தூத்துக்குடியில் கோடை கால விளையாட்டு பயிற்சி நிறைவு விழாவில் அமைச்சர் கீதாஜீவன் கலந்து கொண்டு விளையாட்டு வீரர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார்.
தூத்துக்குடி தருவை மைதானத்தில் கோடை கால விளையாட்டு பயிற்சி நிறைவு விழாவில் சமூக நலன் – மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பெ.கீதாஜீவன், விளையாட்டு வீரர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களை இன்று (11.06.2022) வழங்கினார். மாவட்ட ஆட்சியர் மரு.கி.செந்தில்ராஜ், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன்பெரியசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சியில் அமைச்சர் பேசியதாவது: மாணவர்கள் பயிற்சி பெறுவதற்காக மாநில அளவில் நடைபெற்றாலும் தூத்துக்குடி மாவட்டத்தில்தான் விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், மாவட்ட டென்னிஸ் பந்து கிரிக்கெட் சங்கம் இணைந்து இந்த நிகழ்ச்சியை நடத்துகிறது. தமிழ்நாடு முதலமைச்சர் எதிர்கால சந்ததியினரை உயர்நிலைக்கு கொண்டு செல்வதற்காக அவர்களுக்கு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள். இன்று நடைபெறும் பயிற்சிக்கு 238 பேர் வந்திருக்கிறார்கள். பயிற்சி முறையாக நடந்தால்தான் தொடர்ச்சியாக வருவார்கள்.
நல்ல முறையில் ஏற்பாடு செய்த விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், மாவட்ட டென்னிஸ் பந்து கிரிக்கெட் சங்கத்திற்கு பாராட்டுகள். இதுபோன்ற பயிற்சிகள் விளையாட்டு மாணவர்களுக்கு நல்ல ஊக்கத்தை தரும். ஒருங்கிணைந்து செயல்படக்கூடிய உணர்வு உருவாகும். தளராத முயற்சி, பயிற்சி மற்றும் உழைப்பினால் வெற்றி பெற முடியும் என்ற எண்ணத்தை மனதில் பதிவு செய்யும். கற்க கசடற என்பதற்கேற்ப படிக்க வேண்டும். மதிப்பெண்ணுக்காக மட்டும் படிக்காதீர்கள் அறிவாற்றலை வளர்க்கக்கூடியதுதான் கல்வி. புத்தகத்தில் உள்ள தகவல்களை குற்றமற கற்க வேண்டும் என்ற எண்ணத்தை வளர்த்துக்கொள்ள வேண்டும்.
பீச் வாலிபால், பீச் புட்பால், பீச் கபாடி போட்டிகள் நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். ஒவ்வொரு சட்டமன்ற தொகுதியிலும் மினி ஸ்டேடியம் அமைக்க தமிழக முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். கோவில்பட்டியில் நடைபெற்ற ஹாக்கி போட்டியில் எல்லா மாநிலத்த்pலும் இருந்து வந்தார்கள். சோர்வு அடையவில்லை. எனவே நம்முடைய மாணவர்களும் முட்டை, பால், தானிய வகைகள் உள்ளிட்ட சத்தான உணவுகள் சாப்பிட்டால்தான் நன்றாக விளையாட முடியும் என பேசினார். நிகழ்ச்சியில் மாவட்ட விளையாட்டு அலுவலர் பேட்ரிக், வட்டாட்சியர் செல்வக்குமார் மற்றும் அலுவலர்கள், விளையாட்டு வீரர்கள் கலந்துகொண்டனர்.


