1994- ஆம் ஆண்டு காரையாறில் வாழ்ந்த அன்னம்மாள் என்னும் 98 வயது பாட்டி மஞ்சள் காமாலை நோய்க்கு மருந்து கொடுத்துக் கொண்டிருந்தார் என கடந்த பகுதியில் கூறியிருந்தோம். மஞ்சள் காமாலை நோயைக் குணப்படுத்தப் பிரசித்தி பெற்ற இந்தப் பாட்டி, தற்போது உயிரோடு இல்லை. மஞ்சள் காமாலைக்கு இவரது வாரிசுகள் மருந்து கொடுத்து வருகின்றனர். அன்னம்மாள் பாட்டி கொடுக்கும் மூலிகையைச் சாப்பிட்டு விட்டு தாமிரபரணியில் முட்டளவு தண்ணீரில் நின்று தண்ணீரைக் குடித்தால் போதும் உடனே மஞ்சள் காமாலை நோய் பறந்து விடுகிறது. இதுபோன்ற அற்புதம் தாமிரபரணி தோன்றும் பொதிகை மலையில் மட்டுமே உண்டு.
அன்னம்மாள் பாட்டியை பொறுத்தவரை மேலணை கட்டும் பணி நடைபெறும் போது இலங்கையில் இருந்து தேயிலை தோட்ட வேலைக்கு காரையாறு வந்துள்ளார். இவரை போல பல குடும்பங்கள் இங்கு வந்துள்ளனர். குறிப்பாக தாமிரபரணிக்கு பழைய பெயர் பொருநை என்பது இலக்கியங்கள் மூலமாக நாம் அறியலாம். ஆனால் தாமிரபரணி என்ற பெயர் எப்போது வந்தது எப்படி வந்தது என ஆய்வு செய்யும் போது கால்டுவெல் அவர்கள் கூறிய சான்றுகளை எடுத்துக்கொள்ளலாம் . இலங்கையில் உள்ள தீவு ஒன்றுக்கு தாமிரபரணி என்று பெயர் உண்டு என்றும் அந்த தீவில் இருந்து இங்கு குடிவந்தவர்கள், இந்த நதிக்கு அந்த தீவின் பெயரையே வைத்து விட்டனர் என்கிறார். அது ஒரு புறம் இருக்கட்டும். தாமிரபரணியே ஒரு காலத்தில் இலங்கை வரை பாய்ந்தோடி உள்ளது. பிற்காலத்தில் கடற்கோள் ஏற்பட்டு தனது ஓட்டத்தினை புன்னக்காயலுடன் நிறுத்தி விட்டது. எனவேதான் தாமிரபரணி என்ற பெயர் தற்போது விளங்கி வருகிறது என்போரும் உண்டு. இலங்கையில் இருந்து ஏராளமானவர்கள் தோட்ட வேலைக்கு இங்கே வந்துள்ளார்கள். அன்னமாள் பாட்டி பாபநாசம் மேலணை கட்டும் போது இங்கு வாழ்ந்துள்ளார். அப்போது இவர் ஆங்கிலேய அதிகாரிகளோடு நட்புடன் இருந்துள்ளார். எனவே காரையாறு பகுதியில் அன்னம்மாள்பாட்டிக்கு நல்ல செல்வாக்கு. இவர் வைத்தது தான் சட்டம் என்று கூட சொல்லலாம். அந்த அளவுககு அதிகாரிகளை தன் வசம் வைத்துள்ளார். அதோடு மட்டுமல்லாமல் மஞ்சள் காமாலை நோய் தீர்க்கும் மிக பெரிய ஆளுமையும் இவரே.
இதற்கிடையில் பாட்டியை நட்புகாரணமாக வெளிநாடுகளுக்கு கப்பலில் ஆங்கிலேயர்கள் அழைத்து சென்றதாக என்னிடம் (1994) பாட்டி கூறினார். நாங்கள் அன்னம்மாள் பாட்டியை சந்தித்த போதே அவருக்கு வயதாகி விட்டது. முகத்தில் சுருக்கு விழுந்த நிலையில் கூட மிக மலர்ந்த சிரிப்போடு அவர் மருந்து தரும் விதமே ஆனந்தமாக இருக்கும். தடுமாற்றம் இல்லாமல் மஞ்சள் காமாலைக்கு மருந்து கொடுத்து வந்தார்.
அந்த காலத்தில் காரையாறு செல்லும் பேருந்து அன்னம்மாள் பாட்டி மருத்துவத்தினை நம்பியே இயங்கியது என்று கூறலாம். பேருந்தில் மஞ்சள் காமாலை நோயாளிகளை ஏற்றிகொண்டு காரையாற்றில் இறக்கி விடுவார்கள். அதன் பின் பாட்டி மருத்துவம் முடியும் வரை காத்திருந்து நோயாளிகளை கீழே கூட்டி வருவார்கள் பேருந்து ஓட்டுனர் மற்றும் நடத்துனர்கள்.
சொரி முத்து அய்யனார் கோயில் விழாக்காலங்களை தவிர மற்ற காலங்களில் அன்னம்மாள் பாட்டியை பார்க்க வரும் கூட்டமே அதிகமாக பேருந்தில் வந்து செல்லுவார்கள். இது ஒரு புறம் இருக்க, அந்த காலத்தில் பேருந்து செல்லும் போதே இருபுறமும் ஓடிச்செல்லும் புள்ளிமான்களும், மற்ற மான் இனங்களை மக்கள் கண்டு கழிக்கலாம். .இடத்துக்கு இடம் தனித்தனி ரகமாக விளையாடிக்கொண்டிருக்கும் குரங்கு இனங்களும் நம்மை ஆச்சரியத்தில் வீழ்த்தி விடும். பொதிகை மலையில் தான் ஐந்து வகையான குரங்கு இனங்கள் உள்ளன. அதை பற்றி தனியாக பேசுவோம்.
அதுபோலவே சொரி முத்து அய்யனார் கோயிலைபற்றி மட்டும் தனியாக பேசவேண்டும் .அதற்கு முன்பு அங்குள்ள அதிசயமான ஒரு மரத்தினை பற்றி உங்களிடம் கூறி விடுகிறேன். அந்த மரத்துக்கு பெயர் மணி விழுங்கி மரம்.
“அட. என்ன மணி விழுங்கி மரமா? அப்படி ஒரு மர இனம் உள்ளதா?” உங்கள் கேள்வி புரிகிறது.
நீங்கள் நம்ம வேண்டும் என்பதற்காகவே அந்த மரத்தினை இந்த பக்கத்தில் படமாக பதிவு செய்துள்ளேன்.
சொரிமுத்து அய்யனார் கோயிலில் பிரம்ம ராட்சசி அம்மன் கோயில் பின்புறம் தாமிரபரணி ஆற்று நீரோட்டத்தில் அருமையாக மரமாக உள்ளது. இந்த மரத்தில் தங்களது நேர்ச்சைகளை நிறைவேற்றி தரவேண்டும், என பக்தர்கள் மணிகளை கட்டி செல்வார்கள். மறு வருடம் வந்து பார்த்தால் அந்த மரத்தில் உள்ள மணிகள் அப்படியே மரம் விழுங்கி விடும். என்ன ஆச்சரியம். மரத்திற்கு அப்படி ஒரு பசியா என நீங்கள் கேட்பது தெரிகிறது. ஆனால் அது உண்மையிலும் உண்மை. நான் சென்று பார்க்கும் போதெல்லாம் அதுபோலவே மணியை விழுங்கி உள்ளது இந்த மரம்.
இயற்கை அதிசயம் பல பொதிகையில் இருந்தாலும் செயற்கை அதிசயங்களும் உண்டு. 1992 ல் புயல் வெள்ளம் ஏற்பட்ட போது பல பழமையான மரங்கள் சரிந்தன. அவை ஆற்று வெள்ளத்தில் இழுத்து வரப்பட்டன. மரங்களின் இடிபாடுகளுக்குள் சிக்கி சேர்வலாற்றில் கட்டப்பட்ட பாலம் ஒன்று இடிந்து விழுந்து விட்டது. உடனே மாற்றும் பாலம் கட்ட முடியவில்லை. எனவே அந்த இடத்தில் தற்காலிக இரும்பு பாலம் போடப்பட்டது. அந்த இரும்பு பாலம் மிகப்பிரமாண்டமாக 30 வருடங்களை தாண்டியும் கம்பீரமாக உள்ளது. தற்போது அரசு புதிய பாலம் கட்டினாலும் பயணிகள் இந்த பாலத்தின் வழியாக பயணிக்கவே விரும்புகிறார்கள்.
இதுபோன்ற பல அற்புதங்கள் சொரிமுத்து அய்யன்கோயிலில் உள்ளன.
இங்கு வாழும் காணி இன மக்கள் மிகவும் விசேஷமானவர்கள். காணி இனத்தினர் பொதிகை மலை உச்சி மீது ஏறுவதே கிடையாது. அதை சிவன் மலை என போற்றி இறைவனாகவே வழிபடுகின்றனர். இயற்கையை போற்றுவார்கள். இடங்களை பேணுவார்கள். காட்டை நேசிப்பார்கள். மிருகங்களை துன்புறுத்த மாட்டார்கள், பொதிகை மலையில் காணி இனத்தவர்கள். தற்போது காணி இனத்தினை சேர்ந்தவர்கள் வனதடுப்பு காவலராக தமிழக வனத்துறை நியமித்து உள்ளார்கள். இவர்களுக்கு மட்டுமே காட்டில் உள்ள எல்லா இடமும் தெரியும் என்பதாலும், இவர்களுக்கு அரசு வேலை கொடுத்து இவர்கள் வாழ்வாதாரத்தினை மீட்க வேண்டும் என்பதற்காகவும் அரசு இதுபோன்ற உதவிகளை செய்து வருகிறது.
சமீப காலங்களில் கூட காணி இனமக்களை பற்றி அறிந்தவர்கள் அதிகமானவர் நெல்லை மாவட்டத்தில் கூட இல்லை. அவர்களை பற்றி உலகிற்கே காட்ட வேண்டும் என நெல்லை மாவட்ட ஆட்சி தலைவர் விஷ்ணு அவர்கள் பொதிகை மலை காணி என்னும் ஆவணப்படம் ஒன்றை தயாரித்து அதை நெல்லை புத்தக கண்காட்சியில் தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி, தமிழ் வளர்ச்சி துறை தமிழக அமைச்சர் தங்கம் தென்னரசு ஆகியோர் மூலமாக வெளியிட்டார்.
அதோடு மட்டுமல்லாமல் யூ டியூப் உள்பட சமூக வலைதளத்தில் இந்த படங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டது. தற்போது இதை உலக தமிழர்கள் மட்டுமல்லாமல் பலரும் பார்த்து மகிழுகிறார்கள.
காணி இன மக்களின் வாழ்க்கை முறை இந்த வீடியோ பார்ப்பவர்களுக்கு புரிய ஆரம்பித்தது.
திருநெல்வேலி மாவட்ட கலை மன்றம் மூலமாக இந்த படம் எடுக்கப்பட்டிருந்தது. அந்த படத்தினை பார்க்கும்போதே தாமிரபரணி நதியின் காடுகள் , மலைகள், அருவிகள் காணிகளின் வாழ்க்கைகள் மிக பிரமாண்டமாகப் படமாக்கப்பட்டிருந்தது. அவர்கள் மரம் ஏறும் காட்சி, மற்றும் அவர்கள் தாவிகுதித்து செல்லும் அழகு, பலாப்பழத்தினை சுமந்தபடியே மர பாலங்களின் நடந்து செல்லும் காட்சி என அனைத்து பிரமாண்டப்படுத்தப்பட்டிருந்து.
காணி மக்கள் பொதிகைமலையின் பூர்வகுடிகள், அருவி களை கடந்து, தண்ணீர் தடாகங்களை தாவி குதித்து அவர்களின் மரபு, விளைநிலம், நடை உடை பாவனை தேடல் என இந்த படத்தில் பிரமாண்டம் காட்டியிருந்தார்கள்.
இந்த படப்பிடிப்பு குழுவினரை பாராட்டியே தீரவேண்டும். இயற்கையோடு இயற்கையாக நாடோடியாக வாழ்ந்த மக்களை ஒரிடத்தில் தற்போது அரசு குடி வைத்திருக்கிறார்கள். இவர்களின் இயற்கையான மண் செங்கல் மூலமாக கட்டப்பட்ட வீடுகள் எல்லாமே நம்மை பிரமிக்க வைக்கிறது.
இயற்கை தென்னம் ஓலை கீற்றில் வீடுகளுக்கு கூரை அமைத்து ரம்மியமாக வாழ்ந்து வருகிறார்கள். அதை காணும் போது நமக்கு சிலிர்ப்புதான்.
இவர்களின் தலைவர் வேல்சாமி கூறும் போது காடு, மரம், நதி எங்களது வாழ்வாதாரம் என்பார்.
படத்தினை பார்க்க பார்க்க நமக்கு வியப்பு தோன்றும். வாணதீர்த்தம் விழும் காட்சியையும், மேலணையையும் பல்வேறு கோணத்தில் காட்டியிருப்பார்கள். வானத்தில் இருந்து கழுகு பார்வையில் தேவலோகம் போலவே காட்சியளிக்கும் இவ்விடம். தாமிரபரணி கரையில் இப்படி ஒரு அழகா என ஆச்சரியப்பட வைக்கிறது.
எங்களை போன்றோர் பல முறை பொதிகை மலைக்கு சென்று இரவு பகலாக தங்கி, அங்கு பார்த்து ரசித்து எழுதினாலும்கூட இதுபோன்று பதிவு செய்து இருக்கமுடியாது. இந்த வீடியோவில் பார்க்கும் போது புதிய வனப்பை காட்டுகிறாள் இயற்கை அன்னை.
என்னை பார் என் அழகை பார் என தோரண கட்டி ஒய்யாரமாய் ஓடி வருகிறாள் எம் தாமிரபரணி தாய்.
இவர்களை எல்லாம் நேசிக்கும் காணிகளின் இயற்கை முகத்தினை பார்க்கும் போது, கூடுதல் கொள்ளை அழகு. கண்டிப்பாக தாமிரபரணியை நேகிக்கும் ஒவ்வொருவரும் இந்த வீடியோவை காணவேண்டும்.
இந்தவீடியோவில் மொத்தம் ஐந்து பாகம் உள்ளது. முதல் பாகம் காணி மக்களின் இயற்கையோடு இயந்த வாழ்வு, இரண்டாம் பாகம் காணி இன மக்களின் திருவிழா மற்றும் சடங்குகள், மூன்றாவது பாகம் காணி இன மக்களின் பாரம்பரியமும் சமூக நடை முறைகளும், நான்காவது பாகம் காணி இன மக்களின உணவு மற்றும் வாழ்வு முறைகள், ஐந்தாவது பாகம் காணி மக்களின் தொழில் மற்றும் கல்வி .
முதல் பாகத்தில் 150 அடிஉயரத்தில் உள்ள மரத்தில் ஏறி தேனெடுக்கும் காணிகள், மரம் விட்டு மரம் தாவும் காணி மக்கள் . காட்டுக்குள் செல்லும் அவர்கள், மிருகங்களின் மணம், தடம், சத்தம் அவை விட்டு சென்ற எச்சம் இதைகொண்டு எந்த மிருகம் எந்த பக்கம் செல்கிறது என மிக துல்லியமாக கண்டுபிடிக்கும் தன்மை என காட்டியிருக்கிறார்கள்.
வனவிலங்கை துன்புறுத்த கூடாது என்பதில் கவனமாய் இருந்து காட்டுக்கும் வன விலங்குகளுக்கும், காணிகளுக்கும் பாதுகாப்பாக இருக்கிறார்கள்
என்னே பொதிகை மலையின் வியப்பு, ஆச்சர்யம்.
அவர்கள் வணங்கும் குலதெய்வமும் இயற்கை சார்ந்தே இருக்கிறது.
தொடர்ந்து மற்ற நான்கு பாகங்களையும் காணவேண்டும். நல்லதொரு காட்சி வீடியோவை தாமிரபரணி பழங்குடியினருக்கு தந்த மாவட்ட ஆட்சி தலைவர் விஷ்ணு அவர்களுக்கு மீண்டும் ஒரு சல்யூட்
(பொருநை ரகசியத்தினை தேடி பயணிப்போம்)


