதுகாக்கும் பொறுப்பை அவரும் அவரது சகாக்களும் ஏற்றுக் கொள்வார்கள். காலை ஆறு மணிக்கு மீண்டும் திறந்து விடுவார்கள்.
காலையில் கழிப்பறை சென்ற பின். தண்ணீர்த் தொட்டி சென்று குச்சியோ, மண்ணோ, செங்கலோ கரியோ வைத்து பல்துலக்கிவிட்டு வரவேண்டும். அலுமினியக் குவளையில் அரைக்குவளை கஞ்சி கொடுப்பார்கள். கஞ்சி என்பது வடித்த கஞ்சியில் சாதம் கலந்திருக்கும். சிறிது உப்புப் போட்டிருப்பார்கள். துவரம் பருப்புத் துவையலும் ஒன்றிரண்டாக அரைத்தது தருவார்கள். சாப்பிட்ட பின் இராட்டினமும், ஆட்டுரோமமும் வைத்திருப்பார்கள். ஆட்டுரோமத்தை நூலாக்க வேண்டும் என்பது விதி.
சிறைக்குள் இதற்காக ஒரு தொழிற்சாலை இருந்தது. சென்னை மாகாணத்திலுள்ள எல்லா சிறைகளுக்கும். காவலர். காப்பாளர் போன்ற அனைத்து ஊழியர்களுக்கும் இங்கு நெய்த கம்பளிப்போர்வைகள்தான் அளிக்கப்பட்டன.
சிறைகளிலேயே அதிகத் தொந்தரவு கொடுக்கும் கைதிகளை அடக்குவதற்கான சிறை என்று பெயர் பெற்றது இந்தச் சிறை.
சிறையின் முன்தாழ்வாரத்திலிருந்து வேலை செய்தால் போதும். தொழிற்சாலைக்குள் செல்ல கைதிகளைஇ னுமதிக்கமாட்டார்கள். காரணம் கலவரமோ அல்லது கைதிகளை தூண்டி விடவோ செய்வார்கள் எனப்பயந்து உள்ளே அனுமதிப்பதில்லை. உயர் அதிகாரிகள் பார்வையிட வரும்பொழுது நூல்நூற்றதாக நடிக்க வேண்டும்.
மதியம் பன்னிரண்டு மணிக்கு ஒரு கட்டு சாதமும். கீரை அல்லது முள்ளங்கி சாம்பாரும். இரண்டு அவுன்ஸ் மோரும் கொடுப்பார்கள். சாம்பாரில் பருப்பு மிகக்குறைந்தளவு தான் சேர்த்திருப்பார்கள் முற்றிய கீரைத்தண்டும், முள்ளங்கித் தண்டும் சாம்பாரில் காணப்படும்.
(நதி வற்றாமல் ஓடும்)


