தூத்துக்குடி மாவட்டத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பனங்கிழங்குகள் அறுவடை தீவிரமாக நடைபெற்று வருகிறது.
தமிழர் திருநாளாம் தைப்பொங்கலுக்கு சில நாட்களே உள்ள நிலையில் பொதுமக்கள் விவசாயிகள் என அனைவரும் கொண்டாடுவதற்கு தயாராகி வருகின்றனர். தூத்துக்குடி மாவட்டத்தில் மானாவாரி விவசாயம் பிரதானமாக நடைபெற்று வருகிறது. பயிறுவகைகள், சிறுதானியங்கள், பணப் பயிர்கள், எண்னை வித்துக்கள் என பயிரிட்டு உள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் உடன்குடி, திருச்செந்தூர், கோவில்பட்டி அருகே காமநாயக்கன்பட்டி, வெங்கடாசலபுரம், கருப்பூர், அயன்வடமலாபுரம், வேடப்பட்டி, குளத்தூர், பெரிய சாமிபுரம், பனையடிப்பட்டி ஆகிய கிராமங்களில் லட்சக்க ணக்கான பனைமரங்கள் உள்ளன. இதனை நம்பி ஆயிரக்கணக்கான குடும்பங்கள் உள்ளன. இதன் பதநீர் காலம் மாசி மாதம் முதல் ஆடிமாதம் வரையாகும்.
நுங்கு அதன்பின் பழமாகிறது. உதிர்ந்த பனம்பழ பனை விதைகளை நிலத்திற்கடியில் தோண்டி புதைத்து மண்ணால் மூடிவிடுவார்கள். மழைக்காலத்தில் முளைத்து கிழங்காக உருவெடுக்கும். தைப்பொங்கலுக்கு பாரம்பரிய உணவுடன் பனங்கிழங்கு இடம்பெறுகிறது. தற்போது பொங்கலுக்கு விற்பனை செய்ய பனங்கிழங்குகள் அறுவடை தீவிரமாக நடைபெற்று வருகிறது.
குளத்தூர், தாப்பாத்தி, முத்துலாபுரம், அயன்வடமலாபுரம், வேம்பார், விளாத்திகுளம் பகுதிகளில் பொதுமக்கள் மட்டுமின்றி வியாபாரிகளும் கிழங்குகள் வாங்கிச் செல்கின்றனர். 25 கிழங்குகள் கொண்ட ஒரு கட்டு ரூ.100 முதல் 150 வரை விற்பனை செய்யப்படுகிறது. தற்போது விளைச்சலும் அதிகமுள்ளதால் பனை தொழிலாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


