தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள செய்துங்கநல்லூரில் சிவகாமி அம்பாள் சமேத பதஞ்சலி வியாக்ரபாதீஸ்வரர் கோவில் உள்ளது. மிகவும் பழமையான இந்த கோவிலை தென்னகத்து தில்லை என்றும், திருவண்ணாமலையை போல கார்த்திகை திருவிழா நடைபெறுவதால் தென்னக திருவண்ணாமலை என்றும், வடமுகமாக வாய்க்கால் -ஓடுவதால் தட்சண காசி என்றும். திருவரங்கம் கோயில் உள்ள காரத்தினால் தென் திருவரங்கம் எனவும் போற்றப்படுகிறது. இந்த ஆலயத்தில் சிதம்பரத்தினை போலவே மார்கழி மாத ஆருத்ரா தரிசன திருவிழா 10 நாள்கள் நடைபெறுகிறது. முதல் நாள் கொடிபட்டம் செய்துங்கநல்லூர் பஜாரில் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது. இரண்டாம் நாள் அதிகாலை காலை 5 மணிக்கு நடைதிறக்கப்பட்டது. சுவாமி அம்பாளுக்கு சிறப்பு அபிசேகம் அலங்காரம் நடந்தது. அதைத் தொடர்ந்து கொடிமரத்திற்கும் நந்தி பகவானுக்கும் பால், தயிர், இளநீர், சந்தனம் உள்பட 16 வகையான திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடந்தது. அதன்பின்னர் சிறப்பு தீபாராதனை நடந்தது. தொடர்ந்து அலங்காரம் மற்றும் ஆராதனை நடந்தது.

தொடர்ந்து கொடியேற்றம் நடந்தது. இந்த நிகழ்ச்சியில் பெருங்குளம் செங்கோல் மடம் 103 வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ சிவப்பிரகாச தேசிக சத்திய ஞான பரமாச்சாரிய சுவாமிகள் கலந்து கொண்டார். பக்தர்களுக்கு அருளாசி வழங்கினார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். மூன்றாம் நாள் 1008 சங்காபிசேகம் நடந்தது. இந்த நிகழ்ச்சியில் திருக்கயிலாய பரம்பரை வேளாக்குறிச்சி ஆதினம் 18 வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ சத்தியஞா£ன மகாதேவ தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் எழுந்தருளி அருளாசி வழங்கினார்.
வருகிற 13 ந்தேதி வரை தினமும் காலையும் மாலையும் யாகசாலை பூஜைகள் நடந்து வருகின்றனர்.
சனிக்கிழமை நடந்த விழாவில் நடராஜர் பச்சை சாத்தி பஞ்சவாத்தியம் முழங்க ஊர்வலம் வந்தார். சிவன் கோயிலில் இருந்து துவங்கிய இந்த -ஊர்வலம், அன்னதான சத்திரம், மெயின்ரோடு, கோயில்பத்து மற்றும் முக்கிய வீதிகள் வழியாக கோயிலை வந்தடைந்தது. அதன் பின்பு சிறப்பு பூஜைகள் நடந்தது. இந்த நிகழ்ச்சியில் அறங்காவலர் மாரியப்பன், வி.கோவில்பத்து, செய்துங்கநல்லூர் சிவகாமி சமேத பதஞ்சலி வியாக்கிரபாதீஸ்வரர் ஆன்மிக பேரரரவையினர் உடன் வந்தனர்.
விழாவின் சிகர நிகழ்ச்சியான ஆருத்ரா தரிசனம் நாளை 13 ஆம் தேதி அதிகாலையில் நடைபெற உள்ளது. அர்ச்சகர்கள் வெங்கடாசலம் வாத்தியார், முத்துரராமன், பாலசுப்பிரமணியன் தலைமையில் இதற்கான பூஜைகள் நடந்து வருகிறது.


